நாலடியார்
என்ன இது ?
ஒரு புது தொடரினை ஆரம்பிக்கிறேன். நாலடியார் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருக்கலாம். அல்லது அப்படி என்றால் என்ன ? என்ற கேள்வியும் எழலாம். Google செய்தும் பார்க்கலாம். அந்த புத்தகத்தின் கவிதை வரிகளையும் அதற்கான தமிழ் விளக்கங்களையும் இங்கே கொடுக்கிறேன். மொத்தம் 400 பாடல்கள். ஒவ்வொன்றாக இங்கே கொடுக்கிறேன். இதற்கு பின் நிறைய தேடல்களும், படித்தலும் இருக்கிறது என்று புரிந்து படிக்கலாம்.
சரி…. ஏன் படிக்க வேண்டும் ?
முதலில் நாம் மறந்திருக்கும் தமிழை கண்டறிய.
எவ்வளவு அழகான சொற்கள் பொதிந்த மொழி நம் தமிழ் என்று அறிய.
இப்போது நடைபெறும் கவிதை போட்டிக்கு இன்னும் சில புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ள.
நம் முன்னோர்களின் கவித்திறன், மொழியை கையாளுதல், வார்த்தைகளை தேர்ந்தெடுத்தல், உவமைகளை அவர்கள் உபயோகித்து இருக்கும் விதம், வித்தியாச பார்வைகள் …அனைத்தையும் அறிந்துகொள்ள.
பழைய தமிழ் இப்போது உதவுமா ?
உதவும். கன்னித்தமிழ் என்றொரு புத்தகத்தில் யௌவனம் என்று ஒரு வார்த்தை படித்தேன். யௌவனம் என்றால் அழகு என்று அர்த்தம். சமீபத்தில் ஒரு ஓவியர் வரைந்த ஓவியத்தை பார்த்து ” யௌவனமாய் ” இருக்கிறது என்றேன். என்ன வார்த்தை அது ? என்று அவர் கேட்க, அந்த இளம் தலைமுறை ஓவியருக்கு அழகை சொன்னேன். இன்று அவர் அதை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார். நாம் புதியதாக பயன்படுத்த ஆரம்பிக்கும்போது நிறைய பேர் அதே வார்த்தைகளை உபயோகப்படுத்த ஆரம்பிக்க கூடும். நாம் பேசும் தமிழுக்கு நம்மால் முடிந்த மகிழ் உதவி.
ஆனால் புரியாதே ?
ஆம். ஆகையால் விளக்க உரையுடன் எழுதுகிறேன். கொஞ்சம் தேடல் மெனக்கெடல் உண்டு. அந்த தேடலுக்கு உங்களின் படித்தலும், பின்னூட்டமும் கரவொலியாக அமையட்டும்.
எப்படி படிக்க வேண்டும் ?
அதிக பட்சம் 05 நிமிடம் ஆகலாம் படிக்க. கவனத்துடன் படித்தால் வார்த்தைகள் நம் பேச்சில் மிளிர ஆரம்பிக்கும்.
உங்களுக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளையும் சொல்ல ஆரம்பிக்கலாம். கலந்து உரையாடுதலில் புது வார்த்தைகளும் கிடைக்க கூடும்.
யாரால் எழுதப்பட்டது இது ?
சமண முனிவர்களால். திருக்குறளுக்கு இணையாக காத்திருக்கிறது பொக்கிஷங்கள்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கடவுள் வாழ்த்து ;
வான் இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால் நிலம் தோயா கடவுளை – யாம் நிலம்
சென்னி யுறவணங்கி சேர்தும் எம் உள்ளத்து
முன்னி யவை முடிக என்று !
பொருள்:
வான் இடு வில் – வானவில்லின் வரவும் மறைவும் நாம் அறிய முடியாதது போல, இந்த உடலும் ஓர் நாள் அழிந்து போகும். அப்படி அழியும் முன்பே தன் கால் நிலத்தில் கடவுளை நோக்கி, நாம் நினைத்த செயல்கள் யாவும் நிறைவேற வேண்டி, நமது தலை நிலத்தில் பதியுமாறு வேண்டுவோம்.
புது வார்த்தைகள் :
வான் இடு வில் – வானவில் ( எவ்வளவு அழகான சொல் ஆட்சி ! )
நிலம் தோயா – நிலத்தில் படாத
சென்னி – தலை ( சென்னி மலை இப்படித்தான் வந்திருக்குமோ ? )
முன்னியவை – உள்ளத்தில் நினைத்தவை.





