காட்சிக்கவிதைகள் : 005
மாத்தூர் தொட்டிப்பாலம். நாகர்கோவில் அருகில். மாலை சூரிய அஸ்தமனம்.
அட்டகாச காட்சிப் பதிவு.
பொதுவாக சூரிய அஸ்தமனம் வெறும் சாளரம் வழி கூட அசத்தும். மலை ஒன்றின் பின் எனில் இன்னும் அட்டகாசமாக இருக்கும். கடல், ஆறு, ஏரி .. எங்குமே சூரிய அஸ்தமனம் அசத்தலே. ஆனால் ஓர் பரந்த வெளியில் ? மிக உயரத்தில் இருந்து ? அதான் மாத்தூர் தொட்டிப்பாலம்.
பொதுவாக சூரிய மறைவை விட .. அதன் மறைவிற்கு பின் வானம் ஏற்படுத்தும் வண்ண மாற்றங்கள் தினசரி நவீன ஓவிய வகை ஆச்சர்யங்கள் ! கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சளும், சிவப்பும், நீலமும் .. அந்த combo எப்போதும் ஓர் அட்டகாச உணவு – புகைப்பட மனதிற்கு !
எம்மை ஓர் நட்பு இங்கே அழைத்து சென்றது. இந்த காட்சியை நான் கண்டிப்பாக ரசிப்பேன் என்று அது நம்பியது. நான் பார்க்கும் முன்பே ” இதை இவர் ரசிப்பார் ” என்று யோசிக்கும் நட்பு கிடைத்தால் புகைப்பட கலைஞனுக்கு அதை விட பெரும் பரிசு என்ன இருக்க முடியும் ?
கீழே பெரு வெளி கருப்பாக கருப்பாக .. வான் நிறம் exclusive shot ஆக மாறும். எல்லோரும் சூரிய அஸ்தமனத்தை எடுத்துவிட்டு நகர ஆரம்பிக்க, நான் சூரிய அஸ்தமனத்திற்கு பின் கிடைத்த காட்சிகளை எடுக்க ஆரம்பித்தேன். எல்லோரும் பார்க்க கிடைக்கும் காட்சிகள் இருக்கட்டும். யாரும் பார்க்க விரும்பா அனாதை காட்சிகள் இருக்கின்றனவே … அவைதான் … தத்து எடுக்கப்பட வேண்டியவை. சந்தோஷத்தில் பங்கேற்று விட்டு செல்லும் மனிதர்கள் ஏராளம். துக்கத்தின் போது உடன் இருக்கு மனிதர்களே உலகின் ஒவ்வொருவரின் தேவை. அதே தான் காட்சிகளுக்கும். சூரியன் மறைந்த பின் அநாதயாக நிற்கும் வானத்தை யார் தத்து எடுப்பது ?
புகைப்படம் எடுக்கும்போது ..
எல்லாம் முடிந்த பின் சில காட்சிகள் நமக்காக காத்திருக்கும். அவற்றை இனி கவனிக்கலாம்.
* திருமணம் முடிந்த பின் ஓய்வாக அமரும் தகப்பன்
* தாலி கட்டிய பின் நிறைவாக சிரிக்கும் அம்மா
* திருமணத்திற்கு மறுநாள் வெட்கப்படும் கணவன் மனைவி
* குழந்தையை காணவில்லை என்று தேடும் அம்மா
* சாப்பிட்டு முடித்த பின், நாற்காலியில் சாய்ந்து.. ஏப்பம் விடும் விருந்தாளி
நிறைய காட்சிகள் இன்னும் அனாதைகளாகவே இருக்கின்றன.
அவற்றை தத்து எடுப்போம்.