படம் சொல்லும் பாடம் 008
Hindi Medium :
படம் பார்த்த பின், தம் பிள்ளையின் படிப்புக்கு அரசாங்க பள்ளியை தவிர்க்க நினைப்பவர்களுக்கு ஒரு பாடமும், International பள்ளிகளில் தம் பிள்ளையை சேர்க்க நினைப்பவர்களுக்கு ஒரு பாடமும் – கிடைக்கும். ஆனால் அந்த பாடம் – அழகாக, யோசிக்க வைக்கும் விதமாக, உள்ளே ஏதோ ஒன்று பிசையும் விதமாக – கொடுக்கப்படுவதுதான் இந்த படத்தின் சிறப்பு.
Irfan Khan என்ற ஒரு நடிகரை நாம் இன்னும் சரியாக உபயோகப்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அப்படி ஒரு யதார்த்த நடிப்பு. அவரின் மனைவியாக வருபவரின் நடிப்பும் அப்படியே.
தன் பிள்ளையை ஒரு பெரிய பள்ளியில் சேர்க்க நினைக்கும் கொஞ்சம் உயர்நிலை நடுத்தர வர்க்க பெற்றோர்கள் …. அந்த எண்ணம் உள்ளே வந்தது முதல் எவ்வளவு செயற்கையாக மாற வேண்டி இருக்கிறது என்பதை படம் காட்சிக்கு காட்சி உரித்து வைக்கிறது. அவ்வளவு செயற்கையாக பணக்காரர்கள் போல நடித்தும் பிள்ளைக்கு சீட் கிடைக்கவில்லை என்றதும் RTE – RIGHT TO EDUCATION என்கிற ஏழைகளுக்கான திட்டம் மூலம் அதே பள்ளியில் சேர – ஏழைகளாக நடிக்கும் அதே பெற்றோர்கள் … அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் … கடைசியில் seat கிடைத்ததா அல்லது கிடைக்காத கிடைத்த seat அவர்களுக்கு என்ன பாடங்கள் சொல்லிகொடுக்கிறது என்பதே கதை.
பள்ளிக்கு பணம் கட்ட வேண்டிய ஏழை, அந்த பணத்திற்காக காரின் குறுக்கே விழுந்து, அடிபட்டு, மிரட்டி, பெறுவது … அப்போது கேட்கப்படும் கேள்வி, அதற்கு அந்த ஏழை சொல்லும் பதில் … நமக்குள்ளே ஏதோ செய்வது உண்மை. பணக்கார நடிப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உளரும் Irfan, ஏழையின் நடிப்பில் பேச முடியாமல் அமைதியாகும் அதே Irfan … பணக்கார நடிப்பில் அசத்தும் அவரின் மனைவி ஏழையாகவும் அசத்தும் யதார்த்தம் … காட்சிகள் ஒவ்வொன்றும் உள்ளே எதையோ புரிய வைக்க முயற்சி செய்து கொண்டே இருக்கின்றன.
அரசாங்க பள்ளிகளை நாம் ஏன் ஒதுக்குகிறோம் ? என்பதை விட, உலகளாவிய பள்ளிகளை ஏன் விரும்புகிறோம் என்பதே நமக்குள் நாம் பரிசீலிக்க வேண்டிய முக்கிய கேள்வி. நுனி நாக்கு ஆங்கிலம், பகட்டான உடை மற்றும் வாழ்க்கை முறை, செயற்கை அல்லது போலியான பேச்சு … இவற்றை விரும்பும் பெற்றோர்கள் என்று நாம் ஆனபின்பு … நம் குழந்தைகள் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் அடிப்படை பண்புகளாக மேற்சொன்னவைகள் மாறுவது ஏன் நம் அறிவுக்கு எட்டுவதில்லை ?
யோசிக்க வைக்கும் படம் – பணக்கார பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்தவர்களுக்கும், சேர்க்கப் போகிறவர்களுக்கும் !