படம் சொல்லும் பாடம் 010
New Life :
சிறு வயது முதலே தெரிந்த பெண். திருமணம் வரை செல்லும் உறவு. அழகான பயணம். சிறு மன உரசல். மீண்டும் புரிதல். மீண்டும் பயணம். பின் ஒரு அதிர்வு. அங்கே ஆரம்பிக்கிறது இருவரின் காதல் உயரம் ! இறுதி வரை உடன் பயணிக்கும் அவர்களின் இந்த வாழ்க்கை பல புதிய பார்வைகளை அள்ளி கொடுக்கிறது. உங்களுக்கு திருமணம் ஆகி முப்பது plus வருடங்கள் ஆகிவிட்டதா ? இருபது plus ? பத்து plus ? ஐந்து plus ? இப்போதுதான் ஆகி இருக்கிறதா ? ஆகப்போகிறதா ? அப்படி எனில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று. பெரிய செய்திகள் / உணர்வுகள் எல்லாம் ஒன்றும் இல்லை இந்தப் படத்தில். ஆனால் இருக்கும் செய்திகள் எல்லாம் நமக்கு தெரிந்த ஆனால் மறந்த செய்திகள் / உணர்வுகள்.
காதல் என்கிற புரிதலை பலவிதமாக குழப்பிக்கொள்ளும் இந்த சமூகம் அதை ஏதாவது ஒன்றாக define செய்ய முயற்சித்துகொண்டே இருக்கிறது. ஆனால் காதல் அப்படி அல்ல. நன்றாக இருக்கும்போது, பேசும்போது, சிரிக்கும்போது, சாதனைகளை அடையும்போது … பக்கத்தில் இருந்து கை தட்டி மகிழ்வது அல்ல காதல். திடீரென்று வாழ்க்கை சூழல் மாறிப்போகும். எதிர்பார்க்கா கட்டங்கள் வந்தடையும். ” எங்களுக்கு ஏன் இப்படி ? ” கணங்கள் அவை. அங்கே தோளில் கை வைத்து ” நான் இருக்கிறேன் உன்னுடன் ” என்று சொல்லும் மனிதம் காதலில் முதல் வகையாக மாறிப்போகிறது.
கதாநாயகன் கதாநாயகி – இருவரின் நடிப்பு – நடிப்பாக இல்லாமல் யதார்த்தமாக இருப்பதுவே படத்தின் மிகப்பெரும் பலம். சிறு பிரிவிற்கு பின் ” இது என் தவறு – ” என்று ஒப்புக்கொள்ளும் கணவனின் நேர்மை, அதை முத்தம் ஒன்றில் அங்கீகரிக்கும் மனைவியின் பார்வை … என்ன ஒரு யதார்த்த நடிப்பு ! ஏதோ ஒரு கடின சூழல் வந்து விடுகிறது. அங்கே கணவனும் மனைவியும் போட்டி போட்டுக்கொண்டு அன்பை யதார்த்தமாய் அளிப்பது .. கண்ணில் நீர் வரும் காட்சி. அதிலும் மொட்டை அடித்துக்கொண்டு எதிரே நிற்கும் கணவனின் பேசா மொழி … ! சொல்ல வார்த்தைகளே இல்லை !! மாமியார், மாமனார், அப்பா .. என்று அனைவரும் அன்பை விதைக்கும் ஆளாக நிற்பது இன்னும் அழகு. தன்னுடைய அப்பாவை பார்த்து ” ஹை Grandpa ” என்று ஒற்றை வார்த்தையில் தான் தகப்பன் ஆவதை சொல்லும் அழகு – எப்படி யோசிக்க முடிந்தது இப்படி !?
கதாநாயகி யின் தோழி – வருவது என்னவோ சில காட்சிகள். ஆனால் விட்டு செல்வது ஒரு புதிய வாழ்க்கையை !
பொதுவாக ஆங்கில படங்களில் காதல் வேறு தளத்தில் நிற்கும். ஆனால் இங்கு மிக யதார்த்தமாக நிற்கிறது. பிரம்மாண்டம் என்று காதலை காண்பித்து யதார்த்தவியலை, அவர்களின் படங்களில் … அவர்கள் இழந்து நிற்பார்கள். ஆனால் இந்தப்படம் .. மென்மையாக அழகாக யதார்த்தமாக சொல்லி செல்கிறது.
மனைவியுடன் / கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு வாழ்க்கையே வேண்டாம் என்று வேறு பக்கம் கவனிக்க தொடங்கி இருக்கும் ஆளா நீங்கள் ? அநேகமாக இந்தப்படம் உங்களுக்குள் சில புரிதல்களை உருவாக்கும். அப்படி ஒரு வேளை நீங்கள் புது வாழ்வை தொடங்கினாலும் இந்த படம் கொடுக்கும் clarity உங்களின் புரிதலை அதிகப்படுத்தி வாழ்வை அநேகமாக செம்மையாக மாற்றக்கூடும்.
உடலில் கலக்கும் மெது வெந்நீர் போல உணர்வுகள் ஆங்காங்கே அழகாய் கலக்கின்றன. படம் பார்த்து முடித்த பின் … வாழ்க்கை இன்னொரு புரிதலை அடைவது மிக யதார்த்தமாய் நடக்க கூடும்.
முன் வாழ்த்துக்கள் – உங்களின் அடுத்த யதார்த்த வாழ்க்கைக்கு !