Slogging Songs 013
சில பாடல்கள் நம்மை கடந்த மகிழ் காலத்திற்கு சட்டென கொண்டு சென்று விடும். அப்படி ஒரு பாடல் இன்று என்னுடன் பயணிக்க … அதை பற்றி பகிர நினைக்கிறேன்.
கடிதத்தின் வார்த்தைகளில்
கண்ணா நான் வாழ்கின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ ?
கடிதத்தின் வார்த்தைகள் – கடைசியாய் கடிதம் எழுதியது எப்போது ? இணைக்கு கடிதம் எழுதியது எப்போது ? மனைவிக்கு ? மாமியார் மாமனார் என்று ஆன பின்பும் மனைவிக்கு ? ஆம். கடிதம் ஒரு அழகான மௌனப் பாலம். கடித வார்த்தைகள் எப்போதுமே ஏன் கடந்த கால அல்லது எதிர்காலம் நோக்கியதாக இருக்கிறது ?
” இப்போதுதான் செடிக்கு நீர் ஊற்றினேன். நனைந்த செடி செழிப்பாக நிற்கிறது. நம் உறவைப்போல ” என்று எழுதுவதில்லை. நேற்று நடந்த வலி அல்லது நாளைய கனவை தாங்கும் கடிதங்கள் – ஒன்று ஏமாற்றத்தையோ அல்லது அதீத மகிழ்வையோ தருகின்றன. யோசிக்க வேண்டிய உளவியல் இது.
பொன்னே உன் கடிதத்தை
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன்
ஜீவன் காயம் படுமல்லோ
Illusion தான் காதலின் அழகு. விரல் பட்டால் ஜீவன் காயம் படாது. பூவாலே கடிதத்தை திறக்க முடியாது. ஆனாலும் அப்படி சொல்லுதல் ஒரு வித illusion. அது கொடுக்கும் உணர்வு அட்டகாசமான ஒன்று.
அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும் போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்
செத்து செத்து பூப்பூக்கிறேன். ” இப்படியே செத்துடலாம் ” … என்கிற வார்த்தையை நீங்கள் இதுவரை மனதார சொல்லவில்லை எனில் … நீங்கள் இன்னும் மன வாழ்க்கையை, மண வாழ்க்கையில் ருசிக்கவில்லை என்றே அர்த்தம்.
கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?
சிணுங்குதல் – ஊடலில் ஒரு பக்கம். சிணுங்குதல் என்பது எல்லோருடனும் நடக்காது. மனம் நிறைந்த தருணங்களில், மனம் கவர் மனிதனிடம்/பெண்மையிடம் மட்டுமே சிணுங்க முடியும்.
காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போது
உறங்க மாட்டாயா?
இருவர் உறங்குதல் யதார்த்தமாய் நடப்பது போன்ற ஒரு அழகு எந்த உறவிலும் இல்லை. தோள் சாய்ந்து உறங்குதலில் யதார்த்தமாய் இருவர் உறங்குதல் தான் உறவின் கிரீட நேரம். அன்பு அதுவாக இடம் மாறிக்கொள்ள, உடல் அமைதியாய் உறங்க ஆரம்பிக்கும் இருள் கணம் அது !
தப்பு செய்ய பார்த்தால்
ஒப்புக் கொள்வாயா?
மேலாடை நீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா ?
முந்தானையில் முடிந்த வெட்கங்கள் என்று ஒரு கோடி கவிதை எழுதலாம் இங்கே. ஆதலால் அமைதியாகிறேன். இந்த உலகின் மிகச் சிறந்த முந்தானை வெட்க கவிதை இன்னும் எழுதப்படவில்லை என்ற நம்பிக்கையில் தான் உலகம் இயங்குகிறது. இரவிலும், பின்னர் பகலிலும்!
இந்த பாடல் பலரின் கனவுப்பாடல். கண்டு பிடிக்க முடிகிறதா ?