இதயமும் இமயமும் 003
இந்தியாவில் சொர்க்கம் என்று பல இடங்கள் உள்ளபோதும், நான் ரசிக்கும் சொர்க்கம் என்றால் அது ” pankong lake ” மட்டுமே. என் இறுதி மூச்சு இங்கே இருக்கும் பட்சத்தில், அநேகமாக … என் வாழ்க்கையின் முழு நிறைவும் அழகாக நிகழும். [ இல்லை எனினும் இந்த பகுதியின் காட்சிகளை மனதில் நிறுத்திக்கொண்டே என் உயிர் பிரியும் ! ]
ஏன் இமயமலை நம்மை வசீகரிக்கிறது ? ஒரே பதில்தான். அதன் மௌனம். அதன் சத்தமின்மை. அதன் ஆட்கள் அற்ற பரந்த நிலப்பரப்பு. அதன் வான் பிரதிபலிப்பு ஏரிகள். அதன் ‘ நானும் நீயும் மட்டும் ‘ என்ற பேச்சற்ற கவிதைகள். இமயமலை பகுதியில் நீங்கள் தொலையவே வாய்ப்பில்லை. காரணம் மிகச் சுலபம். புள்ளி என்று ஒன்று இருந்தால் தானே நீங்கள் தொலைந்ததாக எண்ண முடியும். மொத்த நிலப்பரப்பும் எந்த reference புள்ளியும் அற்று இருக்கும்போது … நீங்கள் தொலைந்ததாக சொல்ல வாய்ப்பே இல்லை. கலந்ததாக வேண்டுமானால் சொல்லலாம். ஆம். அங்கே நீங்களும், பரந்த நிலமும் வேறு வேறல்ல.
ஒரு முறை இங்கே அமர்ந்து இருந்த போது சுவிஸ் இல் இருந்து வந்த பெண்ணை சந்தித்தேன்.
” அங்கே இல்லாத அழகான மலைப்பகுதிகளா ? எது உங்களை இங்கே வர வைக்கிறது ? ” என்ற கேள்விக்கு அவரின் பதில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது.
” எங்கள் நாட்டு அழகான மலைப்பகுதிகளை compare செய்தால் இமயம் ஒன்றுமே இல்லை தான். ஆனால் அங்கே தொலைந்தால் ஒரு மணி நேரத்திற்குள் என்னை கண்டுபிடிக்க எம் நாட்டு system காத்துகொண்டிருக்கும். அதாவது நான் virtual ஆக தொலைநுட்ப கருவிகளால் சிறை பட்டிருக்கிறேன். தொலைதல் அங்கே வாய்ப்பேயில்லை. ஆக … என்னுடன் மட்டுமே நான் வாழ்வது என்பது ஒரு கனவே. இங்கே தொலைதல் எளிது. அதைவிட இன்னும் ஒரு படி மேலெ சென்றால் … நான் காணவில்லை என்று யாரும் என்னை தொடரப்போவதில்லை. நானாக விரும்பினால் மீண்டும் நாகரிக உலகில் கலந்து கொள்ளலாம். அந்த சுதந்திரம் வேறு எங்கு கிடைக்கும் ? ”
அதிர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். சுதந்திரத்திற்கு இப்படி ஒரு பார்வையா ?. என் சுதந்திரம் நான் எடுக்க வேண்டிய முடிவு. கொஞ்ச நாள் எனக்காக வாழ வேண்டும் எனில் … மீண்டும் நான் முடிவு செய்தால் மட்டுமே இந்த நாகரிக உலகுடன் கலக்க வேண்டும். இல்லை எனில் நானும் இயற்கையும் மட்டுமே என்று வாழ வேண்டும். என்ன ஒரு பார்வை !
இருவரும் கொஞ்ச தூரம் நடக்கலாம் என்று முடிவெடுத்தபோது அவர் சொன்னார் … ” எனக்கொரு ஆசை இருக்கிறது. உங்களிடம் அதை சொல்ல விரும்புகிறேன் ”
சிரித்து சொல்லுங்கள் என்று சைகையால் கன்னசைத்தேன்.
