நம்பிக்கை மனிதர்கள் 004
” தம்பி .. இது 500 ரூபாய். எனக்கு இவ்வளவு வேண்டாம் ”
அப்போதுதான் கவனித்தேன். ஏதோ ரூபாய் கொடுக்க நினைத்து 500 ரூபாய் கொடுத்து இருக்கிறேன். அட.. அதை அவர்களும் திருப்பி கொடுக்கிறார்கள் ! இது நம் உலகில் தான் நடக்கிறதா ?
பெயர் ; உரையாத்தா
விழுப்புரம் தாண்டியவுடன் இருக்கும் CCD யில் முன்னே இருக்கும் மரத்தின் கீழே அமர்ந்து இருப்பார். CCD வந்து மனிதர்கள் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும்போது அருகே வருவார். கொடுத்தால் வாங்கிக்கொள்வார். இல்லை எனில் சென்று மீண்டும் அமர்ந்து விடுவார்.
” 500 ரூபாய் என்று திருப்பி கொடுக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன் ”
” இல்லப்பா. அவ்வளவு வேண்டாம் எனக்கு. நீ கொடுக்க நினைத்ததை கொடுத்தால் போதும். இதெல்லாம் நிலைக்காது ”
” உங்க வயசென்ன இருக்கும் ? ”
” நீயே பார்த்துக்கோப்பா. 60 இருக்கும் ”
அமைதியாக பார்த்து சிரித்தேன். ஏழ்மையிலும் நேர்மை. படித்து இருக்கிறேன். பார்க்கிறேன் இப்போது நேராக.
” உங்க குடும்பம் ? ”
” ஒரே மகள். மஞ்சள் காமலையால் இறந்துவிட்டாள். ”
” மருமகன் ? ”
” குடிச்சு குடிச்சே செத்து போனார் ”
” குழந்தைங்க ? ”
” பேரன், பேத்தி.. இரண்டு பேரும் படிச்சிட்டு இருந்தாங்க. முடியல. இப்போ வேலைக்கு போறாங்க ”
அதிர்ந்து போய் நின்றேன். இந்த சூழ்நிலையிலும் 500 ரூபாய் திருப்பி கொடுக்கிறார்.
” நான் படிக்க வைக்கவா ? ”
” வேண்டாம் பா. அதுங்களுக்கு என்ன எழுதி இருக்குதோ அது நடக்கட்டும் ”
” நான் படிக்க வைக்கணும்னு கூட எழுதி இருக்கலாம் ல ”
நிமிர்ந்து பார்த்து அழகாய் சிரித்தார். ( பணம் வைத்திருக்கும் எத்தனை பேரால் இப்படி சிரிக்க முடியும் ? )
” நல்லா பேசறீங்கப்பா ”
அமைதியாக இருந்தார்.
இங்கே CCD க்கு வரும் குழந்தைகளை பார்க்கும்போதெல்லாம் அவருக்கு என்ன தோன்றி இருக்கும் ?
கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பினேன். கடைசி வரை ஒத்துக்கவில்லை. எப்படியாவது பேசி அவரை சம்மதிக்க வைக்க வேண்டும். அந்த குழந்தைகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளே. அவர் அனுமதியுடன் !
இப்படி மனிதர்களும் இங்கேதான் வாழ்கிறார்கள். நாமும் இங்கேதான் வாழ்கிறோம். அவர்களை கவனிக்காமல். அல்லது கவனிக்க விரும்பாமல். அல்லது அவர்களை மனிதர்களாகவே சேர்க்க விரும்பாமல் !
யோசிக்க வேண்டிய தருணம் இது.
செல்லும்போது கண்ணாடியை இறக்கி விட்டு ” போய் வருகிறேன் ” என்று சொன்னேன்.
” மெதுவா போப்பா. உம் மனசுக்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும் ”
என்று சொல்லிய அந்த நம்பிக்கை மனிதரை நினைத்துக்கொண்டே வாகனம் செலுத்தினேன்.
மனிதர்கள் தான் எவ்வளவு ஆச்சர்யமானவர்கள் !





