நான் எனப்படும் நான் 014
கவிதைகளை எழுத ஆரம்பித்தால் என்ன ஆகும் ? அதற்கு முன் .. கவிதை என்றால் என்ன ? என்று கவனிப்போம்.
ஏதோ நான்கு /பதினாறு / இருபது வரி / அல்லது / இலக்கண சுத்தமாய் எழுதுவது / வித்தியாச வார்த்தைகளில் விளக்குவது .. இவையா கவிதைகள் ? இல்லை. இல்லவே இல்லை. கவிதைகள் என்பவை நம் ரசனையின் குழந்தைகள். ரசனையின் அளவிற்க்கு குழந்தையின் அழகு இருக்கும். ஒரு பூ மலர்ந்ததை – பூ மலர்கிறது என்று எழுதலாம். அல்லது ..
” என்ன சத்தம் அங்கே ?
ஓ….
பூ மலர்கிறதோ ? ”
என்றும் எழுதலாம். கவிதை எழுதுவதில் நம் ரசனையே முக்கியம். மீதி எல்லாம் மனித Perfection பிரச்சினைகள் . கவிதைக்கென்று ஒரு வரைமுறை வைத்து அதற்குள் காண்பவற்றை கொண்டு வர முயற்சிப்பது கவிதை ஆகாது ! கவிதை என்பது அனைத்து கட்டுகளையும் உடைப்பது.
” பெருவெளியில்
இருளை அழகாக்க
நட்சத்திரங்களை விசிறிவிட்டு
நிற்கும் சாமானியன் நான். ”
என்று எழுதிவிட்டு வானம் பார்த்து சிரிக்கலாம்.
கவிதை எழுதுதல் என்பது கண்ணெதிர் நிகழ்வுகளை மீண்டும் மீண்டுமாய் வாழ்ந்து, வார்த்தைகள் வழியாக பேசுதல். மீண்டும் மீண்டுமாய் வாழ்தல் என்பது – எவ்வளவு அழகாக நடக்கிறதோ அவ்வளவு அழகாக கவிதைகள் தன்னைத்தானே பிரசவித்துக் கொள்ளும்.
குழந்தை ஒன்று தவறி விழுந்த போது ….
” எனக்கு வெளியே
தரையில் விழுந்து
தள்ளாடும் தடுமாறும்
எம் உயிர்
மீண்டும் எழும் ! ”
என்று எழுதி விட்டு மீண்டும் வாசித்தபோது . … வேறு எப்படி எழுத முடியும் என்று ஒரு கேள்வி எழுந்தது உள்ளுக்குள்.
” வேர் ஒன்று
மண்ணில் ஊன்றிக்கொள்ள
எடுக்கும் முயற்சியை
உடனிருந்து கவனித்து
உதவும் உலகம் ! ” என்றும் எழுதலாம்.
கவிதைகளை கட்டிக்கொண்டு தூங்கும்போது .. காலையில் எழும்போது முதல் நினைவாக இன்னொரு கவிதை எழுந்து வரும். உள்ளே செல்லும் கவிதைக்கு எப்போதுமே ஆயிரம் குழந்தைகள் விசிறி வீசும். அப்போது எழும் தென்றலின் சுவையை சுவைக்கும் நாக்கு .. எச்சில் வழிய அடுத்த கவிதையை சுவைக்க தயாராகும். அதுதான் கவிதையின் ஆளுமை.
யாரும் அருகில் இல்லை எனில் அந்த தனிமையை ஒரு கவிதையால் கட்டி அணைத்துக்கொள்ளலாம்.
” இறுக்கத்தை எம்
தலையணைக்கு
தானமாக கொடுத்துவிட்டு
மூச்சுக்காற்றை
முகத்துக்கு அருகில்
படரவிட்டு
தனியாக துயிலும்
தாகம் நிறை பயணி நான் ”
என்று எழுதப்படும் தனிமையை .. ஒரு கவிதையின் வரவு இரவை இருவருக்கும் பொதுவுடைமையாக மாற்றும். யார் அந்த இருவர் ? ஒருவர் கவிதை எழுதுபவர். இன்னொருவர் கவிதை. ஆக இரு உயிர்கள் பேசிக்கொள்ளும் இரவு அது. அங்கே தனிமை யாரும் சொல்லாமலேயே விடை பெறுகிறது.
நான் எனப்படும் நான் – கவிதைகளால் கட்டப்பட்டு முடிவிலி நோக்கி பயணிக்கும் பயணி. இங்கே கவிதைகள் கடைசி மூச்சுக்காற்று வரை உடன் பயணிக்கும். அப்படி பயணிக்கும் கவிதைகள் பயணியின் உலகை அழகாக்கி கொண்டே இருக்கும். பயணியின் வாழ்க்கை அழகாவதும் இப்படித்தான் !