சேலம் – ஆக்ரா : 010
ஆக்ராவில் ஒரு திருப்பதி பாலாஜி கோவில் இருக்கிறது. அதிகாலையில் திருப்பதியில் பாடும் பாடல்கள் இங்கே காதுகளில். கிட்டத்தட்ட நம் ஊரில் இருப்பது போன்ற உணர்வு. சுண்டல், பிரசாதம் எல்லாம் அவ்வப்போது கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் நிறைய வடக்கிந்திய குடும்பங்கள் அங்கே வருகின்றன. அப்படி வந்த குடும்பத்தில் கணவர் மனைவி பார்த்து சொன்னார் ..
” நல்லா வேண்டிக்கோ. பணம் கொடுக்கும் சாமி. மகனுக்கு நல்ல வேலை கிடைத்து நிறைய சம்பாதிக்கணும். நன்கு வேண்டினால் கிடைக்கும் ”
நம்பிக்கைகள் தான் அத்துணை கோவில்களுக்கும் எரிபொருள். வழிகாட்டி. முதுகெலும்பு. அதுவும் எதிர்கால நம்பிக்கை. மக்கள் அனைவரும் இன்றைய நாளை இன்றைய நாள் என்று வாழ்ந்து விட்டால் கடவுள்கள் காணாமல் போவார்கள். இப்பொழுது என்று வாழ ஆரம்பித்தால் .. கடவுள்கள் தேவைப்பட மாட்டார்கள்.

சில பூக்கள் வித்தியாசமாக இருக்கின்றன. இப்பூக்களை நீங்கள் பார்த்தது உண்டா ?

#slogging செய்து முடித்த போது ரிக்க்ஷாவில் தூங்கி கொண்டு இருந்த அவரை கவனித்தேன். எந்த வசதியும் இல்லை, ஆனால் நிம்மதியான தூக்கம். என்னை ஆக்ராவில் சந்தித்த பெரிய மனிதர் ஒருவர் ” இரவு தூக்கமே வரவில்லை. மாத்திரைகள் போட்டபின்பே தூங்க முடிகிறது ” என்றார். இரு எல்லைகள். ஒன்றில் எல்லாம் இருந்து தூங்க முடியவில்லை. இன்னொன்றில் எதுவும் இல்லாமல் தூங்க முடிகிறது. இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று இருக்கிறது. மனசாட்சி சரியாக இருக்கும்போது தூக்கம் சில நொடிகளில் வரும் என்று படித்த செய்தி அது. படுத்தவுடன் தூங்க முடிந்தால் உங்களிடம் எந்த கவலைகளும் இல்லை என்று சீன proverb ஒன்று சொல்கிறது. கண்களை மூடியவுடன் தூங்குபவன் கவலைகளையும் விற்க தெரிந்தவன் என்று ஜப்பானிய பழமொழி சொல்கிறது. நீங்கள் எப்படி ? தூங்க முடியாமல் புரண்டு படுக்கும் வகையா ? அல்லது உடன் தூங்கும் வகையா ?

சாலை ஓர சவரக் கடைகளை கவனித்தது உண்டா நீங்கள் ? பொதுவாக அவர்களை கடந்து விடுவோம். அவர்களின் வாழ்க்கை அந்த சவரக் கத்தியிலும், கீறல் விழுந்த நிலைக்கண்ணாடியிலும், பழைய இருக்கையிலும் முடிந்து போகிறது. பொதுவாக பேரம் அங்கு இல்லை. வாடிக்கையாளர்கள் பற்றி அவர்களுக்கு நன்கு தெரிவதால், அவர்கள் சொல்லாமலே அவர்களுக்கு தேவையான சிகை அலங்காரம் செய்யப்படுகிறது. பொதுவாக இந்த மனிதர்கள் சிரித்து வாழ்பவர்கள். அரசியலை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துவிடுவார்கள். ( இப்போது தான் பாகிஸ்தான் தெரிகிறதா ? எல்லாம் தேர்தல் காலம் சார் ! ). இவர்களுக்கு வெய்யில் மழை போன்று பல பிரச்சினைகள். ஆனாலும் சிரித்து வாழ்கிறார்கள். இடுக்கண் வருங்கால நகுக மனிதர்கள் இவர்கள் !
அப்படி ஒருவரிடம் பேசிய போது சொன்னார் ..
” விளம்பரம் எல்லாம் செய்வதில்லை. சிரித்து தொழில் செய்தால் மீண்டும் வருவார்கள். வேறு எங்கே போவார்கள் ? ”
ஆம். இப்படி ஒரு உழைக்கும் உலகமும் நம்முடன், சாலை ஓரங்களில் .. இருந்துகொண்டே தான் இருக்கிறது.
~~~~~~~~~
Bharath Srini .. உங்களுக்கு இந்த எழுத்தினை Present செய்கிறேன். வாழ்த்துக்கள்.





