Jerespectives : 001
#Jerspectives
அப்போதுதான் கவனித்தேன். ஆனால் அதற்குள் அந்த புறா எம் நடை சத்தம் கேட்டதும் பறந்துபோனது. அது முதல் நாள். ஏன் அப்படி பறந்து போனது ? ஏன் என் மேல் அப்படி ஒரு அவநம்பிக்கை அதற்கு ? யோசித்துக்கொண்டே மொட்டை மாடியில் வலம் வந்தேன். அதை காணோம்.
இரண்டாம் நாள். புறா இப்போது பறக்கவில்லை. சில அடிகள் நகர்ந்து நின்று திரும்பி பார்த்தது. பின் ஒரு சிறு பறத்தல் செய்து இன்னும் கொஞ்சம் தள்ளி நின்றது. அருகே நானும் செல்லவில்லை. அருகே அதுவும் வரவில்லை.
மூன்றாம் நாள். புறா நகரவில்லை. அமைதியாய் பார்த்தது. சிறு அடிகளில் எம்மை நோக்கி நெருங்கி வந்தது. நான் அமர்ந்திருந்த இடத்தில் அமைதியாய் அமர்ந்து இருந்தது. இந்த இருபக்க அமைதி அட்டகாசமான உணர்வாய் இருந்தது எமக்கு. நம்பிக்கை பிறக்கும் கணங்கள் அவை. ஆம். இருபக்க அருகாமை அமைதி என்பது நம்பிக்கை கணங்கள். புறாவை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். அதுவும் அவ்வப்போது எம்மை பார்த்துக்கொண்டே இருந்தது.
நான்காம் நாள். அது அருகாமை அமைதி. நான் என் Camera வை கையில் எடுத்தேன். ஒரு சிறு பதட்டம் எனக்குள். ஆனால் அது எவ்வித பதட்டமும் இன்றி அமர்ந்து எதையோ கவனித்து கொண்டு இருந்தது. Lens இல் அதே புறாவை கவனித்தேன். சிறு சலனமே இல்லை. நம்பிக்கை வந்துவிட்டால் சலனத்திற்கு வாய்ப்பே இல்லை போலும்.
புகைப்படம் எடுத்துவிட்டு மனதிற்குள் “நன்றி பறவையே ” என்று சொல்லி கவனித்தேன். அது அப்போதும் அமைதியாகவே இருந்தது. அதற்கு பேச முடிந்திருந்தால் என்ன சொல்லி இருக்கும் என்று யோசித்தேன். அநேகமாய் …
” இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ? ” என்று சிரித்து சொல்லி பறக்க ஆரம்பித்து இருக்கும். ஆம். இதற்கு நான் நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். இந்த lens என் வருமானத்தில் நான் வாங்க முடியாத ஒன்றல்ல. ஆனாலும் காத்திருந்தேன். ஒரு ஆசை. அது அதற்க்கான நேரத்தில் நம்மை அடையட்டும் என்று. இந்த பிறந்த நாள் அன்று அது எனக்கு பரிசாய் வந்திருக்கிறது. எனக்கு பரிசளித்த நட்பும் கேட்ட கேள்வி அதுதான்.
” இதற்குத் தானே ஆசைப்பட்டாய் ? ”
புகைப்படத்தை கவனித்தேன். புறா அங்குலம் அங்குலமாக தன்னை அழகாக கொடுத்து இருந்தது. நம்பிக்கை இருக்கும் இடங்களில் கொடுத்தல் தான் எவ்வளவு இயல்பாக நிகழ்கிறது ?
யோசிப்போம்.