தெரிந்ததும் தெரியாததும் 019
ஓரு வான் பயணம். பொதுவாக நான் விரும்பாத ஒன்று. என்னவோ தெரியவில்லை.. வான் வழி பயணத்தில் அருகில் இருக்கும் மனிதர்களின் ” திடீர் ” முகங்கள் ஆச்சர்யப்படுத்தும். எங்கேயோ இருந்து வந்தவர்கள் போல உடல்மொழியும், வாய்மொழியும், தோரணைகளும்… வேறு எங்காவது பார்வையை திருப்பி கொள்ளலாம் என்று தோன்றும்போது, எனக்கிருந்த ஒரே வாய்ப்பு … வான் ஊர்தியின் சாளரக்கதவுடன் என்னை இணைத்து கொள்ளுதல்.
பொதுவாக அதிகாலை பயணங்களில் சூரிய உதயத்தை 30000 plus அடி உயரத்தில் இருந்து பார்ப்பது ஓர் அலாதியான அனுபவம். ஆரம்பம் அற்ற உதயமாக சூரியன் உதயமாவது கிட்டத்தட்ட தியான மனநிலை. சிதறி எறியப்பட்ட வெண் சில்லறைகளாய் அங்கங்கே மேக கூட்டங்கள். அவற்றிற்கு இடையில் பயணிக்கும் சுகம் வேறு நிலை. வான்வனத்தில் ஒற்றையாய் சுற்றிய அனுபவம் அது.
ஏன் வான் பயணத்தில் சாளர பார்வை பிடிக்கிறது ? பொதுவாக எல்லையற்றதை நாம் பார்க்கவே விரும்புகிறோம். எல்லைகள் எப்போதும் நமக்கு பிரியமில்லை. எல்லை அற்றதே நமக்கு மிக பிரியம். அது ஒரு சுதந்திர உலகம் நமக்கு. அந்த யாருமற்ற உலகத்தில் என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளலாம். கடந்த கால நினைவுகளின் பெட்டகத்தில் இருந்து ஒன்றை உருவினால் வரிசையாக அவை வரத் தொடங்கும். ஒவ்வொன்றாக. அழகாக.
சூரிய ஒளி அந்த வெளியில் நம்மால் உணர முடிவதற்கு ஒரே ஒரு வழிதான். சாளரம் வழி நம் முகத்தில் அடிக்கும்போது. ஆனால் இன்னொரு வழியும் இருக்கிறது. சூரிய ஒளி கீழே இருக்கும் ஏரி, அணை, ஆறு போன்றவற்றில் பட்டு பிரதிபலிக்கும். அந்த தங்க நிற நீர் வனம் சூரிய ஒளி அங்கே வாழ்வதற்கான இன்னொரு தடயம். நடு வானில் இருந்து, நகரும் புள்ளியில் இருந்து, சூரிய ஒளி பிரதிபலிப்பு ஒரு அழகான அதிசயம்.
ஆறு ஒன்றினை தரையில் இருந்து பார்த்தால் நீராக அழகாக நகரும். ஆனால் …அதே ஆறு வானில் இருந்து பார்க்கும்போது ஒரு வளைவான நெளிவான வெள்ளை கோடு. அதே நேரம் சூரிய ஒளியில் தகிக்கும்போது …. அது ஒரு மஞ்சள் பாம்பு. ஒரு பக்கத்தில் மின்ன ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த மின்னல் நகர்ந்து கொண்டே இருக்கும். மஞ்சள் மறையும் புள்ளிகளில் வெள்ளை மீண்டும் வந்துவிடும். ” மின்னுவது கொஞ்ச காலத்துக்கு தான் ” என்று அவை சொல்வதுபோல் எனக்கு தோன்றும். இயற்கை சொல்லா பாடங்கள் என்று எதுவும் உண்டா ?
உள்ளே மனிதர்களை கவனிக்கிறேன். முழுக்க முழுக்க தன் உலகத்தில் புதைந்த மனிதர்கள் அவர்கள். இங்கும் வியாபாரம் பேசிக்கொண்டு இருவர், தூங்கும் ஒருவர், மனைவியுடன் அருகில் அமர்ந்தும் அவரிடம் பேசாத கணவர், i pad இல் படம் பார்த்து சிரிக்கும் பலர், ஏதோ ஒன்றை சாப்பிட்டுகொண்டிருக்கும் யாரோ சிலர் ….என்ன ஆகிவிட்டது இவர்களுக்கு ? வானில் இருக்கும் போது கூட வானம் பார்க்கா இந்த மனிதர்களை என்னவென்று சொல்வது ? தொழில் நுட்ப உலகில் புதையும் இவர்களை .. அநேகமாக ..
நுட்பதர்கள் என்று அழைக்கலாமா ?
ஆம். உங்களை தான் கேட்கிறேன்.