” மனதில் உள்ள குப்பைகளை அப்படியே சொல்ல வேண்டும். மனதில் தேங்கி இருக்கும் அழுக்குகளை யாரிடமாவது சொல்வதால் அது வெளியேறும். இது ஒரு வகையான Mind Detox. நிறைய பேரிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தது உண்டு. ஆனால் ஏதோ ஒன்று தடுக்கும். என்னவோ தெரியவில்லை … உங்களிடம் பேசிக்கொண்டு இருந்ததில், சொல்லலாம் என்று தோன்றுகிறது. நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன். என் அசிங்கமான பக்கங்களில் இருந்து வரும் அவை அனைத்தும் என்னை இவ்வளவு நாட்களாக அழுத்திக்கொண்டு இருப்பவை ”
மீண்டும் சிரித்த கண்ணசைவு என் பக்கமிருந்து.
அவர் பேச ஆரம்பித்தார்.
மனித மனம் தான் எவ்வளவு அழுக்கு மூட்டைகளை சுமந்து கொண்டு இருக்கிறது ? கேவலமான எண்ணங்கள், வெட்கப்பட வேண்டிய செயல்கள், குரூர பார்வைகள், நாற்றமடிக்கும் கேள்விகள் … என்ன இல்லை இந்த மனதில் ! அவ்வளவும் வந்தது அவரிடம் இருந்து. கூடவே கண்களில் இருந்து வழியும் கண்ணீர். பேசி முடித்துவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த அந்த பெண்ணை கவனித்தேன். வயது சுமார் இருபது plus இருக்கலாம். எவ்வளவு திட எண்ணம் ! தன்னை இருப்பதை விட அழகாக காட்டிகொள்ள முயலும் இவ்வுலகத்தில் ஒரு பெண் தன் அசிங்க பக்கங்களை சொல்வது எப்படிப்பட்ட ஒரு ஆச்சர்ய வீரம் ?
மௌனம் கலைத்து அந்த பெண் சொன்னாள் …
” மனம் இலேசாக இருக்கிறது. நிறைவாக உணர்கிறேன். புதியதாய் பிறந்த பெண்ணாய் மேனி சிலிர்க்கிறேன். கைகளில் கேசம் சிலிர்ப்பதை பார்த்தால் புரியும். இதுதான் மனிதமோ ?. நம்மை நாம் நாமாக உணர்வது ? ” என்று பேச்சு நகர்ந்து கொண்டே இருந்தது. கண்களில் இன்னும் நீர்.
பிரிய வேண்டிய இடம் வந்தது. நான் என் வாகனத்தை நோக்கி சென்றேன். அந்த பெண்ணும் அவளின் வாகனத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
” ஒரு நிமிடம் ” என்று மீண்டும் வந்தாள்.
” உங்களின் கண்களை நேரடியாக பார்க்க வேண்டும் ” என்றாள்.
தயாராய் நின்றேன்.
பார்த்துவிட்டு சொன்னாள்.
” Yes. என் கழிவுகளை நீங்களும் சுமக்கவில்லை. வாழ்த்துக்கள் ”
மீண்டும் அவள் நடக்க ஆரம்பித்தாள்.
இதுதான் இமயம். இமயத்தில் மட்டுமே இப்படியான அனுபவங்கள். மற்ற இடங்களில் இது சார் அனுபவங்கள். ஆனால் அந்த divine touch miss ஆகும். மனிதன் உள்ளே வந்துவிடுவான்.
இமயத்தில் tourist இடங்கள் போல கொடுமையான இடங்கள் இவ்வுலகில் இல்லை. அவை பணம் பறிக்க மனிதர்கள் ஏற்படுத்திய செயற்கை அழகு நிலையங்கள். உண்மையான இமயம் உள்ளுக்குள் இருக்கிறது.
ஆம். கர்ப்ப பரப்புகள் எப்போதும் வெளியே தெரிவதில்லை !
[ தீரா உலாவின் ஆகஸ்ட் பயணத்தில் இமயம் வருகிறது. தயாராகலாம். கழிவுகளை கழிக்கவும் கூடவே தயாராகலாம் ! ]