நகரும் புல்வெளி : 37
நான் எடுத்த புகைப்படங்களிலேயே இந்த படம் மிகவும் வித்தியாசமானது. ஒரு தும்பிக்கும் ஹெலிகாப்டருக்குமான போட்டியாக இது தெரிந்தாலும், இது எதேச்சையாக நடந்தது, காமெராவுக்குள் இரண்டும் ஒரே நேரத்தினில் வந்து விழுந்த அதிசயமாய் இது நடந்தது. இமயமலை சென்று விட்டு கொல்கத்தா வழியாக விசாகபட்டினம் வந்து தங்கி, காலை புகைப்படப்பிடிப்புக்கு சென்ற போது இயற்கை எனக்கு வழங்கிய ஒரு அபூர்வம் இந்த புகைப்படம். இந்த புகைப்படம் சில பாடங்களை கற்று தருகிறது. தும்பி, ஹெலிகாப்டர் இரண்டுமே பறந்தாலும், தும்பிக்கு எந்த ஒரு ராணுவ, தனி நபர் பயிற்சி நிறுவனமும் பறக்க சொல்லி தரவில்லை. எந்த சான்றிதழும், எல்லைகளும் தும்பிக்கு கிடையாது. நினைக்கும்போது பறக்கவும், நினைத்தவுடன் அமரவும் அதற்கு இயற்கை சுதந்திரம் வழங்கி இருக்கிறது. எந்த நாடும் தும்பி பறக்க தடையும் விதிப்பதில்லை. போரும் புரிவதில்லை. மனிதர்களின் சட்டங்கள் விநோதமானவை. இயற்கையின் சட்டங்கள் பொதுவானவை. இமயமலையினில், சீன எல்லைக்கருகில் நின்றிருந்தபோது, எனக்கு சிரிப்பு வந்தது. எல்லாமே மண். இயற்கை எங்கே எல்லை வகுத்தது? நாம் தான் வகுத்தோம். நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம், வீட்டுக்கு வீடு, மனிதர்களுக்கு மனிதர்கள்… நம் மனங்கள் குறுகி விட்டனவா ? நாம் பரந்த மனப்பான்மையுடன் யோசிப்பதாய் நினைத்து, அருகேயே தொலைந்தது போல் வாழ்கிறோமோ ? அல்லது அருகிலேயே தொலைந்திருக்கிறோமோ ? சற்று யோசித்தால், எந்த எல்லைகளும் இல்லா விட்டால் என்ன என்றே தோன்றுகிறது … யாதும் ஊரே என்று யாவரும் ஏன் கேட்க மறுக்கிறோம் ? நாம் வாங்கும் சொத்துக்கள் நமக்கு பிறகு என்னவாகின்றன ? நம் சொத்துக்களில், எந்த மண்ணிலாவது, நம் பெயர் பொறிக்கப்படுகிறதா? அப்படி ஈதேனும் ஒரு நிலத்தை காட்ட முடியுமா ? நாம் இறந்த பின், இறக்கும் முன் ….நிலங்கள் நிலங்களாகவே தானே இருக்கின்றன ? என் தாத்தா பெயரில் வாங்கிய சொத்துக்கள் இன்று என்னவாயின? என் கொள்ளு தாத்தா பெயர் எந்த நிலத்திலாவது பொறிக்கப்படட்டதா? ஒரு காகித பெயருக்ககவா இத்தனை ஓட்டம் ? காகிதம் கூட மரத்தை அழித்து செய்யப்பட்ட ஒன்று தானே ? எத்தனை நாள் இந்த கணக்குகள் எல்லாம் உயிர் வாழப் போகின்றன ? நம் இறப்புக்கு பிறகு, நம் பெயர் பொறித்த காகிதங்களும் இறந்ததாகதானே அர்த்தம்!. இயற்கையின் விதிமுறைகள் இலகுவானது. எல்லோருக்கும் எல்லாமுமாய்…. பெற்றுக்கொள். பெற்றதை கொடுத்து விடு… இவ்வளவுதானே இயற்கை? ஏன் இப்படி எல்லை வகுத்து ‘கொல்’கிறோம் ???? ….. சிறிது யோசிப்போம். தேவைகள் அளவுக்குள் வர மறுப்பவை. மனம் மட்டுமே தேவைகளுக்கு அளவுகளை கொடுக்க முடியும். எளிமையான வீடு, உணவு, உடை ஒரு தெய்வீக சுகம். வளர்ச்சியை குறைக்க வேண்டியதில்லை. எளிமையை அதிகப் படுத்துவோம். அந்த தும்பிக்கும், ஹெலிகாப்டருக்கும் என் மனப்பூர்வ நன்றிகள்… !