நான் எனப்படும் நான் 015
கேட்டதும் பெற்றதும் :
மனிதர்கள் பேசுவதை கேட்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் இருபது முப்பது வருட வாழ்க்கை பற்றி பேசப்படும் பேச்சை கேட்பது அவ்வளவு எளிதல்ல. சரி… கேட்க வேண்டும் எனில் என்ன செய்யலாம் ?
பொதுவாக நல்லவைகளை நாம் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் நீண்ட நேரம் பேசுவதில்லை. ஆக .. நீண்ட நேரப் பேச்சுகள் பொதுவாக ‘பிரச்சினைகள்’ பற்றியதாகவே இருக்கின்றன. அல்லது ‘ முடிவுக்கு வரா ‘ பகுதிகளை பற்றி பேசுவதாக இருக்கின்றன. அல்லது இருவருக்கு இடையேயான பிரச்சினைகள் பற்றியதாக இருக்கின்றன. அல்லது ஒரு குடும்பம் அல்லது தொழில் சார்ந்த பிரச்சினைகள் பற்றியதாக இருக்கின்றன. சில நேரங்களில் பிரச்சினைகள் பற்றிய பேச்சுகள் மிக மிக நீண்டதாக மாறும். ஒருமுறை இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்த என் ‘கேட்டல்’ காலை ஒன்பது மணி வரை நீண்டது. ஆச்சர்யமாக இருக்கிறதா ?. ஆம். கேட்டல் அவ்வளவு எளிதானதல்ல.
கேட்டலில் நாம் ஏன் பொறுமை இழக்கிறோம் ? கேட்டலை ஏன் நம்மால் தொடர்ந்து செய்யமுடியவில்லை ? கேட்டல் ஏன் அவ்வளவு எளிதானது அல்ல ? கேட்டலில் ஏன் அடிக்கடி ‘வேறு தலைப்புகளை ‘ நோக்கி பயணிக்கிறோம் ? கொஞ்சம் யோசிப்போம்.
முதலில் கேட்டல் என்பது நம் கதை அல்ல. இன்னொருவரின் கதை. இன்னும் சரியாக சொன்னால் இன்னொருவரின் பிரச்சினை பற்றிய அவரின் அவளின் பார்வை. நம் பிரச்சினைகளையே நம்மால் சொல்ல முடியாமல், அல்லது யோசிக்க முடியாமல் இருக்கும்போது இன்னொருவரின் பிரச்சினைகளை எப்படி கேட்க மனம் ஒப்புக்கொள்ளும் ? இன்னொருவரின் கோபம், விரக்தி, ஏமாற்றம், துக்கம், நகைச்சுவை, வன்மம், புத்திசாலித்தனம், முட்டாள்தனம் … இவ்வளவும் சார்ந்தே கேட்டல் நடக்கிறது. அவர் அவள் அழுதால் நானும் அழவேண்டும். [ வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் உள்ளே உணர்வுகளால் அழ வைப்பது உண்மையே ! ] அவர் அவள் சிரித்தால் நானும் சிரிக்க வேண்டும். [ சில முட்டாள்தனமான நகைச்சுவைகளுக்கும் ! ]. அவர் அவள் வன்மமாக பேசினால் எனக்கு உடன்பாடே இல்லை எனினும், என் வன்ம பிரதிபலிப்புகளை மென்மையாக காண்பிக்க வேண்டி இருக்கும். ஆக மொத்தத்தில் … சில மணி நேரங்களுக்கு “நான் எனப்படும் நான்” அங்கு இல்லாது போக வேண்டி இருக்கும். இது ஒரு வகை கேட்டல் எனில் … இன்னொரு வகை கேட்டல் இருக்கிறது.
