நகரும் புல்வெளி : 38
அந்த அதிகாலையில் ஐந்தரை மணியளவில் இந்த மனிதரை நான் திருச்சி காவேரி ஆற்றின் உட்பகுதியினில் சந்திக்க நேர்ந்தது. மஞ்சளும் காவியும் கலந்த வண்ணத்தில் தலைப்பாகை, எலும்புகள் வெளியே தெரியும் ஒடிந்த ஆனால் உறுதியான தேகம், தன் வேலையில் முழு கவனம் கொள்ளும் கூர்மையான கண்கள், கிழியாத ஆனால் பழைய உள்ளாடை, இரண்டு அழுக்கு பைகள், ஒரு மூங்கில் கூடை, நிறைய துணிச்சல், முழுமையான முயற்சி, மென்மையான வார்த்தைகள், பணிவான உடல் மொழி, கொஞ்சம் தத்துவம், நிறைய எதார்த்தம் … இதுதான் இந்த மனிதர். இந்த எழுபது வயது மனிதரின் அரை மணி நேர அனுபவப் பேச்சு எனக்குள் இருந்த என் உழைப்பு பற்றிய கொஞ்ச நஞ்ச ஆணவத்தினையும் மொத்தமாய் அழித்தது.
அந்த அதிகாலையினில் என்னை இந்த மனிதர் ஈர்த்ததற்கு ஒரே காரணம் அவரின் வயதும் அந்த வயதிலும் அவர் காட்டிய வேகமும் உழைப்பும். மீன் பிடிப்பது என்பது பலருக்கு வேலையாக அல்லது சாதாரண வேலையாக தெரியலாம். ஆனால் அவருக்கு அப்படி அல்ல. அவருக்கு அதுதான் எல்லாமே … ” காலை ஒரு நாலு மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். மூணு மைல் தொலைவில் தான் என் வீடு. அங்கேருந்து மிதிவண்டியில் ஆற்றுக்கு வந்து விடுவேன். காலை நேரம் மீனை பிடிக்க மிக உகந்தது. இந்த வலையும், பைகளும், மூங்கில் கூடையும், தலைப்பாகையும், உள்ளாடையும் தான் எனக்கான மொத்த சொத்து. ஒரே ஒரு வேட்டி வைத்திருக்கிறேன். மிதிவண்டியில் செல்லும்போது மட்டும் உடுத்தி கொள்வேன். அந்த உலகத்திற்கு அந்த வேட்டி தேவைப்படுகிறது. இந்த உலகத்திற்கு உள்ளாடை மட்டும் போதும். தினமும் வலை வீசுகிறேன். வலை வீசுவதற்கு முன் இயற்கையிடம் மெதுவாக மனதிற்குள் பேசுவேன். அது எனக்கான மீன்களை என்னை நோக்கி அனுப்பும். ஒரு நாளும் இயற்க்கை என்னை ஏமாற்றியது இல்லை. மனிதர்கள் தான் தவறான, கட்டுபடியாகாத விலைகளை பொய் காரணங்கள் சொல்லி ஏமாற்றியிருக்கின்றனர்.” – அவர் பேசப் பேச அவரை பற்றிய பரிமாணம் உள்ளே மாறிக்கொண்டே வந்தது. மெதுவாக கேட்டேன்… ” ஒரு வேளை மீன்கள் கிடைக்கவில்லையெனில் அதே இயற்கையிடம் கோபப்பட்டிருக்கிறீர்களா … ?” … சிரித்துக்கொண்டே சொன்னார் ” இயற்கையிடம் ஒரு நாளும் கோபப்ப்பட்டது இல்லை. கோபமெல்லாம் என் மேல் தான் பட்டிருக்கிறேன். வலை என்னிடம் இருக்கிறது. வலை வீசுகின்ற சக்தி எனக்குள் இருக்கிறது. எந்த இடத்தினில் வீச வேண்டுமென்ற அனுபவ அறிவு என்னிடத்தில் இருக்கிறது. இது இரண்டும் என் கட்டுப்பாட்டினால் இருக்கிறது. ஓடும் நீர் என் கட்டுப்பாட்டினால் இல்லை. மீன்கள் என் கட்டுப்பாடினில் இல்லை. என் கட்டுப்பாட்டுக்குள் என்ன இருக்கிறதோ அதை வைத்து தானே எனக்கு வெளியே இருப்பதை நான் தேட வேண்டும். இயற்கை எனக்கு வெளியே என் கட்டுப்பாடினில் இல்லாதது. அதன் மேல் நான் ஏன் கோபப்பட வேண்டும்…? கோபமெல்லாம் எப்போதும் என் மேல் தான். ஓரிடத்தினில் மீன்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லையெனில், அடுத்த இடத்தை நோக்கியோ அல்லது சிறிது நேரம் காத்திருந்தோ நான் நினைத்ததை அடைந்து விடுவேன். எனக்கான மீன்கள் எனக்கு அருகிலோ அல்லது என்னை நோக்கியோ வருகின்றன என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை.மீன்கள் கிடைக்கவில்லை எனில் தவறுகள் மீன்களிடம் இல்லை. என்னிடம் மட்டுமே !” நான் மொத்தமாக அமைதியாகிப் போனேன். பெரிய பெரிய நிறுவனங்களில் நடத்தப்படும் வியாபார பாடங்களை எவ்வளவு அழகாக சொல்ல முடிகிறது இந்த மனிதரால் என்று ஆச்சர்யமாக இருந்தது.
