நகரும் புல்வெளி : 36
சில நேரங்களில் நம் கண் முன்னே நடக்கும் நிகழ்வுகள் நமக்கு அதுவரை கற்காத பாடத்தினை எளிமையாக கற்க வைத்து விடும். புகைப்படம் எடுப்பதற்காக காவிரி ஆற்றின் அருகினில் நான் அமர்ந்து இருந்த போது இந்த காட்சி என் கண்ணில் விழுந்தது. அந்த வயதான அம்மாவிற்கு சுமார் எழுபத்து ஐந்து வயது இருக்கலாம். நடக்க முடியாமல் ஊர்ந்து ஊர்ந்து தன் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கும் ஒரு பெண்மணி அவர். இந்த மனிதர் அந்த பெண்மணிக்கு பிச்சை இட்ட பின், நான் அமர்ந்து இருந்த இடத்திற்கு அருகில் வந்து நின்றார். மெல்லிய தேகம், அவரின் முகத்திலும் வறுமையின் கோடுகள் வயாதாகி தெரிந்தன. சிறிது நேரம் அமைதியாக நின்றவர் தேநீர் விற்கும் பெரியவரிடம் சொன்னார் ” கொஞ்சம் ஸ்ட்ராங்கா டீ போடுங்கய்யா… இருந்த காசை அந்த அம்மாவுக்கு கொடுத்திட்டேன். நீங்க போடற டீ தான் எனக்கு காலை உணவு ” என்று சொல்லி சிரித்தார். கொஞ்சம் அதிர்ந்து, பிறகு சந்தோஷமாக இருந்தந்து எனக்கு. மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள். மனிதம் நிச்சயம் வாழும் என்ற நம்பிக்கை வேர் இன்னும் மனதிற்குள் பத்திரமாகத்தான் இருக்கிறது.
கொஞ்சம் மெதுவாக யோசித்து பார்த்தால், உதவி என்பது ஒரு மென்மையான அனுபவமாக தெரிகிறது. தேவை எனும் போது கொடுக்கப்படும் உதவி, எப்பேர்ப்பட்ட மனிதனையும் கையெடுத்து கும்பிட வைக்கிறது. எதிர்பார்க்காமல் கிடைக்கும் உதவி அதுவரை பார்த்திராத கடவுளை கண் முன்னே நிறுத்துகிறது. இந்த உலகில் ‘எதுவும் நடக்கலாம்’ என்பது உள்ளவரை உதவி என்ற சொல் ஒலித்துக்கொண்டே இருக்கும். உதவி பெறுவதும் உதவி செய்வதும் என்னை பொறுத்த வரை ஒரு பிரசவ அனுபவமாக தெரிகிறது. செய்யப்பட்ட உதவி தேவையை நிறைவு செய்யும் போது பிறந்த குழந்தையை பார்த்த மகிழ்ச்சி மனதிற்குள் எழுகிறது.
உதவி என்று நினைத்தாலே நமக்கு பெரிய உதவிகள் மட்டுமே நினைவுக்கு வருவது ஏன் என்று புரியவில்லை. உதவியில் பெரிய உதவி, சிறிய உதவி, மறக்க முடிந்த உதவி, மறக்க முடியாத உதவி என்றெல்லாம் எதுவுமில்லை. தன்னால் முடியாத எதுவும் பிறரால் செய்யப்படும் போது அது உதவி என்ற பெயரை பெற்று கொள்கிறது. கீழே விழும் மூட்டையை தாங்கி பிடிப்பது, அருகில் அமரும் தெரியாத மனிதர்க்கு சில அங்குலங்கள் தள்ளி அமர்ந்து இடம் அளிப்பது, நிற்கும் வயதானருக்கு உட்கார இடம் அளிப்பது, இரு சக்கர வாகனத்தை தள்ளி செல்லும் மனிதர்க்கு தேவையான உதவியை செய்வது, கட்டிலில் இருந்து எழ முடியாமல் தவிக்கும் முதியவருக்கு எழ உதவுவது, அழும் குழந்தையை சிரிக்க வைப்பது… எல்லாமே உதவிகள் தான். எந்த உதவியும் கொடுத்த, பெற்ற கணத்தினில் ஒரு சிரிப்புடன் அனுமதிக்கப்படுவது மனித இனத்தினில் மட்டுமே சாத்தியம். எனக்கு உணவு கொண்டு வரும் வயதானவர்க்கு ஒரு கைக்கடிகாரம் வாங்கி அவரின் கையில் அணிவித்தேன். அப்போது அவர் சிரித்து சொன்னது இன்னும் ஞாபகத்தினில் இருக்கிறது. ” சின்ன வயசுலேர்ந்து இந்த கலர்ல கட்டிக்கணும்னு ஆசை தம்பி. ரொம்ப நன்றி ” என்று சொல்லி விட்டு அவர் சிரித்தது இன்னும் மனக் கணினியில், பதிவுக்கோப்பினில் வெளிச்சமாக இருக்கிறது. உதவி பெறும் கொடுக்கும் நேரச் சிரிப்பினில் தான் மனிதனின் உண்மையான சிரிப்பு வெளிவருகிறது. எனக்கு தெரிந்த ஒரு வயதான மனிதர் ஒரு விலை மாதுவின் பெண்ணை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அந்த விலை மாது அவரை அப்பா என்று சிரித்த முகத்துடன் அழைப்பதை நான் கேட்டிருக்கிறேன். உதவி உறவுகளை புனிதப் படுத்துகிறது.
