மனங்களின் மறுபக்கம் 010
மனிதர்கள் அனைவரும் திறமைகளை பூட்டி வைத்த தோல் பைகளாகவே தெரிகிறார்கள் எனக்கு. சரியான களம் அடையும் வரை வேறு மனிதர்களாகவும், களம் கிடைத்தவுடன் வேறு மனிதர்களாகவும் மாறுவதில் ஒன்றும் பெரிய ஆச்சர்யம் இல்லை.
மகன் என்ற அடையாளத்தில் வளரும் அதே மனிதன் தான் தொழில் என்று வந்த பின் வேறு மனிதனாக தெரிகிறான். தங்கை என்ற அடையாளத்தில் வளரும் அதே பெண் தான் குடும்ப நிர்வாகம் என்று வரும்போது வேறு பெண்ணாக மாறுகிறாள். கண்டிப்பான அப்பா தான் உதவி என்ற களம் வரும்போது தகப்பன்சாமி யாக மாறுகிறார். அன்பான அம்மா தான் கண்டிப்பான CEO வாக மாறுகிறார் வேறு களத்தில். களம் தான் மனிதர்களின் மூடப்பட்ட தோலை உரித்து, ஒவ்வொரு மனிதனாக வெளிக்கொண்டு வருகிறது.
சாதாரணமாக நான் பார்த்த ஒரு பெண், வேறு களம் கண்ட பின் இன்று புது உயரங்களை அடைந்து பிரம்மாண்டமாகிறாள். சராசரி யாக வாழ்ந்த இளைஞன் ஒருவன் களம் மாறிய பின் தொழிற்சாலை ஆரம்பித்து புது மனிதனாய் நிற்கிறான். எழுதவே யோசித்த பயந்த பெண் ஒன்று.. இன்று கவிதைகளில் எதிர்பாரா உயரங்களை அடைகிறது. ஆக … களம் மட்டுமே மனிதனின் நிஜ முகத்தை தேர்ந்து எடுக்கிறது. களம் அமையின் மனிதன் வேறு உரு வை அடைகிறான். ஒரு மனிதன் மீது உங்களுக்கு ஈர்ப்பு இல்லை எனில், இன்னும் அவருக்கு சரியான களம் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
களம் என்பது என்ன ? களம் – நாம் உருவாக்குவதா ? தானாக வருவதா ? என்னை பொறுத்தவரை இரண்டும். சரி.. களத்தை கண்டுபிடிப்பது எப்படி ? ஒரே பதில்தான். தேடுதல் – மட்டுமே அந்த பதில். அடுத்தது என்ன ? என்ற தேடல் மட்டுமே புது மனிதர்களை நமக்குள்ளே கொண்டு வரும். ஒரு Trainer ஆக நான் என் தேடுதலை நிறுத்தி இருந்தால், ஒரு Photographer எனக்குள் வந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு Photographer ஆக என் தேடுதலை நிறுத்தி இருந்தால், ஒரு பயணி எனக்கு கிடைத்திருக்க மாட்டார். ஆக .. தேடுதல் தான் புது களங்களை நமக்கு உருவாக்குகிறது. தேடுதல் என்றாவது நின்று போகுமா ? ஆம். நிற்கும். கடைசி மூச்சின் போது நின்று போகும்.
அதுவரை … தேடல் என்னும் சாவி கண்டுபிடிக்கும் புதிய களங்களில் தொலைந்து, புதியதாக எழப்போகும் அவதாரங்கள் நம்மை அடைய நாமே நமக்கு வாழ்த்து சொல்லுவோம்.
அந்த புதிய களத்தில் கண்டுபிடிக்கப்படும் உங்களின் அவதாரங்களுடன் என்னையும் உங்களால் பார்க்க முடியும். ஆம். அங்கே நாம் சந்திப்போம்.