Slogging Songs 012
#SloggingSongs ; 012
” பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூ பூப்பதில்லை ”
என்னவோ இந்த வரி வேண்டாம் என்கிறது மனம். பூ மென்மைக்கான உருவகம் என்பது சரி. பெண் மென்மையானவள் என்று சொல்ல முற்படுவதும் ஒரு பார்வையில் வேண்டுமானால் சரி. ஆனாலும் .. அவள் அதையும் தாண்டியவள். Weaker Sex என்று Dominate செய்ய விரும்புபவர்கள் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று யாரோ எப்போதோ சொன்ன உவமை நிஜமாக வாய்ப்பில்லை ! Language War என்று ஒன்று இருக்கிறது. அதில் .. பெண்களை Emotional ஆக பேசிப்பேசி .. ஹ்ம்ம்.
” உன் புடவை முந்தானை சாய்ந்தத்தில்
இந்த பூமி பூ பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது ”
காதல் சூல் கொள்ளும் தருணங்களில் அனைவரும் கம்பனே. கம்பளே. அந்த உணர்வுகளை வார்த்தைகளாய் கொண்டு வர அவன் எடுக்கும் / அவள் செதுக்கி எடுக்கும் வார்த்தை கற்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கை கோபுரத்தின் பக்கங்கள்.
” நீ அணைக்கின்ற வேளையில்
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும் ”
இதற்கு மேல் வரி உண்டா என்று தெரியவில்லை. உயிர்ப்பூ எப்படி இருக்க கூடும் ? வண்ணம், வாசம் எப்படி இருக்கும் ? பதில் சொல்கிறேன். இந்த உலகிலேயே Personalized பூ உண்டெனில் அது உயிர்ப்பூ மட்டுமே. ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் பூக்கும் அதன் வாசம், வண்ணம் எல்லாம் அவரவர்க்கு மட்டுமே வெளிச்சம். இதை வெளியே சொல்ல யாரும் முயலாததில் இருக்கிறது உயிர்ப்பூ வின் உயிர்.
சில விஷயங்கள் அப்படியே இருப்பதே அழகு. அதை வார்த்தைகளால் எழுத முயற்சிக்க அதன் அழகு கெட்டுப்போகும். உயிர்ப்பூ க்கள் பார்வைக்கு அல்ல. பகிரவும் அல்ல. பின் ? அவை உளம் என்னும் அதிசய ஆற்றின் .. மறைந்து நிற்கும் மௌன வேர்கள். வேர்கள் தங்களின் வியர்த்தலை வெளியே சொல்வதில்லை.
” இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கைகள் கொண்டாடுதோ ”
இரு கைகள் தீண்டா பெண்மை என்றால் உடல் அல்ல. இந்த Cinema க்கள் காட்டும் எந்த விஷயமும் அல்ல. தீண்டா பெண்மையை தீண்டா ஆண்மையை அவள் அவனுக்காகவே / அவன் அவளுக்காகவே வைத்திருக்கிறாள். ன். அவனுக்கு அவளுக்கு மட்டுமே ஆன அதில் .. அவள் அவன் உலகத்தை செய்து கொள்கிறாள். ன். அந்த உலகத்தில் அவர்கள் இருவரும் வாழ்கிறார்கள் – வினவுகள் இன்றி. ஆம். பதிலுக்கு இன்னொரு பதிலாய் மௌனம் சுவாசிக்கும் அதிசய உலகம் அது.
சொல்லாத இடம் குளிரும்போது உடன் வரும் பாடல் இது. கல்லூரி காலத்து கனவுகளின் நிரந்தர காட்சியாய் பலரின் வாழ்வில் உள்ளே ஓடும் இந்த நினைவு நதியில் குளிக்க முடிவது சிலருக்கு மட்டுமே. மற்றவர்கள் ?. நதியை தொலைத்து பிரம்மாண்ட உப்புக் கடலை வாங்கிய பாவ மனிதர்கள்.
என்ன பாடல் என்று முதல் வரியிலேயே தெரியும்.
அங்கே நிற்கிறது இந்த பாடலின் வெற்றி. தலைமுறைகள் தாண்டி.