நகரும் புல்வெளி : 39
இங்குதான் இருக்கிறது இந்த உலகமும் :
அந்த சாலைகள் மௌனமாய் இருக்கின்றன. குளிர்சாதன வசதியுடன் ஊர்ந்து செல்லும் வாகனத்தில் மனிதர்கள் சிரித்து கொண்டு மறைவதை பார்க்கும்போதும், திறந்த வெளி மேற்கூரை வாகனத்தில் அந்த இளம்பெண் கையை விரித்து கொண்டு, மயிர்கற்றை உதிரியாய் பறக்க மறைவதை ரசிக்கும் போதும், இரண்டு சக்கர வாகனத்தில், கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டே பயணிக்கும் மனிதனை கவனிக்கும் போதும், காலை நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் நடுத்தர வயது ஆணை கடக்கும்போதும், குடும்பம் விட்டு விலகி கணவனுடன் கொஞ்சம் உரிமையாய் பேசும் மனைவியை உணரும்போதும், யாரும் இல்லை என தெரிந்ததும் அவனுக்கு கொடுத்த முத்தத்தில் அதிர்ந்து பின் மகிழும் அவனை ரசிக்கும் போதும், மழை வரலாம் என்பதற்காக மஞ்சள் குடை பிடித்து நடக்கும் இளம் பெண்ணின் எச்சரிக்கையை நினைக்கும்போதும் சாலைகள் மௌனமாய் இருக்கின்றன. இந்த பெண்மணி தலைக்கு மேல் வருமானத்தையும் , நடையில் வாழ்க்கையையும் சுமந்து கொண்டு நடக்கும்போதும் அதே சாலைகள் மெளனமாக இருக்கின்றன. ஆனால் இந்த பெண்மணியுடன் மட்டும் வாழ்க்கையை பேச விரும்புகின்றன. அதற்க்கான காரணம் அந்த சாலைகளுக்கு மட்டுமே தெரியும்.
ஒருமுறை இப்படி சுமந்து செல்லும்
ஒரு பெண்மணியிடம் பேசினேன் … ” விறகுகளை தான் எடுத்து செல்கிறேன். வீட்டில் அடுப்பெறிக்க உதவும். கொஞ்சம் கூட சுமந்தால் விற்கவும் முடியும். ” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் அந்த பெண்மணி. ” நான் உதவட்டுமா ” என கேட்ட என்னை வித்தியாசமாய் ஒரு கணம் நின்று பார்த்த அந்த பெண்மணி ” இன்று உதவி கிடைத்து விடும். நாளை எதிர்பார்க்கும். நாளை மறுநாள் யாரும் உதவவில்லையே என்ற வெறுப்பு வரும். வேண்டாம் தம்பி. ஆனால் சொன்னதில் மனசுக்கு சந்தோஷம். திருமணத்தின் போது வயிற்றில் சுமந்தேன். இப்போது வரை தலையில் சுமக்கிறேன் ” என்று சொல்லியவாறு நடந்த அந்த பெண்மணியின் கடைசி வரிகள் பாதம் முழுக்க குத்திய முற்களாய் வலித்தது.
ஏதோ செய்ய வேண்டும் என தோன்றுகிறது … ஆனால் என்ன செய்ய வேண்டும் என்றுதான் தெரியவில்லை. அதே சாலையில் என் வாகனத்தில் நான் செல்கையில் மனம் கனக்கிறது. சம்பாதிக்கிறோம். வாழ்கிறோம். இப்படி ஓடும் வாழ்க்கையில் இந்த பெண்மணியின் வரவு அதிர்வை ஏற்படுத்துகிறது. ‘வயிற்றில் தலையில் சுமந்த’ அவளின் பேச்சு எனக்குள் என்னவோ செய்கிறது. உலகை ஒருவனால் சரிசெய்துவிட முடியாது என எங்கோயோ படித்த வரிகள் சமாதானமாய் வந்து ஆறுதல் சொன்னாலும் … ஏதோ செய்ய வேண்டும் என மனம் மனக்கணக்கு போடுகிறது. உதவி என்ற பெயரில் அடிமையாக்கிவிடாதே என படித்த வரிகளும் நினைவு திரையில் வார்த்தைகளாய் உருள்கின்றன. எங்கோ ஒரு வழி இருக்க வேண்டும். ஏழை பணக்காரன் என்ற இரு பிரிவு அற்ற எல்லாம் சமமே என்ற ஒரு பிரிவிற்கு ஏதோ எங்கோ எப்படியோ ஒரு வழி இருக்க வேண்டும் என மனசு சொல்லியது. நான் அந்த பெண்மணியிடம் இருந்து விடை பெறும்போது அந்த பெண்மணி சொன்னது மீண்டும் நினைவில் ஊர்ந்தது … ” எத்தனையோ வாகனங்கள் செல்கின்றன. எல்லோரும் சிரித்துக்கொண்டே செல்வார்கள். அவர்கள் சிரிப்பது வேறு எதற்காகவோ இருக்கலாம். ஆனால் எனக்கு வலிக்கும். இப்படி ஒரு வாழ்க்கை என் வாழ்வில் இல்லை. என் பிள்ளைகளின் வாழ்வில் வரலாம். அதுவரை நான் இருப்பேனா என தெரியவில்லை. ஆனால் நீங்கள் நின்று பேசியது மகிழ்ச்சி.”
எனக்கெனவோ இப்போதைக்கு இதையாவது செய்வோம் என தோன்றுகிறது. இப்படி செல்லும் மனிதர்களிடம், அவர்கள் விரும்பினால், கொஞ்சம் மணம் விட்டு பேசுவோமே. அவர்களின் தலை பாரத்தை அவர்களே சுமக்கட்டும். அது எழுதப்பட்ட விதியாககூட இருக்கட்டும். ஆனால் மனப்பாரத்தில் கொஞ்சம் பகிர்வதால் அந்த உடல் இலேசாக ஆகட்டுமே.
இங்குதானே இருக்கிறது இந்த உலகமும். இங்குதானே இருக்கிறார்கள் இந்த மனிதர்களும்.
பேசுவோமா ?