சேலம் to ஆக்ரா 013
ஒரு பள்ளி. அங்கே இருக்கும் வாசகங்கள். அதில் பொதிந்து இருக்கும் அர்த்தம். எவ்வளவு இருக்கிறது உலகில் படம் பிடிக்க ? கற்றுக்கொள்ள ?
” ஒரு விஷயத்தை செய்யும்போதே எங்களுக்கு தெரிந்து இருந்தால், அதை நாம் சோதனை என்று சொல்ல மாட்டோம். இல்லையா ? ”
என்கிற இந்த வாசகத்தில் இருக்கிறது வாழ்க்கை. ஒவ்வொரு முறை ஒன்றை செய்யும் வரை நமக்கு தெரிவதில்லை. அது அப்போது சோதனை முயற்ச்சியே. செய்து முடித்த பின் ? அது .. பாடமாகவோ அல்லது நம் செயல்முறையாகவோ .. மாறுகிறது. அல்லது நம்மை விட்டு வெளியேறுகிறது. உலகின் சோதனைகள் அனைத்தும் ஒன்றை சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஒன்று செய் அல்லது விலகு. அல்லது மாற்றிக்கொள்.

உண்மையை கண்டறிந்த பின் அது எளிது. உண்மையை கண்டறிவது ? அங்கே தான் உலக வாழ்க்கையே இருக்கிறது. கண்டறியும் வரை .. என்று ஒரு வாழ்க்கை இருக்கிறதே …அது என்ன ? மிக எளிது. அது பொய் அல்ல. ஆனால் உண்மையும் அல்ல. இடைப்பட்ட ஏதோ ஒன்று. அந்த ஏதோ ஒன்றில் … நம் வாழ்வின் எதிர்காலம் இருக்கிறது. நான் எழுத ஆரம்பிக்கும் போது அது என்னவென்று தெரியாத ஒன்று. எழுதிய பின் அதில் இருக்கும் உண்மைகள் தெரிந்தது. தெரிந்த பின் அவை என் பகுதியாக மாறின. அந்த பகுதிகளில் இன்றும் என் வாழ்க்கை அழகாக இருக்கிறது. ஆனாலும் அவை போதவில்லை என்பதால் .. தேடிக்கொண்டே இருக்கிறேன் – என் எழுத்துக்களை ! ”

ஒரே ஒரு சோதனை முயற்சி நம்மை தவறாக மாற்றும். அங்கே தான் இருக்கிறது வாழ்வின் யதார்த்தம். பல சோதனைகளில் வெற்றி பெற்றாலும் ஒரே ஒரு சோதனை முயற்சி போதும் .. நம்மை தவறு என்று உலகம் சொல்ல. சோதனை முயற்ச்சியாக செய்து தவறிய விஷயங்களை தான் உலகம் நினைவில் கொள்ளும். கடின வார்த்தைகளை உமிழும். சரியாக செய்யும்போது …? உலகம் அமைதியாக நிற்கும். ஒன்றும் சொல்லாது. அல்லது அடுத்த தவறுக்காக காத்திருக்கும் .

ஒரு நல்ல யோசனையாக இருந்தால் செய்து விடுங்கள். அனுமதி கேட்பதை விட செய்து விடுவது எளிது. செய்த பின் உலகம் அதை அனுமதிக்கும். உலகம் எப்போதுமே ஒரு மோசமான boss attitude இல் நகரும் mass logic. செய்தால் ஒன்று பேசும். செய்யவில்லை எனில் நிறைய பேசும்.

நீங்கள் வல்லுநர் என்றால் … நிறைய தவறு செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். தவறு என்றால் ஏன் பயப்படுகிறோம் நாம் ? தவறு என்பது மனசாட்சிக்கு அப்பாற்பட்டு செய்வது மட்டும் அல்ல. நல்ல எண்ணத்துடன் செய்து, result வராத எல்லாம் … இந்த உலகில் தவறுகளே. Result ஐ வைத்து தவறு சரி யை முடிவு செய்யும் இந்த உலகில் expert என்பவன் நிறைய அடி பட்டவனாகவே இருக்க வேண்டும் என்பது ” விதி ” !
பொதுவாக இந்த மாதிரியான பதாகைகள் உலகம் எங்கும் ஆங்காங்கே நமக்காக காத்துக்கொண்டே இருக்கின்றன. படித்து புரிந்தால் வாழ்க்கை யின் பக்கங்கள் நமக்கு எளிது.
என்ன இனியாவது படிப்போமா ?