அவர் அவள் என்ன பேசினாலும் … Non Judgemental ஆக இருந்து கேட்டல் என்பது தான் உண்மையான challenge. அவர் அவள் என்ன பேசினாலும் … நான் “என் நிலையில்” இருந்து கேட்பது என்பது – அவ்வளவு எளிதல்ல. நான் அப்படித்தான் கேட்கிறேன். என்ன பேசினாலும் நான் நானாக இருந்து கேட்டால் மட்டுமே – என்னால் நிலையாக கேட்க முடியும். இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என்று நான் அலைபாய ஆரம்பித்தால், என் நிலையை நான் இழந்து, கேட்டலில் ஒரு பக்கம் சாய வேண்டி இருக்கும். ஆனால் … இப்படி கேட்கும்போது … அதற்காக என் பக்கத்தில் இருந்து நான் எடுக்கும் efforts இல் உடல் almost அத்துணை ஆற்றலையும் இழந்து … கேட்டல் முடித்து திரும்ப வரும்போது உடல் நடக்கவே முடியாத அளவிற்கு அசந்து போகும். அப்படி ஒரு கேட்டலை கொடுக்கும்போது … என்னுடன் பேசிய அவர் அவள் நிறைவாக திரும்ப செல்வதை நான் கவனிப்பது உண்டு.
கேட்டலின் போது நான் கேட்கும் சில கேள்விகள் அவர் அவள் பேச்சின் போக்கை மாற்றிவிடக்கூடும். அதனால் நூறு கேள்விகள் மனதில் தோன்றினால் … அநேகமாக சில கேள்விகளை மட்டும் நான் கேட்பதுண்டு. அந்த கேள்விகள் அவர் அவளை யோசிக்க வைக்கும் கேள்விகளாக இருக்கும்.
சில கேட்டல்கள் வித்தியாசமானவை.
- ஒரு பயணத்தில் ஆறு மணி நேரம் பேசிய அவர் அவள் – கேட்ட நான்
- குடும்ப சந்திப்பு ஒன்றில் இரவு முழுவதும் பேசிய உறவு ஒன்று
- பயிற்சி வகுப்பு ஒன்றில் நான்கு மணி நேரம் பேசிய அவர்
- தொலைபேசியில் ஆறு மணி நேரம் பேசிய பெண் ஒன்று [ தற்கொலை செய்ய நினைத்த பொழுது அது ! ]
- அப்பாவின் மேல் இருக்கும் கோபத்தை நான்கு மணி நேரம் பேசித் தீர்த்த மகன்
- அண்ணனை பற்றி வெறுப்பாக பேசிய தம்பி – கிட்டத்தட்ட ஏழு மணி நேரம்
- நிறுவனத்தில் நடக்கும் பிரசினைகளை பற்றி ஒன்பது மணி நேரம் பேசிய நிறுவன மேலாளர்
- மனைவி சரியில்லை என்று மூன்று மணி நேரம் ஆதாரத்துடன் பேசிய கணவன்
- ஊழியர் செய்த தவறை ஆதாரத்துடன் பேசிய மேலாளர் – நான்கு மணி நேரம் சென்ற பேச்சு இது
- எதிர்கால பிரச்சினைகளை பற்றி பேசிய குடும்ப தலைவர் [ இன்னும் நடக்காத பிரச்சினைகளை பற்றிய பேச்சு அது. கேட்டலை மிகவும் சோதித்த பேச்சு அது ! ]
- முப்பது வருடத்திற்கு முன் நடந்த ஒரு பிரச்சினையை மூன்று மணி நேரம் பேசிய அவர்
- நஷ்டம் ஒன்றை பற்றி ஆறு மணி நேரம் பேசிய Founder
- தனக்கு எதிராக நடக்கும் சதியை பற்றி நான்கு மணி நேரம் பேசிய மேலாளர்
இவை எல்லாம் உதாரணங்களே. இருபது வருட அனுபவத்தில் இப்படி எவ்வளவோ ‘கேட்டல்’ அனுபவங்கள். மேற்சொன்ன அனைத்து மனிதர்களும் என்னிடம் இருந்து விடைபெறும்போது சொன்ன பொதுவான வரிகளை இங்கு சொல்ல விரும்புகிறேன். ஒரு நல்ல கேட்டலுக்கு அதுவே அநேகமான feedback.
” நன்றி ஜெய். யாரும் இவ்வளவு பொறுமையா கேட்க மாட்டாங்க. அப்படியே கேட்டாலும் சொல்கிறவர் பக்கம் இருக்கும் குறைகளை அவரிடமே சுட்டிக்காட்டும் தையிரியம் ஆச்சர்யமே. அதேபோல .. இந்த கேட்டலின் ஆரம்பத்தில் இருப்பது போலவே இப்போதும் நீங்கள் இருக்கிறீர்கள் ”
என்ன … உங்களிடம் யாரோ பேசப்போகும் அடுத்த கேட்டலுக்கு நீங்கள் தயாரா ?