கடைசியாக எப்போது யாருக்கு நீங்கள் உதவினீர்கள் ? நன்கு படிக்கும் ஆனால் மேற்கொண்டு படிக்க முடியாத மாணவனுக்கு,மாணவிக்கு உதவி செய்து இருக்கிறீர்களா ? தனியாக தவிக்கும் வயதானவர்களுடன் கொஞ்ச நேரம் செலவழித்து இருக்கிறீர்களா ? மனைவி தலை வலித்து சிரமப் படும் போது தலை கோதி இருக்கிறீர்களா ? காலில் அடிபட்ட நாயை மருத்துவரிடம் கொண்டு சேர்த்திருக்கிறீர்களா ? உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ மனையினில் இருக்கும் உங்கள் உடன் இருந்த ஒருவரை போய் பார்த்து நம்பிக்கையை கொடுத்தீர்களா ? தவறி விழுந்த குழந்தையை தூக்கி நிறுத்தி, சேதமடைந்த தோல் பகுதியை கழுவி இருக்கிறீர்களா ? ஒரு தேநீர் வாங்கும் போது அருங்கில் நின்று கொண்டிருக்கும் பிச்சை மனிதர்க்கு ஒன்று சேர்த்து சொன்னதுண்டா ? உணவகத்தினில் தட்டு கழுவும் பையனை பார்த்து, பாராட்டி பரிசளித்தது உண்டா ? சக்கர வாகனத்தினில் செல்லும் ஊனமுற்ற இளைஞருடன் பேசியதுண்டா ? அலுவலகத்தினில் கழிவறையை கழுவும் மனிதனை அனைவரின் முன்னும் பாராட்டியதுண்டா ? … இவ்வளவும் அல்லது இதற்க்கு மேலும் செய்தவர்கள் புண்ணியவான்கள். மனிதம் எவ்வளவு அழகானது என அவர்களுக்கு சொல்லி புரிய வேண்டியது இல்லை. செய்யாதவர்கள் அநேகமாக உலகத்தினை குறை கூறி, உலகத்திற்கு தீங்கு செய்து கொண்டு, பொய், திருடு, பொறாமை, தலைக்கனம், திமிர், அகம்பாவம், சோம்பேறித்தனம், கெட்ட எண்ணங்களுடன் உங்களுக்கு அருகினில் சுற்றி கொண்டு திரிவார்கள். அவர்களிடம் இருந்து நாம் விலகுவது மனிதத்திற்கும், அவர்களுக்கும் செய்யும் பெரிய உதவியாக தான் இருக்கும். அவர்களும் திருந்தும் நாட்களும் வரத்தான் போகின்றது என்பதால் அவர்களை விட்டு விடுவோம். நமக்கு அருகினில் உதவி தேவைப்படும் மனிதர்களுக்கு உதவி செய்ய ஆரம்பிப்போம். செய்வோமா ?
இவ்வளவு யோசிக்க, எழுத, பகிர வைத்த இந்த படத்திலிருக்கும் மனிதருக்கும் அவர் செய்த உதவிக்கும், உதவியை பெற்று என்னை யோசிக்க வைத்த அந்த வயதான பெண்மணிக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.