நகரும் புல்வெளி : 35
மொட்டை மாடி
கடைசியாக எப்போது வந்தோம் ? இந்த அழகான இடத்திற்கு ? ஞாபகம் இருக்கிறதா இப்படி ஒரு இடம் இருப்பது ?
ஆம். நீண்ட நாளைக்கு பின் மொட்டை மாடியில் அமர்ந்து இருக்கிறேன். இரவு 12.00 மணி. நட்சத்திரங்களும், கருவானமும், கவிழ்த்து வைத்த மௌனமும், அசையும் தென்றலும், அசையா நானும், ஆழ் மன நிறைவும் உள்ள ஒரு பொழுதில் உங்களுடன் converse செய்வதில் மகிழ்ச்சி எனக்கு.
பேட்ட படத்தில் ஒரு சாய்வு நாற்காலி இருக்குமே .. அப்படி ஒரு நாற்காலியில், படுத்து கொண்டு வான் நட்சத்திரங்களை எண்ணாமல் ரசிக்கும் நிகழ்வை எப்படி சொல்வது என்று புரியவில்லை. இந்த பகுதி இன்னும் சுத்தமாகவே இருந்திருக்க வேண்டும். தொழிற்சாலைகள் ஏதோ ஒரு நியாயத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும் என நினைக்கிறேன். பின்னே ?நட்சத்திரங்கள் தெரிகின்றனவே !! ?
பெருவெளியை நாம் படங்களில் மட்டுமே கவனிக்கிறோம். ஆகையால் மொட்டை மாடிகள் உதாசீனப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மொட்டை மாடியும் பெருவெளியின் மடி. அங்கே அமர்ந்தால் .. விண்வெளி பாடும் தாலாட்டு கேட்கும். ஆம். நாம் அமைதியாக இருந்தால் !
சுற்றி கிடக்கும் வீடுகளை கவனிக்கிறேன். பொருளாதார போருக்கு பின் ஓய்ந்து உறங்கும் மனிதர்கள். தினம் ஒரு போர் அவர்களுக்கு. இரவு என்பது போர் விடுமுறை. இதில் வாழ்க்கையையும் வாழ்ந்து, குழந்தைகள் பொறுப்பினை ஏற்று மறுநாள் போர் புரிய செல்லும் .. அவர்கள் இப்போதாவது நிம்மதியாக உறங்கட்டும் என்று தோன்றுகிறது எனக்கு. இரவின் அமைதியில் தான் பொருளாதார போர்கள் கொஞ்சம் ஓய்ந்து போகின்றன.
எங்கோ ஒரு வீட்டின் ஜன்னல் விளக்கொளி இவ்வளவு இருட்டிலும் தனித்து நிற்கிறது. ஆம். இருளில் மிளிரும் விளக்கு எப்போதும் அழகு.
ஏதோ ஒரு சாலையில் நகரும் அவசர வாகனம் ஒன்று. இன்னும் பொருளாதார போர் ஓயவில்லை அந்த மனிதனுக்கு. பாவம் !
பல மொட்டை மாடிகளை கவனிக்கிறேன். வெற்று மாடிகளாக அவை நிற்பதை கவனிக்கும்போது .. மனிதர்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கி இருப்பதாகவே தோன்றுகிறது எனக்கு. நாளை காலை எழுந்தால் மட்டுமே வாழ்க்கை அவர்களுக்கு நிச்சயம் ! நமக்கும் தான். எனக்கும் தான்.
இந்த மொட்டை மாடியில் இருக்கும் செடிகளின் அருகாமையில் அவை அசையும் சத்தத்தை கவனிக்க முடிகிறது. இவ்வளவு அழகான சத்தமா பகலில் காணாமல் போகிறது ? ஆம். மனித இரைச்சலில் மற்ற அழகுகள் தொலைவது இயற்கையே !
எங்கெங்கோ செல்கிறோம். Swiss, ooty என்றெல்லாம் பேசுகிறோம். மொட்டை மாடி செல்கிறோமா ? யோசிப்போம்.
Inviting ..





