நாலடியார் : 02
#நாலடியார் 02
#மிளிர்தமிழ்
#அறத்துப்பால்
#செல்வம்நிலையாமை
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் ( 1 )
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க (2)
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் (3 )
சகடக்கால் போல வரும் (4)
பெருஞ்செல்வம் என்றாலும் வண்டிச்சக்கரம் போல நிலையாக இல்லாமல் மேலும் கீழுமாய் மாறும். ஆக .. எருது கட்டி, விவசாயம் செய்து, பலரோடு பகிர்ந்து உண்ணுதலே எப்போதும் நிலைக்கும்.
பகடு – எருது
அகடுற – நிலையாக
சகடம் – வண்டி
சகடக்கால் – வண்டிச்சக்கரம்
என் பார்வை :
நிலம் நிலையானது. உழைப்பு நிலையானது. உழைத்து சாப்பிடும்போது குறைந்து நிற்கும் தேவைகள் நிலையானது. ( உழைத்த பின் வரும் தேவைகள் வளராது ! ). ஆனால் செல்வம் நிலையானது அல்ல. தேவைக்கு மேற்பட்ட செல்வம் ” ஏதாவது ” செய்ய சொல்லும். ஆம். ஏதாவது ஒன்றை – அதில் மனித நோக்கம் நிச்சயம் குறைவாகவே இருக்கும். காரணம் ?. ஒரு கோடி வைத்திருக்கும் ஒருவனால் அது குறைவதை ஏற்க முடியாது. அவனுக்கு ” ஏதாவது ” செய்து அந்த ஒரு கோடி status ஐ காப்பாற்றிக்கொள்ள வேண்டும். வங்கி கணக்கில் 1000 ரூபாய் வைத்திருக்கும் ஒருவனுக்கு 10000 ரூபாய் வந்தால் அவனையும் அறியாமல் ஒரு படபடப்பு வருகிறதே .. அங்கே இழக்கிறான் அவன் – நிதானத்தை ! நிலையை !!
உழைத்து பகிர்ந்து உண்ணுதல் இயல்பான ஒன்றாகவே நமக்கு இருந்திருக்கிறது. ஓர் காலகட்டத்தில் வேட்டை மட்டுமே வேலை என்ற வாழ்க்கையில், பின் விவசாயம் மட்டுமே வேலை என்று இருந்த வாழ்க்கையில், Cancer, Diabetes எல்லாம் இருந்ததாக வரலாறு இல்லை. அப்போதெல்லாம் மனித ஒழுக்கம் சார் வியாதிகள் தான் இருந்ததாக கவனிக்கிறேன். ராஜாக்கள் வந்த காலத்தில் ஆரம்பமான மண் பொன் பெண் ஆசைகள் இன்று வரை உலகை வேறு வேறு வடிவங்களில் தாக்கிக்கொண்டே இருக்கின்றன. நிலையில்லை என்று தெரிந்தும் அந்த கையில் கிடைக்கா வான் இடும் வில்லை பிடிக்க முயலும் மனிதனை என்னவென்று சொல்வது ?
எருமை என்று திட்டிக்கொண்டு இருப்பதன் பின், ஒரு அழகான தமிழ் வார்த்தை இருப்பதை கவனிக்கிறேன். பகடு மேய்த்தவன் நான் என்று இனி பெருமையுடன் சொல்ல முடியும்போல்.
பகடை
தொலைத்து
சகடம் பெற்ற
அவனின்
சென்னித் திமிர் !
தமிழ் தான் எவ்வளவு அழகானது !