உடல்நிலை பற்றி அவரிடம் கேட்க தோன்றியது. எனக்கு. கேட்டபோது, மெதுவாக சிரித்து கொண்டே சொன்னார்…” உழைப்பை சரியாக வைத்து இருப்பவனுக்கு உடல் முழு உதவியும் செய்யும். இந்த உலகின் முதல் பிரச்சினையே உடனே பணம் பண்ண நினைப்பது தான். இங்கே தான் உழைப்பு குறைந்து, பொய், திருடு, சூது, அகங்காரம், ஆணவம், போலித்தனம் எல்லாம் வருகிறது. நன்றாக உழைப்பவனிடம் இதெல்லாம் இருப்பதில்லை. எனக்கு வயது எழுபது. இதுவரை ஒரு இரண்டு அல்லது மூன்று முறை மருத்துவரிடம் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் சரியாக உழைக்காததால் இங்கே வந்திருக்கிறேன் என்று நினைத்து கொள்வேன். எலும்புகளும் தோலும் நன்கு உழைப்பதற்கே – பெருப்பதற்கு அல்ல ! குறைந்த உணவு, அதிக உழைப்பு, பசிக்க பசிக்க மீண்டும் குறைந்த அளவு உணவு, அதிக நீர் … இவ்வளவு தான் எனக்கு தெரிந்தது. என் வாழ்க்கையில் எந்த கவலையும் இல்லை. உடலில் எந்த பிரச்சினையும் இல்லை. “. எவ்வளவு யதார்த்தம் !
மெதுவாக அவரின் வேலைகள் முடிவுக்கு வந்தது. மூங்கில் கூடை முழுக்க மீன்கள். கிளம்ப தயாரானவர் விடை பெரும் தொனியில் பேச ஆரம்பித்தார் …. ” நீங்கள் என்னுடன் பேசியதில் மகிழ்ச்சி. என்னை புகைப்படம் எடுத்ததும் மகிழ்ச்சி. எனக்கு நேரமாகிறது. பொதுவாக நான் யாரிடமும் இவ்வளவு பேசியதில்லை. என்னமோ தோன்றியது, பேசினேன். ஏதாவது தவறாக இருந்தால் மன்னியுங்கள் ” என்று சொல்லிவிட்டு என் பதிலுக்கு எதிர்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தார். அத்தனை பணிவான நடையை அங்கே தான் நான் பார்த்தேன். அவரின் நடையுடன் எனக்குள் இருந்த பல தேவையற்றவைகள் என்னை விட்டு நடக்க ஆரம்பித்தன. நான் எதனையோ இழந்து, எதனையோ பெற்று திரும்பி நடக்க ஆரம்பித்தேன். அந்த மனிதர் எனக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் மிகப் பெரியவை. இன்று வரை என்னுள் அவை செடி மரமானதைப்போல் வளர்கின்றன. ஏனோ தெரியவில்லை அவரின் பெயரை நான் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. சில மனிதர்களுக்கு பெயர்கள் தேவையில்லை. அவர்களின் அருகாமை உணர்வே நமக்கு போதும். நான் இன்றும் அவர் என்னுடன் இருப்பதை உழைப்பால் உணர்கிறேன். நீங்களும் உணர்கிறீர்களா ?