படம் சொல்லும் பாடம் 011
Leisure Seeker :
இப்பொதெல்லாம் நான் பார்க்கும் சில படங்கள் என்னை மிகவும் அழகாக யோசிக்க வைக்கின்றன. மீண்டும் தமிழ் Average படங்களை பார்க்க முடியாது போய்விடும் என்று தோன்றுகிறது. ஆம். இனி மூன்று மணி நேரம் வீணாக வாய்ப்பில்லை.
உங்களுக்கு 60 plus வயதா ? கணவருக்கு 70 plus வயது ? கணவருக்கு ஏதோ ஒரு வியாதி ? நன்றாக பார்த்துக்கொள்கிறீர்கள் ? அவ்வப்போது எரிச்சல் ஆனாலும் ? – நீங்கள் இருவருமே பார்க்க வேண்டிய படம் இது. தோழமை தேவைப்படும் வயதான காலங்களின் பக்கங்களை கவிதையாய் சொல்லும் ஒரு படத்திற்கு இன்னும் கூட கொஞ்ச நேரம் செலவழிக்கலாம் என்று தோன்றியது. அது இப்படத்திற்கு கிடைத்த வெற்றி !
மகனையும் மகளையும் விட்டுவிட்டு வயதான ஜோடி ஒரு பயணத்தை ஆரம்பிக்கிறது. அவருக்கு ஞாபக மறதி வியாதி. அவ்வப்போது நினைவுகள் வரும் அழகான பக்கங்களை கொண்ட வியாதி. ஞாபகத்தோடு பேசும்போது மனைவியின் முக சந்தோஷங்களை, மறதி பேசும்போது எரிச்சல் காட்ட வேண்டிய ஆனாலும் அன்பு காட்டும் மனைவியின் முக உணர்வுகளை காண்பித்திருக்கும் கதாநாயகி க்கு என் மிகப்பெரும் salutes. இப்படியும் அழகாக நடிக்க முடியுமா ?
ஞாபக மறதி கணவன். மகளை யார் என்று கேட்பது, தான் எங்கிருக்கிறோம் என்று கேட்பது, ஒரு கட்டத்தில் மனைவியையே யார் என்று கேட்பது .. என்ன ஒரு அட்டகாச நடிப்பு அந்த Hero ! உண்மையான Hero. இலேசாக சிரித்த முகம், அழகான தாடி, நல்ல உயரம், மறதியை வெளிப்படுத்தும் ஆச்சர்யம், ஞாபகத்தை வெளிப்படுத்தும் பெருமை… வாய்ப்பே இல்லை. நான் அடிக்கடி பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று !
வயதான காலங்களில் எழும் எரிச்சல் கலந்த அன்பு ரசிக்கப்பட வேண்டிய ஒன்று. இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது – என் அப்பத்தாவின் வார்த்தைகள். ” சும்மா சிந்திக்கிட்டே இருக்காதீங்க. சொர் சொர் ன்னு. இருங்க சூடா காபித் தண்ணி வச்சி தர்றேன் “. இந்த உரையாடலில் முதல் பாதி எரிச்சல், இரண்டாம் பாதி அன்பு. முதல் பாதியை கவனிப்பவர்கள் இரண்டாம் பாதியை கவனிக்க முடியாது. இரண்டாம் பாதியை கேட்பவர்களுக்கு முதல் பாதி காதில் விழாது !
நல்ல நட்பு தான் கடைசி காலங்களில் உதவும். திருமண உறவெல்லாம் ஐந்து பத்து வருடங்களில் மறைந்து உருவாகும் அந்த அழகான தோழமை போன்ற கவிதை இவ்வுலகில் இல்லை.
உங்களின் 60 plus வயது தோழமைக்கு தயாரா நீங்கள் ?





