சேலம் – ஆக்ரா : 009

ஆக்ராவில் சாலைகளின் அகலம் அட்டகாசம். இரண்டு ஆக்ரா பார்க்க முடிகிறது. ஒன்று குப்பையும் அசுத்தமும் நாற்றமும் நிறைந்த ஆக்ரா. இதுவே வெளிநாட்டினரை முகம் சுளிக்க வைக்கும் ஆக்ரா பக்கம். என் வெளிநாட்டு நண்பர் ஒருமுறை சொன்னார் “சேற்றில் முளைத்த செந்தாமரையாக இருக்கிறது தாஜ் மஹால். சுற்றிலும் சேறும் சகதியும் ! ” என்னை கேட்டால் இங்கே இருக்கும் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் போல சோம்பேறித்தனமான ஒன்றை பார்க்க முடியாது. எனக்கு தெரிந்து 15 வருடங்களாக ஆக்ராவின் இந்த பக்கம் அப்படியே இருக்கிறது.
அதே ஆக்ராவிற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. அட்டகாசமான சாலைகள். அழகான வீடுகள். உயர்தர வாகனங்கள். அதில் இந்தியாவிற்கு சம்பந்தம் இல்லை என்பது போன்ற மனிதர்கள். நுனி நாக்கு ஆங்கிலம். நவ நாகரிக உடை ஆண்கள், பெண்கள் !.
இதுதான் இந்திய யதார்த்தம். அனைத்து உயர்தர வாகன வீடுகளுக்கும் வெளியில் சில ரிக்ஷாக்கள் இருக்கின்றன. அதில் கால் நீட்டவும் மடிக்கவும் முடியாமல் படுத்திருக்கும் யாரோ ஒரு ஏழை பேச முடியாமல் அல்லது பேச விரும்பாமல் காத்திருக்கிறான் – சில ரூபாய் சம்பாதிக்க ! ஜனநாயகம் என்ற பெயரில், அந்த ஏழை அப்படியே வாழ்ந்து முடிவதே இந்திய வாழ்வு. அவனை கடித்துக்கொண்டே இருக்கும் ஈக்களும், கொசுக்களும் …. கூட அவனுக்கான விடுதலையை கொடுக்க விரும்புவதில்லை.
பள்ளியின் வாசல் முழுக்க பூக்கள். இன்றும் அவை எனக்குள் ஏற்படுத்திய மகிழ் அலையை உணர முடிந்தது. அவற்றின் நடுவே நின்று புகைப்படம் எடுத்து கொள்ள நான் விரும்பியதே ஆச்சர்யமே.

பள்ளியின் வரவேற்ப்பறையில் வரையப்பட்ட ஒரு ஓவியம், என்னை அப்படியே இழுக்க உடனே புகைப்படம் எடுத்தேன். அநேகமாக Siva Subbiah இந்த ஓவியம் பற்றி தன் கருத்துகளை சொல்லலாம். நான் பேச வேண்டிய seminar hall இல் அதே ஓவியத்தை யாரோ ஒரு மாணவன் அல்லது மாணவி வரைந்து வைத்ததையும் கவனித்தேன். குறிப்பாக அந்த ஓவியம் பாதி முக ஒவியம். என்னை என்னமோ செய்தது உண்மை. அந்த ஓவியத்தையும் இங்கே பகிர்ந்து இருக்கிறேன்.
மதிய வேளையில் என்னிடம் ஒரு கேள்வி வந்தது ..
” கடினமான தருணங்களில், முதல் விஷயமாக.. என்ன செய்ய வேண்டும் ? ”
கொஞ்சம் நிதானித்து சொன்னேன்.
” ஒரே ஒரு கேள்வியை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளலாம் – Is This My Personal Best ? ”
என்ன … உங்களுக்குள்ளும் அந்த கேள்வி கேட்க ஆரம்பிக்கிறதா ?
~~~~~~~~
இந்த எழுத்தினை Stalin Duraisamy அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்





