Slogging Songs : 003
#sloggingsongs : 003
” ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க ”
ஈர்ப்பதில் இருக்கும் ரசனையும் அழகும் வேறு எதிலும் இருக்குமா என்று தெரியவில்லை. காந்தம் தவிர்த்து ஈர்க்கும் உணர்வு இருக்கும் வேறு எதுவும் உண்டா என்று தெரியவில்லை. சில மனிதர்கள் ஈர்க்கிறார்கள். சில பண்புகள் ஈர்க்கின்றன. சில கனவுகள் ஈர்க்கின்றன. சில பெண்மை கள் ஈர்க்கின்றன. ( பெண்கள் அல்ல ! ). சில ஆண்மை ஆளுமைகள் ஈர்க்கின்றன. ஆக ஈர்ப்பது ஒரு சர்வதேச நிகழ்வு. சிலரை பார்த்தவுடன் ஓர் ஈர்ப்பு வருகிறதே .. ஏன் என்று சொல்ல முடியாத இனம் புரியா அந்த ஈர்ப்பிற்கு இணை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஈர்ப்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் !?
நுனி மூக்கு கொஞ்சம் Personal விஷயம். மிகவும் பிடித்தால் நுனி மூக்கை கிள்ளுகிறோம். வருடிக்கொடுக்கிறோம். கவ்விக்கொள்ளுகிறோம். நெற்றிக்கு அடுத்து முத்தம் வழியும் இடமாக மாறிப்போகிறது மூக்கின் நுனி. நுனி நாக்கிற்கும் நுனி மூக்கிற்கும் அப்படி ஒரு பொருத்தம் ! மூக்கின் நுனிக்கு கிரீடம் வைத்தது போல மூக்குத்தியும் சேர .. அழகு அழகாவது இங்கேயும் தான். கூரான மூக்கின் நுனி எப்போதும் மர்மமே. நேர்கோடு சாய்ந்த L ஈர்க்கும் அழகும், குடை மிளகாய் மூக்கின் நுனி ஏற்படுத்தும் குழந்தமையும் … அழகான கவிதைகள் !
” கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன் வில்லா ”
யதார்த்தம் கலந்த புன்னகை வீழ்த்திய அளவிற்கு போர்கள் இன்னும் யாரையும் வீழ்த்தவில்லை. தினசரி மௌனமாக நடக்கும் போர்கள் இவை. ஆணோ பெண்ணோ .. கள்ளத்தனம் இல்லா சிரிப்பு என்பது உதடுகளின் காற்று வாள். கண் எனப்படும் வில்லில் இந்த புன்னகை கோர்க்கப்பட்டு .. மனதின் விசையால் உந்தப்பட்டால் .. தாக்குப்பிடிக்கும் ஆளுமைகள் இந்த உலகத்தில் இல்லை.
” என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும். ”
மிகவும் கவர்ந்த வரிகள் இவை. ” என் வீட்டிற்கு வா என்னை பிடிக்கும் ” என்று சொல்ல தனி தையிரியம் வேண்டும். நம் plus minus எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளும் அழகு அது. Proposal இல் இப்படி சொல்லும் இளம் தலைமுறை இருந்தால் மகிழ்வேன். வீட்டிற்கு தெரியாமல் என்பதில் ஆரம்பமாகிறது அனைத்து குற்ற உணர்வுகளும்.
என்ன பாடல் என்று தெரிகிறதா ?
10000 steps இல் இதுவும் ஒரு பக்கமாக மாறட்டும் – காதுகளுக்கு.
பயணிப்போம் ஒரு Community யாக.





