பேசும் பக்கங்கள் – 001 – ரூமி
ரூமியின் கவிதைகள் வார்த்தைகளால் ஆன பெரும் போதை. சரியாக அளவாக உள் வாங்கினால் சில மணி நேர மயக்கம். அதிகமாய் உள் வாங்கினால் நாட்கணக்கில் மயக்கம். கூட வைத்து கொண்டே பயணித்தால், parallel track இல் mind கனவு உலகம் ஒன்றில் பயணித்து கொண்டே இருக்கும் !
” அந்த இருத்தல் அன்றி
இந்த இருப்பு
வெறுமையே ! ”
உள்ளே ஏதோ செய்யும் வரிகள். அந்த இருத்தல் என்ன என்பதை இதற்கு முன் வரிகளில் படிக்கும்போது … இந்த வரிகளின் வீச்சு உள்ளே ஐஸ் கத்தியாய் வலியே இல்லாமல் இறங்கும்.
” தாகங்கொண்ட மீனொன்று
என்னுள் இருக்கிறது
ஒருபோதும் கூடவில்லை அதற்கு
முழுத்தாகமும் தணிக்க ”
தாகம் கொண்ட மீன் … என்ன ஒரு வரி ! நீரில் இருக்கும் மீனிற்கு தாகம் எடுக்காது என்று நாம் நினைக்கிறோம். அதற்கும் தாகம் உண்டு. அது நீர்த்தாகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாகங்கொண்ட மீனொன்று … என்ற இரு வார்த்தைகள் எனக்குள் ஏற்படுத்தி இருக்கும் தாகத்தை தீர்க்க என் மன மகிழ்வில் பங்கு கொள்ளும் ஒரு துணையால் மட்டுமே முடியும். அந்த துணை ஆன்மாவின் பயணத்தில் வரும் துணையாக மட்டுமே இருக்க முடியும். அப்படி ஒரு துணையாய் இந்த புத்தகம் நிற்பதே அதன் பலம்.
மற்றவர்கள் எழுதுகிறார்கள். ரூமி பகிர்கிறார் என்று தோன்றுகிறது.
” நிலவிற்கு வழி
சாளரமே
வாசல் அல்ல ”
என்ற ஒரு பார்வையில் ரூமி வேறு உலக பார்வையை பகிர்கிறார். நிலவின் ஒளி வெற்றிடம் இருக்கும் இடம் அனைத்திற்கும் செல்லும். ஆனாலும் நிலவிற்கு சாளர வழி தான் என்று சொல்லும்போது … நம் பார்வை ஓர் மையத்தில் குவிகிறது. அப்படி ஒரு பார்வையை இதுவரை நாம் நமக்குள் வைத்தது உண்டா ? அங்கே தான் நிற்கிறார் ரூமி !
” நீரிலிருந்து
ஈரம் பிரியுமா என்ன ? ”
என்ற ஒற்றை கேள்வி நிறைய யோசிக்க வைக்கிறது.
” நான் நீர் எனில்
என் ஈரம் எது ? ”
என்று என்னை பகிர வைக்கும் கேள்வி அது. நீங்கள் நீர் எனில் உங்களின் ஈரம் எதுவாக இருக்க கூடும் ? சொல்ல முடிகிறதா ?
ரூமி யை ஒரு கட்டுக்குள் review செய்ய முடியாது. ஏன் எனில் அவரும் ஒரு கட்டுக்குள் எழுதுவதில்லை.
” சரி தவறுக்கு
அப்பாற்பட்ட ஒரு வெளி உண்டு
அங்கு சந்திப்பேன் உன்னை ”
என்று சொல்ல எந்த கவிஞனுக்கும் தையிரியம் இல்லை. ரூமிக்கு அது நிறையவே இருக்கிறது. அப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதானால் என்னவோ .. எனக்கு ரூமி மிகவும் பிடிக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும். ஆம்.
நாம் அனைவரும் சரி தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் தானே ?





