தெரிந்ததும் தெரியாததும் 016
காலை #slogging எப்போதுமே அழகான ஒன்று. அதுவும் 04.30 மணிக்கு எழுந்து, 05 மணிக்கெல்லாம் சாலைக்கு வந்துவிடும் பட்சத்தில், 06.30 க்கெல்லாம் #10000stepslogging முடிந்து திரும்ப வரும்போது சூரிய உதய காட்சிகள் தயாராய் காத்திருக்கும்.
ஊருக்குள் பல கோவில்கள். அந்த கோவில்களில் செவ்வாய் சனி காலை மாலை என்று ஏகப்பட்ட பூஜைகள். அலை மோதும் மக்கள் கூட்டம். எல்லாம் சரி. ஊருக்கு வெளியே ஒரு கோவில் இருக்கிறதே ..அதை யாராவது கவனித்து இருக்கிறோமா ? பொதுவாக எல்லைச் சாமி, காக்கும் கடவுள், அய்யனார் என்று அழைக்கப்படும் கோவில்கள் அனைத்து ஊர்களின் வெளியேயும் அல்லது ஒவ்வொரு ஊரின் உள்ளே செல்வதற்கு முன்னேயும் இருக்கின்றன.
இந்த கோவில்களில் இருக்கும் சிலைகள் எப்போதுமே கொஞ்சம் கோரமான முகத்துடன் இருக்கும். அதாவது தீமையை எதிர்க்கும்போது சராசரி முகத்திற்கு வாய்ப்பில்லை என்பதை சொல்லாமல் சொல்லும் சிலைகள் / முகங்கள் அவை.
இந்த சிலைகளில் எப்பொதுமே ஒரு விகார அழகு இருக்கும். முகம் கோபமாக இருப்பது போல இருக்கும் இந்த சிலைகளின் பார்வை தீர்க்கமான ஒன்று. அகலமான கண்கள், பெரிய கருவிழி என்று இந்த சிலைகளின் மிரட்டல் வித்தியாசமானது. இந்த சிலைகளை யார் செய்கிறார்கள் ? யார் அவர்கள் ? இப்போது எங்கே இருக்கிறார்கள் ? சிலைகளை கும்பிடும் நாம், அந்த சிலைகளை செய்த திறமையை கும்பிடுகிறோமா என்று யோசிக்க வேண்டும்.
ஆச்சர்யமாக இந்த ஆலயங்களில் குதிரைகள் மற்றும் நாய்களின் சிலையும் .. முக்கிய இடத்தை பெறுகின்றன. அநேகமாக குதிரை பயண வாகனமாகவும், நாய் அநேகமாக தாக்கக்கூடிய விலங்காகவும் இருக்க கூடும். பெரும்பாலும் நாய்களின் முகமும் நாக்கை தொங்கபோட்டு, பற்கள் கோரமாகவே இருக்கிறது. ( சில கோவில்களில் இரத்தம் வழிய ! ). ஆக … இந்த கோவில்கள் சொல்வது நன்மையும் தீமையும் நிறைந்ததே உலகம். கடவுள் என்பவர் மக்களுடன் ஊருக்குள் இருந்தாலும், அய்யனார் போன்ற கடவுள்கள் பாதுகாக்கும் பொறுப்பை ஊருக்கு வெளியே இருந்து செயல்படுத்துவதாக தோன்றுகிறது.
பெண் சிலைகளின் முகம் இங்கே வித்தியாசமாக இருக்கிறது. கோபம் இருக்கும் eye to eye கண்களை கொண்டு அந்த பெண் சிலைகளின் முகம் பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க தோன்றுகிறது.
ஊருக்கு வெளியே இருக்கும் இந்த கோவில்கள் என்னை ஈர்த்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு கடவுளாக இந்த கோவிலின் செயல் பாதுகாப்பு என்று இருக்கலாம். ஆனால் இந்த கோவிலின் தனிமை, பெரும்பாலும் ஏதோ ஒரு பெரு மரத்தின் கிளைகளின் கீழ் அமைந்திருக்கும் அழகு, யாருமற்ற ஆனால் நிறைவாக நிற்கும் சிலைகள், கோரமான முக ஆனால் ” நான் இருக்கிறேன் கவலை வேண்டாம் ” என்று சொல்லும் சிலைகள்… என்று இந்த கோவில்களின் முகம் ஒவ்வொரு ஊருக்கும் வெளியே அவ்வளவு அழகானது. சிவன், பெருமாள், அல்லா, இயேசு .. என்று அனைத்து கோவில்களும் உள்ளே சௌகரியமாக இருக்க ஏதோ ஒரு காவல் தெய்வம் ஊருக்கு வெளியே நிற்பதை யோசிக்கும்போது .. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் தெய்வமே யதார்த்த தெய்வம் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட தெய்வங்கள் ஊருக்கு வெளியே இருப்பது ” தள்ளி வைக்கப்பட்ட ” வருத்தம் அல்ல. மக்களை காக்கும் பெருமை !
ஒவ்வொரு ஊருக்கு வெளியே இருக்கும் இந்த கோவில்களையும் இனி கவனிப்போம். அங்கே இருக்கும் சிலைகள் நம்மை காக்கும் நம்பிக்கைகள்.