கவிதையின் கண் 09
Spanish கவிதை ஒன்று சட்டென உள்ளே ஈர்த்தது. படிக்க படிக்க ஒரு dimension, இரண்டு, மூன்று என்று … நகர்ந்து என்னவோ செய்தது. கவிதையின் கண் அவ்வளவு பலம் வாய்ந்தது.
A Dream :
புல்பூண்டற்றப் பிரதேசத்தின்
மத்தியில்
அதிக உயரமென்று சொல்ல முடியாத
கற்கோட்டையொன்று
கதவுகளோ சன்னல்களோ இன்றி.
கோட்டையினுள்ளிருந்த
ஒரேயொரு வளைந்த அறையின்
புழுதி படர்ந்த தரையில் கிடந்தன
மரத்தாலான மேசையும் நாற்காலியும்.
அவ்வட்டச் சிறைதனில்
எனைப் போன்ற ஒருவன்
எழுதிக் கொண்டிருந்தான்
எதையோ தீவிரமாக.
அது ஒரு நீண்ட கவிதையாக
புரிந்து கொள்ள இயலாததாக
இன்னொரு வளைந்த அறையில்
அவனைப் போலவே
கவிதை எழுதிக் கொண்டிருந்தவனைப் பற்றியதாக
அந்தக் கவிதையோ
இன்னுமோர் வட்டச்சிறைவாசியைப் பற்றியதாக..
முடிவற்றச் சுற்றாக
எவருக்குமே புரியாததாக
கைதிகளின் எழுத்துகள்!
***
மூலம்:
A Dream
Jorge Luis Borges (1899-1986)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“புல்பூண்டற்றப் பிரதேசத்தின்
மத்தியில்
அதிக உயரமென்று சொல்ல முடியாத
கற்கோட்டையொன்று
கதவுகளோ சன்னல்களோ இன்றி. ”
சில வரிகளில் இந்த பிரதேசத்திற்கு இழுத்து செல்ல முடிகிறது எனில், அங்கே இருக்கிறது கவிதையின் பலம். கதவில்லை, சன்னல் இல்லை என்று சொல்லும் போதே அந்த கற்கோட்டை என்னவோ செய்கிறது உள்ளே. பொதுவாக கதவும் சன்னலும் இல்லை எனில் நாம் இன்னொரு உலகத்திற்கு பயணிக்கிறோம் என்று அர்த்தம். கற்கோட்டை என்ற பின் .. ஏதோ ஒரு காலத்தை நோக்கி நம் நினைவை கவிதை இழுப்பதை தவிர்க்க முடியாது.
” கோட்டையினுள்ளிருந்த
ஒரேயொரு வளைந்த அறையின்
புழுதி படர்ந்த தரையில் கிடந்தன
மரத்தாலான மேசையும் நாற்காலியும். ”
வளைந்த அறை .. ? யோசிக்க முடிகிறதா ? அறை என்பது நேராகத்தான் இருக்க வேண்டுமா என்ன ? புழுதி படர் மேசையும் நாற்காலியும் .. உபயோகம் அற்ற ஒரு வளைந்த அறையும் .. என்று சொல்லும்போதே .. ஒரு கடந்த கால உலகை நோக்கி நாம் பயணிப்பதை தவிர்க்க இயலாது போகிறது.
” அவ்வட்டச் சிறைதனில்
எனைப் போன்ற ஒருவன்
எழுதிக் கொண்டிருந்தான்
எதையோ தீவிரமாக. ”
இங்கே தான் கவிஞர் வருகிறார். சன்னலும், கதவும் இல்லை எனில், வளைந்த அறை எனில், புழுதி படர்ந்த நாற்காலி மேசை எனில் .. அது சிறையாகவே இருக்க கூடும் என்ற மனதின் பிம்பத்தை நிஜமாக்க வரும் வரிகளை கவிஞர் கையாள .. இப்போது அறை நமக்கு பரிச்சயமாகிறது. இந்த சூழ்நிலையில் ஒருவன் தீவிரமாக என்ன எழுதக்கூடும் என்று ஒரு கேள்வி உள்ளே எழுகிறது !
” அது ஒரு நீண்ட கவிதையாக
புரிந்து கொள்ள இயலாததாக
இன்னொரு வளைந்த அறையில்
அவனைப் போலவே
கவிதை எழுதிக் கொண்டிருந்தவனைப் பற்றியதாக
அந்தக் கவிதையோ
இன்னுமோர் வட்டச்சிறைவாசியைப் பற்றியதாக.. ”
இந்த கவிதையின் கண் இங்கே தான் வருகிறது. எழுதிக்கொண்டிருந்த கவிதை எழுதிக்கொண்டு இருந்தவனை பற்றியோ அல்லது இதே போன்ற இன்னொரு சிறைவாசி எழுதும் கவிதையை பற்றியதாகவோ இருக்கலாம் – என்று எழுதுவதே ஒரு புதிய அனுபவம். இங்கே நாம் மூன்று Dimension உலகத்திற்கு மிக யதேச்சையாக செல்ல முடியும். ஒரு கவிதையால் இதை செய்ய முடிவது தான் இங்கே உள்ள ஆச்சர்யம் !
” முடிவற்றச் சுற்றாக
எவருக்குமே புரியாததாக
கைதிகளின் எழுத்துகள்! ”
கடைசியில் இந்த கவிதையை முடிவற்றதாக மாற்றும் முடிவு ஓர் ஆச்சர்யம். கைதியின் எழுத்து என்பதும், கவிதையின் தலைப்பு Dream என்பதும் … மொத்த கவிதையின் பார்வையே மாறிப்போகும் ஒரு எழுத்து திறமை.
இந்த Spanish கவிதை – கவிஞர் செய்யும் மன மாயம் வேறு நிலை. இன்னொரு உலகத்திற் க்கு சட்டென சில வரிகளில் இழுத்து செல்வது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
கனவு என்பது இரவில் முழுமையாக புரிவதும், காலையில் எழுந்ததும் புரிந்தும் புரியாத ஒரு கலவையாக மாறும் கவிதை என்று எங்கோ நான் எழுதிய வரி ஞாபகத்தில் இப்போது !