சேலம் – ஆக்ரா : 008
பள்ளி ஒன்றில் எம் பயிற்சி வகுப்பு இன்று. பயிற்சி வகுப்புகளில் பொதுவாக கலந்து கொள்பவர்கள் முதலில் எதிரில் இருப்பவர்களை “என்ன தெரியும் இவருக்கு இவளுக்கு ? ” என்று பார்ப்பதும், ஒரு கட்டத்திற்கு பின் .. ” கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது நிறைய ” என்று சொல்வதும், சில நாட்களுக்கு பின் ” மீண்டும் ஆரம்பிக்கிறேன் வாழ்க்கையை ” என்று சொல்வதும் கேட்டு ரசித்தாயிற்று – ஒவ்வொரு முறையும். இன்று என்ன நடக்கிறது என்று கவனிப்போம். ஒவ்வொரு பயிற்சியும் புது அனுபவம்.

நான் சென்ற பள்ளியின் வாசல் முழுக்க பூக்கள். இப்படி நான் பார்ப்பது இதுவே முதல் முறை. பார்க்கவே அட்டகாசமான காட்சி அது. படிக்கட்டுகளில் வேறு வேறு பூக்கள். குழந்தைகள் உள்ளே வரும்போதும் வெளியேறும்போதும் .. பூக்களை கவனித்து செல்வது – ஒருவித மன மகிழ் நிலை.

அந்த படிக்கட்டுகளில் இருந்த ஒரு பொம்மை என்னை வசீகரித்தது. பழைய தொட்டி, இரு மண் குடுவைகள், கொஞ்சம் வண்ணம் என்று சில விடயங்கள் .. எல்லாவற்றையும் அழகாக மாற்றி இருந்தன. Creativity எப்போதுமே புதியதாக செய்வதில் மட்டும் வருவதில்லை. இருப்பதை அழகாக உபயோகிப்பதிலும் !
பயிற்சி வகுப்பில் ஒரு ஆசிரியர் சொன்னார் .. ” நான் Trainer என்றதும் எதிர்பார்த்தது வேறு ஒருவரை. வயதான, Coat, Suit அணிந்த formal மனிதரை. ஆனால் நீங்கள் மிக யதார்த்தமாக இருக்கிறீர்கள். ஒரு Trainer ஆக உங்களை பார்க்க முடியவில்லை. ” என்றால். ” பார்க்க வேண்டாம். நானும் உங்களுடன் கற்கவே வந்திருக்கிறேன் ” என்று சிரித்தேன். பயிற்சியாளர் என்பவர் ஒன்றும் வானில் இருந்து குதித்தவர் அல்ல. நம்மை போல அவரும் ஒரு சக மனிதனே. என்ன .. அவர்கள் எல்லோரையும் வேகமாக படிக்கிறார்கள். அவ்வளவே வித்தியாசம் !

அடுத்த பள்ளியில் வியாபார சந்திப்பு. வரவேற்ப்பறையில் புத்த சிலை என்னவோ செய்தது. அதிலும் அந்த கண்கள் .. ! புத்தனிடம் பிடித்தது பல. அவற்றில் ஒன்று .. ” கடந்த காலத்தை மாற்ற முடியாது. நிகழ் காலத்தை இப்பொழுது முதல் மாற்றிக்கொள்ள முடியும் ” என்பது.
நிகழ்காலங்கள் தேவையான அளவுக்கு மாற்றப்பட்டால், நம் கடந்த காலமும், எதிர்காலமும் அழகாக மாறிப்போகும்… இல்லையா ?
யோசிப்போம்.
இந்த பதிவை Savitha Poong அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.





