Slogging Songs : 016
#SloggingSongs
:
சில பாடல்கள் நமக்குள் ஒருவித துள்ளலை ஏற்படுத்தும். யாருமில்லா அறை எனில் ” அட ஆடித்தான் பார்ப்போமே ” என்று சொல்லிக்கொண்டே இருக்கும். வரிகளும் இசையும் கோர்த்துக்கொள்ளும் கைகளில் … விரல்கள் ஆடத் துவங்கி உடலை அங்குலம் அங்குலமாக இழுக்கும். அங்கே துவங்கும் இந்தப் பாடல் அழகான ஒன்று.
” பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு ”
காணாமல் போவது எல்லாம் வெளியே அல்ல. உள்ளே மட்டுமே. ஒன்று நமக்குள்ளே அல்லது நமக்கு பிடித்தவர்களுக்குள்ளே. இந்த தொலைதலில் தேடுதல் முக்கியம் அல்ல. அதேபோல கண்டுபிடித்தலும் முக்கியம் அல்ல. Just காணாமல் போவதும், மனதுக்கு பிடித்தவர் கண்டுபிடித்ததும் .. சிரித்துக்கொண்டே வெளிவருவதும் ..கனா அல்ல. நிஜ வாழ்க்கை !
” மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே ”
மந்திரம் தான் அது. தந்திரமும். ‘தல’க்கு மத்தியில் பம்பரம் போல சுத்துவது வெளி தோற்றத்திற்கு order இல் இல்லா.. ஆட்டமாக தெரியலாம். ஆனால் அவனுக்கு அவளுக்கு மட்டுமே தெரியும் அது தேவதையை தேடும் சுக ஆட்டம். ஆயிரம் சொன்னாலும் .. இந்த மெட்டுக்கு போடும் ஆட்டம் .. மனதிற்குள் ஒரு யதார்த்த மழை. நனைதல் சுகம் மட்டும் அல்ல. சிலிர்ப்பும்.
” உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான் ”
சிறு கண்கள் உறவின் பார்வைக் கடிவாளங்கள். அந்த கண்கள் ஏற்படுத்தும் ” மீண்டும் என்னை பார் ” புரிதல்கள் போல புரிதல்கள் உலகில் உண்டா ? படைத்தவன் ஆயிரம் காரணங்களுடன் கண்களை படைத்திருக்க வேண்டும். ஆனாலும் ஒரே ஒரு காரணம் எல்லாவற்றையும் சாய்க்கிறது. ஆம். ” ஒரே ஒரு பார்வையும், ஓராயிரம் பார்வைக் கவிதைகளும் ” என்று ஒரு குறும் படமே எடுக்கலாம். அவ்வளவு இருக்கிறது கண்களில். மின்சாரம் பாய்ச்சும் இந்த இரு மௌன Transformers ஐ என்ன செய்யலாம் என்று யோசித்தால் .. அவைகளையும் இழுத்துக்கொண்டு ஆட மட்டுமே தோன்றுகிறது !
” பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே ”
பட்டாம்பூச்சி பெண்கள் – என்று உண்டா என்ன ? பூவும் அவளும் ஒன்றா ? கவிதைக்கு அழகாக இவை இருக்கலாம். என்னை பொறுத்தவரை .. உருவகம் பெண்ணை உயர்த்த வேண்டும். வண்ணத்து பூச்சி பெண் ? ஏன் .. வானம் பார்க்கும் பெண்ணாக இருக்கக்கூடாது ?
வானம் பார்க்கும் பொண்ணு
வீரம் விளையும் கண்ணு ..
வாளும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு ..
என்றெல்லாம் எழுத தோன்றுகிறது. பெண் இனம் வைக்கப்பட்டதில் தான் .. மென்மை எல்லாம். அவர்களுக்கான இடம் சரியாக கொடுக்கப்படின் .. மேன்மை தான் நிலைக்கும். மென்மை எல்லாம் சும்மா !
பாடல் இந்நேரம் உள்ளே ஓடிக்கொண்டு இருக்கும். ஒரு மழைக்காலத்தில் இந்த பாட்டுடன் போடும் ஒரு ஆட்டத்தில் … வெளியே நனைவதை மற்றவர்களும், உள்ளே நனைவதை அவள் மட்டும் பார்க்க கூடும். ஆம். சில பாடல்கள் அப்படித்தான். துள்ளல்களின் சொந்தங்கள் அவை !
பாடலை கண்டுபிடிக்க முடிகிறதா ? Repeat இல் ஓடிக்கொண்டே இருக்கிறது என்னுள்.