நாலடியார் : 03
#நாலடியார் 03
#மிளிர்தமிழ்
#அறத்துப்பால்
#செல்வம்நிலையாமை
யானை யெருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச் ( 1 )
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் ஏனை (2 )
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட ( 3 )
மனையாளை மாற்றார் கொள
பெரும் அரசராக, யானை மேல் குடை நிழலில், அமர்ந்து பெருமிதமாக சென்றவர்கள், பின்பு தீவினையின் காரணமாக தம் பட்டத்து அரசியை மாற்றார் கவர, அரசியை இழந்து , தனியாக வறுமையில் துன்பப்படும் நிலையை அடைவர்.
எருத்தம் – கழுத்து
பொலிய – சிறப்பாக
சேனைத்தலைவர் – படைத்தலைவர்
மனையாள் – மனைவி
மாற்றார் – பகைவர்
எம் பார்வை :
தீதும் நன்றும் பிறர் தர வாரா – வின் இன்னொரு வடிவமாய் இதை கவனிக்கிறேன். தீயவை நினைப்பதால் நாம் கொண்டிருக்கும் பெரும் செல்வம் இழந்து, தனிமையை அடைகிறோம்.
எனக்கு தெரிந்த மனிதர் ஒருவர், செல்வம் சேர சேர தம் நிலை மாறி .. வேறு விதங்களில் நடந்து கொள்ள ஆரம்பித்தார். பேச்சினில் செருக்கும், யாரையும் மதிக்கா போக்கும், கேடு எண்ணங்களும் .. வர ஆரம்பிக்க .. கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருந்து பலர் விலக ஆரம்பித்தனர். குடும்பமும். 10 வருடங்களில் மனிதர் பெரும் பணக்காரர். ஆனால் .. யாரும் உடன் இல்லை. மகன் மகள் பேசுவதில்லை.
” எல்லாம் இருக்கிறது. ஆனால் எதுவும் இல்லை ” என்று சொன்னார்.
நம்மில் இப்படி பலரும் வாழ்வதை பார்க்கிறோம். உணர்கிறோமா ?
யோசிப்போம்.