படம் சொல்லும் பாடம் – 014
யதார்த்த நடிப்புகளில் பெங்காலி படங்களை அடித்துக்கொள்ள முடியாது போல. அழகான யதார்த்தமான நடிப்பு. மொத்தமே ஆறு அல்லது ஏழு Characters. எளிய கதை. நீரோட்டம் போல வடிவமைப்பு. சரியான முடிவு.
இரு தம்பதியர். கிட்டதட்ட பிரிதலுக்கு முடிவு செய்கிறார்கள். ஒரு இணையில் பிரிந்த ஆணும், இன்னொரு இணையில் பிரிந்த பெண்ணும் யதார்த்தமாக சந்திக்க … அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுகள், இவர்களுக்கு இடையில் மீண்டும் வந்து சேரும் பழைய ஆனால் இன்னும் பிரியா மனைவி, மீண்டும் வந்து சேரும் கணவன் … ஆனாலும் … சமூக அழுத்தங்களுக்கு பணியாமல் மனம் சொல்வதை கேட்டு முடிவு செய்யும் அழகு … சுமாரான கதை. ஆனால் காட்சிகள் அசத்தல்.
தன் மனைவி எப்படியும் வருவாள் என்று காத்திருக்கும் கணவன், கணவனை பற்றி கவலைப்படா ஆனால் பின் தன் தவறை உணரும் மனைவி, மனைவியுடன் அதட்டலாக சேர விரும்பும் கணவன், கணவனுடன் மீண்டும் சேரலாம் என்று முடிவெடுத்து பின் பிரியும் மனைவி … படம் பார்க்கும்போது முடிச்சுகள் அழகாக அவிழ்கின்றன.
பிரிவதா சேர்வதா என்பது ஆம் இல்லை பதில் பெறப்பட கேட்கப்படும் கேள்வி அல்ல. அதற்கு பதிலை நீங்களோ நானோ சொல்லவே முடியாது. அதற்கு பதில் சொல்ல வேண்டியது சம்பந்தப்பட்ட மனிதர்களின் மனசாட்சி. அது ஆம் என்றால் ஆம். இல்லை எனில் இல்லை. அவ்வளவே. இதில் … சேர்த்து வைப்பது, பிரித்து விடுவது என்றெல்லாம் ஒன்று இல்லவே இல்லை. பிடித்தால் வாழலாம் இல்லை எனில் பிரியலாம். குழந்தைகள், எதிர்காலம், குடும்பம் .. ?? என்ற கேள்விகள் புரிகிறது. ஆனால் ‘சகித்து ‘ வாழ்ந்து ஒரு மோசமான குடும்பத்தை உருவாக்குவதை விட bye சொல்லி பிரியலாம். தினசரி பல COUNSELLING பார்வைகளை கடக்கிறேன். வெளியில் இருந்து சேர்ந்து வாழலாம் என்று சொல்வது எளிது. அதை போலவே பிரியலாம் என்று சொல்வதும். அதில் உள்ளவர்களுக்கு மட்டுமே அந்த நுண் உணர்வுகள் புரியும். அதை அழகாக சொல்கிறது இப்படம்.
சமீபத்தில் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறோம் என்று முடிவெடுத்து [ விருப்பமே இல்லாமல் ] வாழ ஆரம்பித்து, தற்கொலை வரை மீண்டும் சென்ற குடும்பத்தையும் பார்க்கிறேன். பிரிகிறோம் என்று முடிவெடுத்து … தவறை உணர்ந்து மீண்டும் சேர்ந்தவர்களையும் கவனிக்கிறேன். இடைவெளி என்பது முடிவல்ல. அதே சமயம் அது இணைவதும் அல்ல. அது ஒரு அழகான Replay. அதில் கிடைப்பவை முடிவு செய்யும் எதிர்காலத்தை !
பிரிய முடிவெடுத்து இருக்கிறீர்களா ? அல்லது மீண்டும் சேர நினைக்கிறீர்களா ? இந்த படத்தினை ஒரு முறை பார்க்கலாம். உள்ளே சில கேள்விகளோ அல்லது பதில்களோ கிடைக்கும். அழகாக. வலியின்றி.





