மனங்களின் மறுபக்கம் : 011
#ஏன்பெற்றுக்கொள்கிறார்கள் ?
இரவு 02.00 மணி. கதவுக்கு வெளியே அப்படி ஒரு சத்தம். தூக்க நேரத்தில் என்ன சத்தம் என்று வெளியே வந்தால் நான் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் என்னவோ பிரச்சினை. ஒரே சத்தம்.
விஷயம் இதுதான். ஒரு வடக்கு இந்திய குடும்பம். சாவியை உள்ளே வைத்து auto lock செய்துவிட்டார்கள். இது மதியம். இப்போது திரும்பிய பின் தான் சாவியை எடுக்கவில்லை என்று தெரிகிறது. விடுதி உரிமையாளர்க்கு சொல்கிறார்கள். அவர் வந்து கதவை Master Key மூலம் open செய்து கொடுக்கிறார். கதவை open செய்தவுடன் .. உள்ளே வந்த குடும்பத்தின் தலைவர் .. ‘ எங்களை உள்ளே வைத்து பூட்டி விட்டீர்கள் ‘ என்று கத்த ஆரம்பிக்கிறார்.
புரியவில்லையே என்பது போல பார்த்தேன். ” தண்ணியில இருக்கார் சார் ” என்று பதில் வந்தது. அவரை கவனித்தேன். ஆம். அப்படி ஒரு நாற்றம். மனைவி, ஒரு கல்லூரி வயது மகன். 10 அல்லது 12 ஆம் வகுப்பிற்கு பள்ளி செல்லும் வயது மகள்.
மகனை தனியே அழைத்து ” என்ன ஆச்சு ? “. என்று கேட்டேன்.
” மன்னிச்சுக்கங்க சார். நான் அவரை சமாதானப்படுத்தி விடுகிறேன். நீங்க போங்க சார். Sorry சார் ” என்று கிட்டத்தட்ட அழுதார்.
” அப்பா கிட்ட நான் சொல்லிடறேன் uncle ” என்று அந்த மகளும்.
மற்ற அறை ஆட்கள் எல்லாம் வந்து சத்தம் போட … அவர்கள் மிரண்டு போய் நின்றுகொண்டு இருந்தார்கள். ( அதில் சிலரின் பார்வை அந்த மகளின் மேல் ! )
இதற்குள் விடுதி உரிமையாளர் காவல் துறையை அழைக்க பிரச்சினை பெரிதாவதை உணர்ந்தேன். எதுவும் பேச முடியாது அந்த மனைவியும். ஆனால் அந்த தெருவுக்கே கேட்பது போல அந்த கணவனின் சத்தம்.
விடுதி உரிமையாளரிடம் சில விஷயங்களை சொன்னேன். குறிப்பாக பெண்களின் நிலையையும். ” சரி விட்டுடறேன். என்னை வழிப்பறி போல சொல்லவும்தான் எனக்கு அப்படி ஒரு கோபம் ” என்று அமைதியானார்.
கொஞ்ச நேரத்தில் அந்த குடும்பம் அறையை காலி செய்து வெளியே கிளம்பியது. அவ்வளவு தான் அந்த சூழ்நிலைக்கு அவ்வளவு தான் அந்த மனைவி, குழந்தைகளுக்கு நன்மை என்று செய்யமுடிந்தது. ( அடி தடி அளவிற்கு எகிற இருந்த விஷயம் இது ! )
எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.
1. தந்தை என்ற சொல்லிற்கு ” குழந்தைகளுக்கு முன் மாதிரி ” என்ற அர்த்தம் புரியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் ?
2. மகன் மற்றவரிடம் கெஞ்சும்போதும் குடியின் காரணமாக கத்தி கொண்டிருக்கும் தந்தை மறுநாள் என்ன சமாதானம் சொல்வார் ?
3. வருபவர்கள் அனைவரும் பார்க்கும் அந்த பார்வையை அந்தப் பெண் குழந்தை எப்படி சகிக்கும் ?
4. அந்த மனைவிக்கு இது நிச்சயமாக முதல் அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை. ( முகத்தில் இவரோடு இப்படித்தான் என்று தெரிந்தது. எப்படி சகித்து கொள்ள முடிகிறது ? ( #அவனும்அவளும் எழுத தோன்றுகிறது )
5. குடும்பத்துடன் வந்திருக்கும் போது இப்படி குடிக்க எப்படி மனது வருகிறது ?
இன்னும் நிறைய கேள்விகள்.
விலங்குகள் தாய் தந்தை ஆவதற்கும், மனிதர்கள் தாய் தந்தை ஆவதற்கும் நிறைய வித்தியாசம் என்று படித்திருக்கிறேன். ஆனால் .. விலங்குகள் தான் Best என்று மீண்டும் மீண்டும் நிரூபனம் ஆகிறது.
காலையில் அந்தக் கணவனை அந்த மனைவி, மகன், மகள் .. அதேபோல் பார்க்க பழகி இருக்க கூடும். இப்படித்தான் காப்பாற்றப்படுகின்றன – பல குடும்பங்களின் ஆதார இருப்புகள்.