பயணக்குறிப்புகள் – சேலம் திருச்சி 01
வெயிலை நாம் ரசிப்பதில்லை. ஒரு வித எரிச்சலோடு மட்டுமே பார்க்கிறோம். நமக்கு எப்போதுமே ஒரு வித Comfort zone கொடுக்கும் குளிர் மட்டுமே பிடிக்கும். அந்தக் குளிர் கொடுக்கும் ஒரு வித அணைப்பை நாம் விரும்புகிறோம். அந்த அணைப்பை கொடுக்கும் Sweater மாதிரியான ஆடைகளை நம் கைகளால் இறுக பற்றி நடக்கும், அமரும், படுத்திருக்கும் சுகமே சுகம் !
ஆனால் வெய்யில் அப்படி அல்ல. ஆடைக்கும் உடலுக்கும் இடையில் அது ஏற்படுத்தும் ஒருவித கசகசப்பு கலந்த வியர்வையில் ஆரம்பிக்கும் எரிச்சல் உணர்வில் இருந்து தான் வெய்யில் பிடிக்காமல் போகிறது. இன்று முதன் முதலாக .. நீண்ட நாளைக்கு பின் car ஐ நிறுத்தி விட்டு, கொஞ்ச நேரம் வெயிலில் அமர்ந்து இருந்தேன். ஆம். கடும் வெயிலில். என்ன தான் செய்கிறது அது ? என்று தான் பார்ப்போமே.
38 degrees வெய்யில் உடலை சூடேற்ற, வியர்வை அரும்ப ஆரம்பிக்க .. தூரத்து வளைவு வரை ஆள் அற்ற அந்த சாலையை கவனித்தேன். மழை பெய்யும்போது மின்னும் அதே சாலை தான். வெய்யிலில் கொதித்து இல்லாத கானல் நீருடன் கலந்து நிற்கும் அது நமக்கு சொல்ல விரும்புவது என்ன ? மழையில் மின்னும் சாலைக்கு தெரிய வேண்டும் … இல்லாத கானல் நீருடனும் வாழும் நிலை வரும் என்பதையோ ?
நடக்கும் மனிதர்கள் அனைவரும் தலையில் முக்காடு அணிந்து, தலை குனிந்து செல்கிறார்கள். பழைய நினைவுகளாக இருக்குமோ ? இரு சக்கர வாகன மனிதர்கள் முகத்தை சுருக்கிக்கொண்டு வெயிலை போராடும் அழகே அழகு. எதிர்கால திட்டங்கள் அவர்களின் மனதில் ஒடுமோ ? வீட்டிற்குள் அமர முடியாமல் வாசலில் அமர்ந்து இளைப்பாறும் மனிதர்கள் ? அநேகமாக .. வாசலில் குளிர் தேடும் மனிதர்களோ அவர்கள்?
காவிரி கொதிக்கிறது. ஆங்காங்கே கோடுகளாய் செல்லும் நீர் வரி, முடிந்த அளவு மணலை சூட்டில் இருந்து பிரிக்க முயல்கிறது. ஆனாலும் …. சூரியனும், வெட்கையும், வென்று கொண்டே இருக்கின்றன. யதார்த்தம் வெய்யில். முயற்ச்சி நீர். யதார்த்தம் தான் வெல்லும்.
காவிரியில் ஒரு குளியல் போட்டு எழுந்தால் … உடல் குளிர்ந்து மீண்டும் சூடேறுவதை உணர முடிகிறது. காவிரியில் பல முறை குளித்திருக்கிறேன். ஆனால் இந்தக் குளியல் ? குளித்து எழுவதற்குள் வியர்த்து நிற்கும் உடல் ? ஆச்சர்ய குளியல் இது. ஆனாலும் யாருமற்று நிற்கும் ஆற்றிற்க்கு அருகே கொஞ்ச நேர ஆறுதலாக நனைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி !
Car கொதித்துக்கொண்டு நிற்கிறது. உள்ளே அனலாய் அடைக்கப்பட்ட காற்று. அமர்ந்து ignition ஐ on செய்வதற்குள் மீண்டும் வியர்ந்து வழியும் உடல் … ஆம். இங்கே தான் வருகிறது வெய்யில் கால எரிச்சல். நெற்றியில் வழியும் வியர்வை கண்ணில் தொட்டு, மூக்கின் மேல் ஊடுருவி .. ஹ்ம்ம்.. ஆனாலும் .. இந்த எரிச்சலும் ஓரு வித அழகே !
மதிய வெயிலை மீண்டும் சந்திக்க காத்திருக்கிறேன். நாளைக்கும். இந்த மாதம் முழுமையும். அடுத்த மாதமும். ஆம் .யதார்த்தம் தான் வெல்லும் என்று புரிந்தால் … யதார்த்தத்தை சந்திக்க காத்திருத்தல் அழகாகும்.
அழகாகிக்கொண்டு இருக்கிறது – இப்போது !