Slogging Songs : 014
#SloggingSongs : 014
” அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது ”
அசையும் குளம் – என்ன ஒரு உவமை ! அசையும் ஏரி. அசையும் மலை. அசையும் கடல். எல்லாமே அழகுதான். வாழ்வின் ஓட்டத்திற்கு பிரச்சினை இல்லாத வரை !. அசைதலில் அலை பாய்தல் யதார்த்தம்.
” நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து ஜோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது ”
ஆடை அற்ற நிலையை நிர்வாணா என்று கொண்டாடும் உலகில், தனி மனித உறவில் வேட்டி சேலை நிலவில் காய்வதை .. உணர்ந்தவர்கள் புரிதலில் பட்டம் பெற்றவர்கள்.
” என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
கானாக்களா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா…. ”
கனாக்கள் என்று ஒரு வாழ்க்கை உண்டு. இங்கேயே இதே உலகத்தில் தான் அவற்றின் வாழ்வும். அநேகமாக தூங்கும்போது உடன் வந்து எழுந்தவுடன் bye சொல்லும் வாழ்க்கை அது. “கனவு மாதிரி இருக்கு ” என்று சொல்வது அங்கே தான் ஆரம்பிக்கிறது. இந்த வார்த்தையை சொல்லி நீங்கள் சிணுங்கி இருந்தால் உறவின் சொர்க்க பரிமாணங்களை உணர்ந்தவர் என்று அர்த்தமாகலாம்.
” உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே
(என்ன கேட்குற சாமிய?
நூறு ஜென்மம் உன் கூட
போதுமா?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய ”
கடவுளாலும் கொடுக்க முடியா வரம் ஒன்று உண்டு எனில் அது சாகா வரம் மட்டுமே. கடவுளிடமே அதை கேட்க ஒரு தையிரியம், ஒரு Pull தேவை. அது உளம் இணைதலில் மட்டுமே கிடைக்கும். ” நான் லாம் ஏன் உயிரோடு இருக்கிறேன் ” என்று சொல்லும் உலகில் சாகா வரம் கேட்க வைக்க நிலவில் காயும் வேட்டி சேலையால் மட்டுமே முடியும்.
” காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும் ”
சில உறவுகளில் இந்த கேள்வி உண்டு. ” போன ஜென்மத்தில் நாம் என்னவா பொறந்து இருப்போம் ? “. இன்னும் கூட ஒரு கேள்வி உண்டு. ” அடுத்த ஜென்மத்தில் நீ என் மனைவியா வரணும். உன்னை கொஞ்சம் கொடுமைப்படுத்தனும் ” என்று சிரிக்கும் கேள்வி அது.
உறவில் இன்னொரு ஜென்மங்கள் எல்லாம் இல்லை என்று தெரிந்தாலும் வேண்டும் என்றே இயற்கையை சீண்டும் செல்ல request அது.
பொதுவாகவே கமலும், ஷ்ரேயா கோஷலும் எம் சிறப்பான choice பல பாடல்களில். ஆனால் இங்கே இணைந்து. நான் விரும்பி பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
மெல்லிய மௌனத்தில் நான் பாடும் பாடல் வேறு யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை. கேட்கவும் வேண்டியதில்லை. Personal பக்கங்களில், ஒவ்வொரு எழுத்தும் இருவரால் மட்டுமே எழுதப்பட வேண்டியவை. படிக்கப்பட வேண்டியவை. ருசிக்கப்படவும் !
Jayasekaran Zen