தெரிந்ததும் தெரியாததும் 018
99 இல் City யை நிறுத்திவிட்டு ஒன்றரை மணி நேர break எடுக்க தயாரானபோது, மனதிற்குள் எதிரே தெரிந்த மலை பளிச்சென நின்று மறைந்தது – மனதில் !
தேசிய நெடுஞ்சாலையில் #slogging ஒரு வித்தியாச அனுபவம். 120 140 இல் பறக்கும் மனித மனங்களுக்கு பக்கவாட்டில் மெதுவான ஒரு ஓட்டம். மனதிற்குள் எப்போதும் எழும் ஒரு கேள்வி மீண்டும் எழுந்தது. எங்கே செல்கிறார்கள் ? எதற்கு செல்கிறார்கள் ? ஏன் இப்படி ஒரு வேகம் ? அப்படி என்னதான் கிடைக்கும் ?
மலை என்னுடன் பக்கவாட்டில் வளர்ந்து கொண்டே வந்தது. பொதுவாக தேசிய நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் வரும் மலை சொல்லும் பிரம்மாண்ட இருப்பை போல அழகு எதுவும் இல்லை. தரை, மரம், வனம், பின்பு மலை என்ற கண்ணில் தெரியும் stretch .. இதற்கு இணை இருக்க முடியுமா என்ன ?
பலமுறை கவனித்து இருக்கிறேன். சிவ சிவ என்ற எழுத்து இழுத்துக்கொண்டே இருக்கும். செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், நேரம் என்ற ஒரு பார்வை கிடைக்காமல் இருந்ததால் ஏக்கத்துடன் கடந்து சென்று இருக்கிறேன். ஆனால் இன்று … ? மலையை நெருங்க நெருங்க ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. எப்படி இவ்வளவு நாள் இதை பார்க்காமல் இருந்துவிட்டேன் ?
படிக்கட்டுகள்
அப்படியே
ஏற்றத்திலும்
இறக்கத்திலும் !
– சிறு வயதில் நான் எழுதிய இதற்கு 50 ரூபாய் பரிசாக பெற்றது இன்னும் ஞாபகம் இருக்கிறது. படிக்கட்டுகளை கவனித்தால் ஒன்று புரியும். ஏற்றத்தில் உதவியும், இறக்கத்தில் யதார்த்தமாகவும் அருகில் இருக்கும். ஆங்காங்கே இருக்கும் பெரும் படிக்கட்டுகள் சிறிது நேரம் நிற்க இடம் கொடுக்கின்றன. நிற்க இடம் கொடுக்க பெரும் மனம் தேவை.
மேலே செல்ல செல்ல தூரப் பார்வையும், உயரப்பார்வையும் நம் அருகே இருக்கும் அழகான உலகத்தை அப்படியே கண் முன்னே நிறுத்துகின்றன. தூரத்து நீல ஏரி தான் முதலில் கண்ணில். பரந்த வனத்தில் சிறு மனிதர்கள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டு இருந்தார்கள். தேசிய நெடுஞ்சாலை கரும்பாம்பாய் உயிரற்று வளைந்து நெளிந்து கிடந்தது. உயிருள்ள வாகனங்கள் அதன் மேல் யார் உயிரோடு இருக்க முடியும் என்று வேகப் போட்டி நடத்திக்கொண்டு இருந்தார்கள். உலகம் அப்படித்தான். அருகில் இருப்பதை விட்டுவிட்டு எங்கோ ஓடிக்கொண்டே இருக்கும்.
பக்கத்திலேயே இன்னொரு மலை. அங்கே Jesus தன் சிலுவையை நிறுவி தான் இருப்பதை உறுதி செய்திருந்தார். இந்த மலை சிவன் என்றால் அங்கு Jesus இருப்பதும் இயல்பு தானே. பொதுவாக எனக்கு சிலுவையில் அறைந்து இரத்தம் வழிய நிற்கும் இயேசுவை பார்க்க பிடிக்கவில்லை. கைகளை விரித்து நம்மை அழைக்கும் இயேசு மிகவும் பிடிக்கிறது எனக்கு.
