இதயமும் இமயமும் 002
Tso Moriri என்று ஒரு அழகான ஏரி லடாக்கில் இருக்கிறது. அந்த ஏரி எவ்வளவு அழகோ, அதைவிட அழகு அந்த ஏரிக்கு செல்லும் google map அற்ற வழி.
இமயத்தில் இருப்பதை போல நீல வானத்தை இன்றுவரை இந்தியாவில் நான் எங்கும் கண்டதில்லை. அந்த நீல பின்புலத்தில் வெண் மேகங்கள் ஆங்காங்கே நிற்பது வாழ்நாள் முழுக்க கண் முழுக்க நிற்கும் காட்சி. இமயமலை முழுக்க இப்படி காட்சிகள் கொட்டி கிடக்கும். எடுத்த 10000 புகைப்படங்களுக்கு பின்னும் எடுக்க வேண்டிய இன்னொரு காட்சி புகைப்படமாக சிரிக்கும்.
வழி என்று ஒன்று இங்கே கிடையவே கிடையாது. ஏற்கெனவே சென்ற ஏதோ ஒரு வாகனத்தின் வழித்தடமே நமக்கான சாலை. இடையில் ஒருவேளை மழை பெய்து வழி இல்லை எனில் கண்டுபிடித்து செல்ல வேண்டியது தான். GPS கிடைக்கா சாலை வழிகளும் உண்டு. எல்லைப் பகுதிகளில் திடீரென்று paktel என்று பாகிஸ்தான் signal நம் mobile இல் கிடைத்தாலும் ஆச்சர்யம் அடைய வேண்டியதில்லை.
வாகனத்தை நிறுத்திவிட்டு தரையில் அமர்ந்தால் பெரும் பரந்த வெளி நம்மை மௌனமாய் அழைக்கிறது. பாயும் வெயில் அடிக்கும் குளிருக்கு முன் ஒன்றுமில்லாமல் போகிறது. புகைப்பட கருவியுடன் நடந்தால், நடக்கும் அத்தனை கோணத்திலும் காட்சிகள் விழுந்து கொண்டே இருக்கின்றன. பல புகைப்படங்களை எடுத்து முடித்தவுடன், ஆஹா என்று புகைப்பட திரையில் படங்களை பார்த்து ரசிப்பதற்குள் …. காட்சிகள் மாறுகின்றன. வெப்பநிலை மாறுகிறது. குளிர் இன்னும் அதிகமாகிறது. மேகங்கள் கலைகின்றன. அடுத்த காட்சி காத்திருக்கிறது. புகைப்பட கருவி மீண்டும் தயாராகிறது. இந்தியா முழுவதிலும் .. புகைப்பட கருவிக்கு challenge கொடுக்கும் காட்சிகள் இமய மலையில் மட்டுமே !
யாருமற்ற பெரு வெளியில் காணாமல் போன ஒற்றை மனிதனாக, negligible அடையாளமாக நிற்கும் ஒருவனுக்கு இந்த மொத்த பூமியும் அவ்வளவு அழகாக தெரியும்போது .. மற்ற கிரக வாசிகளை பார்த்து அவன் ..
“இதுதான் சொர்க்கம் ”
என்று சிரித்தபடி சொல்ல மாட்டானா ?
அப்படி சொல்லிக்கொண்டே பயணித்த தருணங்களை நினைத்து பார்க்கிறேன். இப்போதும் அவை குளிர்ச்சியாய் எம் மனதிற்குள் !
என்ன .. உங்களுக்கும் குளிர் எடுக்கிறதா ?