படம் சொல்லும் பாடம் 006
The Lovers :
50 வயது கணவன் மனைவி. திருமணம் தாண்டிய வெளி உறவு இருவருக்கும். கணவனுக்கு தெரியாமல் மனைவிக்கு இருக்கும் ஓர் உறவு. மனைவிக்கு தெரியாமல் கணவனுக்கு இருக்கும் ஓர் உறவு. இருவரும் இருவருக்குள்ளும் நடிக்கும் அழுக்கு வாழ்க்கை. ( பல கணவன் மனைவிகளுக்கு படம் பார்க்கும்போது உள்ளே நெருஞ்சி விஷமாய் கேள்விகள் பரவ ஆரம்பிக்கும் ! ).
இந்த வாழ்க்கையில் வெளி உறவாக இருக்கும் ஆண் பெண் இருவரும் கணவனுக்கும் மனைவிக்கும் ” உறவை முறித்து வெளியே வா ” என்று deadline வைக்கிறார்கள். இந்த நான்கு மனங்களின் அழுக்கு ஆடு புலி ஆட்டம் இங்கே தான் ஆரம்பமாகிறது. சரி பிரியலாம் என்று கணவனும் மனைவியும் முடிவு செய்து இருவருக்கு இடையே விஷயத்தை சொல்ல நினைக்கும்போது மகனும், மகனின் dating partner ம் வீட்டிற்கு வர, அவர்களால் இந்த ” வெளி விவகாரம் ” வெளியில் வருகிறது. என்ன முடிவாகும் என்பதை ” நான் இன்னும் உமை தான் எதிர்பார்க்கிறேன் love ” என்று கணவன் பியானோ வாசிக்க .. படம் நிறைவுக்கு வருகிறது.
( நீலக் காட்சிகள் ஆங்காங்கே. ஆக .. குழந்தைகள் இப்படத்தை தவிர்க்கலாம் )
திருமண உறவில் ஏற்படும் விரக்தி, தோல்வி, ஏமாற்றம், துரோகம் .. எல்லாவற்றிற்கும் ஈர்ப்பு வெளியில் இருந்தாலும், கணவனுக்குள் எங்கோ மனைவியும், மனைவிக்குள் எங்கோ கணவனும் எதையோ எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த எதிர்பார்த்தலை சொல்ல விடாமல் ego தடுக்க …யார் முதலில் என்ற கணக்கில் இருவரும் இன்னொருவர் பேச காத்திருந்து .. மொத்தமாய் தோற்கிறார்கள் ! இது என்ன கணக்கு என்றே புரியவில்லை. ” நான் வெற்றி பெற்றேன் ஆனால் நாம் தோற்றோம் ” என்பது திருமணமாக வாய்ப்பில்லை. இருவருக்கும் தோல்வி அல்லது இருவருக்கும் வெற்றி என்று தான் திருமணம் இருக்க முடியும். அப்படி இல்லை எனில் நாடகமே வாழ்க்கை !
இந்த படத்தை பார்க்கும் கணவன்களுக்கும் மனைவிகளுக்கும் உள்ளே நிறைய கேள்விகள் பரவும். அவற்றின் பதில்கள் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதே போல அவர்களின் மனதில் கணவனை / மனைவியை பற்றி எவ்வளவு மோசமாக பேசினாலும் … ஒரு எதிர்பார்ப்பு மறைந்து நின்று கொண்டே இருக்கும். ” எல்லாம் சரியாகி விடாதா ? ” என்ற கேள்வி ஒன்று … நீறு நெற்றி போல இளித்து க்கொண்டே இருக்கும்.
ஒரே ஒரு வரியில் கணவன் மனைவி மீண்டும் இணைய வாய்ப்புண்டு என்பதே யதார்த்தம். அந்த கேள்வியும் அவர்களுக்குள் தோன்றினால் அது மிக யதார்த்தம். நம் கலாசாரத்திற்கு இந்த கதை ஒத்து வராது என்று தோன்றினாலும், நம்மில் பலர் ஆடும் ஆடு புலி ஆட்டம் கவனிக்கும்போது .. இது நடக்காத ஒன்றல்ல என்று எண்ண வைக்கிறது. தேவை எப்போதும் உடலில் இரண்டாவதாகவே நடக்கும். மனம் தான் முதலில். ஏதோ ஒன்றினை எதிர்பார்க்கும் மனம், அது கிடைக்குமிடத்தை நோக்கி முதலில் ஓடினாலும், இறுதியில் ..கணவன் மனைவி உறவின் காதலையே விரும்பும். கணவன் மனைவி காதலில் நிறைய தேவையற்றவை இருக்கலாம். ஆனால் தேவையான ஒன்று கண்டிப்பாக இருக்கிறது. என்ன அது ? ஆம். அது … கணவன் மனைவிக்கு இடையேயான காதல் !
மனித மனத்தின் அரக்க பக்கங்களை அலசும் இந்தப் படம், பலரின் மனதில் வேறு விதமான சிந்தனைகளை உருவாக்கும். அதிலும் குறிப்பாக .. மகன் வீட்டை விட்டு வெளியேறும்போது …கணவனும் மனைவியும் ஒன்றும் செய்யமுடியாமல் பார்ப்பதும், அதே நேரத்தில் கணவன் மனைவி … இருவரும் தங்களின் காதலை உணர்வதும் ( 50 வயதிலும் ) … ! என்ன ஒரு காட்சி அமைப்பு !!-சொல்ல வார்த்தைகள் இல்லை.
பலரின் மறுபக்கத்தை உரசிப் பார்க்கும் இந்தப் படம் … பார்த்த பின்பும் பலரின் மனத் திரையில் ஓடிக்கொண்டே இருக்கும்.