கோவிலை நெருங்க நெருங்க படிக்கட்டுகள் குறுக, அதே சமயம் சிவ சிவ என்ற பெரும் பலகை கொடியுடன் வரவேற்கிறது. #சிவசிவ என்பது ஒரு வரி அல்ல. இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பான்மை மனிதர்களை ஒரே ஒரு வரி ஈர்த்துக்கொண்டே இருக்கிறது என்றால் அது சிவ சிவ என்கிற ஒன்றும்.
மென் குளிர் காற்று மேனியை தடவிக்கொண்டு இருக்க, பரந்து விரியும் உலகில் … ஒரு சிறு இடத்தில் கோவில் நிற்கிறது. அதுவே அம்மலையின் உயர பகுதி. அங்கே இருந்து பார்க்கும்போது நகர வாழ்வின் அவசரங்கள் கண்ணில் தெரியவில்லை. Muted movements என்று சொல்வதை போல .. அங்கங்கே வாகனங்கள் நகர்வதை கவனிக்க முடிந்தது. தூர இருந்து பார்த்தால் எல்லாம் muted movements தான் !
அங்கே தான் அவரை கவனித்தேன். வயதான முகம். இளமையான சிரிப்பு. சிவாய நம என்ற வரவேற்பு. வெண் முடி காற்றில் பறக்க, அமைதியாய் அமர்ந்து சிரிக்கும் பாக்கியம் கிடைப்பது எவ்வளவு பெரிய விடயம் ! பேச ஆரம்பித்தேன்.
” நாளை திருவாசகம் பற்றிய பேச்சு இங்கே நடக்கிறது. அதற்கு உழவாரப்பணி செய்ய வந்திருக்கிறேன். கோவிலை சுத்தப்படுத்தி வைத்தால் நாளை வருபவர்களுக்கு உதவியாய் இருக்கும். ”
திருவாசகம் பற்றி பேச ஆரம்பித்தோம். அவர் பேச பேச மனம் இலயித்தது. ” திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் ” என்பது எவ்வளவு உண்மை. சில நிமிடங்களுக்கு பின் கிளம்ப எத்தனித்தேன்.
” திரு நீறு ” என்று சிரித்து சொன்னார்.
” நீரே நீறு இடும் ” என்று நெற்றியை காண்பித்தேன்.
அழகாய் மென்மையாய் மூன்று வரியாய் நெற்றியில் நீறு ஏறியது. அந்த மூன்று வரிகளில் அன்பை உணர முடிந்தது.
சிவன் அரக்கனை அழிக்க, முப்புறமும் பயணிக்க தொடங்கிய பின், ஒரு சிறு ஓய்விற்கு தரை இறங்கிய இடமே இக்கோவில். பசுபதீஸ்வரர் என்ற பெயரில் இங்கே சிவன் இருப்பதாக அவர் சொல்ல இயற்கையுடன் நானும் கேட்டுக்கொண்டேன். எல்லாவற்றிற்கும் ஒரு சாட்சி இருக்கிறதே ! அவர் இங்கே ஒரு சாட்சியாய் சொல்ல நானும் சாட்சியாய் கேட்டுக்கொண்டேன். அந்த மனிதருக்கு நெஞ்சு முழுக்க மகிழ்ச்சி. சிவாய நம என்று நிறைவு வார்த்தை சொன்னார். அவரின் பெயர் .. ” சித்தாந்த திருத்தொண்டர் மாமணி ” சிவபெருமான். அவரை இன்று இங்கே சந்திக்க வேண்டும் என்று எனக்கு எழுதப்பட்டு இருக்கிறது என்று தோன்றியது.
மீண்டும் கீழே இறங்க தயாரான போது இனம் புரியா நிறைவு மனதிற்குள். நீறு பூத்த நெற்றியுடன் … இறங்கும்போது மேலே ஏறத் தொடங்கிய கிழவி கேட்டாள் …
” நீறு பூசிய நெற்றியை இங்கு பார்த்துட்டேன். இதன் தொடர்பான நிறையை அங்கே பார்க்கிறேன் ”
மீண்டும் மீண்டும் எதிரொலிக்கின்றன அவ்வார்த்தைகள்.