சேலம் – ஆக்ரா : 002
கோவை இரயில் நிலையம் சுத்தமாக இருக்கிறது. மரியாதையான ” சொல்லுங்கண்ணா ” மக்கள். வெளியே வந்து ola வா auto வா என்று யோசித்த போது, auto என்று தோன்றியது. யாரோ ஒருவர் வந்து ola வை விட 30 ரூபாய் சேர்த்து கேட்டார். ஏன் ? என்று கேட்டேன். ” திரும்ப வரும் சவாரி அவர்களுக்கு உறுதி. எனக்கு இல்லை ” என்றார். நான் சிரித்து நின்றேன். ” சரிங்க சார் .. அதே கொடுங்க ” என்றார். இருவரும் ஏறினோம்.
என் UK நண்பர் Mark auto வில் தான் பயணிக்க விரும்புவார். அதற்கு அவர் சொல்லும் காரணம் வித்தியாசமானது. அதை இங்கே பகிர்கிறேன்.
” Its a freedom car. You can see visuals in three directions / in real mode. No Glass barricade in between. Also the air comes in and gets out. AC not required. And the Driver is so next to you which enhances talking “.
ஆட்டோ driver பேசவில்லை. என்னவோ தெரியவில்லை .. சோர்வாய் இருந்தார்.
” இரவெல்லாம் ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்களா ? ” என்று கேட்டேன் ..
” ஆமாங்கண்ணா. இந்த மாத செலவெல்லாம் அதிகம். அதான் கொஞ்சம் நேரம் பார்க்காம ஓடிட்டிருக்கேன் ”
அவர் கேட்ட 30 ரூபாய் extra புரிந்தது. வலிகள் நியாயம் தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை. மனதை தொட்டு விடுகின்றன.
இறங்கும்போது அவர் கேட்ட 30 Extra கொடுத்தேன். நிமிர்ந்து பார்த்தார். கும்பிட்டு ” ரொம்ப நன்றிங்கண்ணா ” என்றார். முகம் முழுக்க மகிழ்ச்சி. AUTO வில் மனைவியும் குழந்தையும் முன்பக்க புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு இருந்தனர். வாழ்க்கையில் காரணங்கள் சரியாக கிடைத்து விட்டால் உழைப்பு அடுத்த நிலையை மிக எளிதாக அடையும் !
விமான நிலையம் என்னை வரவேற்கிறது. நிறைய மக்கள் இன்று. குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் நிறைய குடும்பங்கள்.
” தண்ணி குடி. உள்ளே அதுக்கு 100 ரூபாய் கேப்பான் ”
” அண்ணியை பார்த்துக்கோங்க. ”
” பணம் கொஞ்சமா கையில் வச்சுக்கோ ”
” எதற்கும் கவலை வேண்டாம் .. நான் இருக்கிறேன் ”
” ஜன்னல் சீட் வேண்டாம் உனக்கு. பயப்படுவே ”
மனிதர்கள் தான் எவ்வளவு வித்தியாசமானவர்கள் !? வார்த்தைகளால் அன்பை பரிமாறி கொண்டே இருப்பது அவர்களால் மட்டுமே முடியும் !
காதில் விழுந்த வார்த்தைகளில் – ” எதற்கும் கவலை வேண்டாம் – நான் இருக்கிறேன் ” மட்டும் மீண்டும் மீண்டும் காதில் விழுந்து கொண்டே இருந்தது.
ஆம். நான் அதிகம் பயன்படுத்தும் வரி அது. சான்றோர் அனைவருக்கும் அது புரியும்.
பேசுவோம்.