Jerspectives : 002
#Jerspective
ஆரம்பமும், முடிவும் ;
” ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கிறது. அதே போல முடிவும் இருக்கிறது. ” என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம். அப்படி எல்லாம் இல்லை. இயற்கை அதன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. மனித சிந்தனை தான் – தான் ஓய்வெடுக்க வேண்டியதை கணக்கில் வைத்துக்கொண்டு பகல் / இருள் எல்லாம் ! ஒரு பறவைக்கு பகல் இரவெல்லாம் கிடையாது. ஓய்வு / சுறுசுறுப்பு – அவ்வளவு தான் அவைகளின் பார்வை.
மாலை என்பது சூரியன் மறையும் நேரம் அல்ல.மாலை என்பது .. ஏதோ ஒன்று எங்கோ சுழலுவதால் கிடைக்க வேண்டிய ஒளி கிடைக்காமல் போவது. அப்போது ஓய்வு எடுப்பது என்பதை இயற்கை சொல்ல மனிதன் அதை கேட்டுக்கொண்டான். ள். அதே போல ஏதோ ஒன்று எங்கோ சுழலுவதால் கிடைக்கும் ஒளியில் ஏழு என்று இயற்கை சொல்ல மனிதன் எழுகிறான். ள். இங்கே இயற்கை நடத்தும் ஒரு வாழ்க்கை பாடம் காத்திருக்கிறது நமக்கு. கவனிக்கிறோமா என்று தெரியவில்லை !. அதாவது எங்கோ ஏதோ சுழலுவதால், நமக்கு கிடைக்க வேண்டிய ஒளி கிடைக்கவில்லை எனில் கொஞ்சம் அமைதியாக இருக்கவும், அதே ஒளி கிடைத்த பின் சுறுசுறுப்பாக மாறவும் வேண்டும் என்பதே அந்தப் பாடம் !
ஒருமுறை ஒரு சூரிய அஸ்தமனத்தின் போது மலை உச்சியில் அமர்ந்து இருந்தேன். யாரும் அற்ற ஒரு நேரத்தில், அந்த மலையின் அழகு, ஒளி மறைய மறைய .. அழகற்ற இருளாக மாறியது. ஒளி இருந்தபோது தெரிந்த அதே அழகு இப்போது இருள் சூழ் பயமாக மாறியது. இருள் வர வர பயம் ஏன் நம்மை அப்பி கொள்கிறது? வெளிச்சம் வர வர நம்மை ஏன் தைரியம் அப்பிக்கொள்கிறது ? கொஞ்சம் யோசிக்க வேண்டிய கேள்வி. இருள் – வரும் முன், அப்படியே இருந்த, அழகாய் தெரிந்த மலை உச்சி, இருள் வந்த பின் பயமாக மாறுவது, மீண்டும் வெளிச்சம் வந்த பின் அழகாய் தெரிவது – நமக்குள் வெளிச்சம் என்ற ஒன்று ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கையால். இது ஏன் ? இந்த உலகின் அத்துணை நிகழ்வுகளும் … இருள் மற்றும் வெளிச்சத்தில் நடக்கும்போது … ஏன் இருளை கண்டால் மட்டும் நமக்கு பயம் வருகிறது ? வெளிச்சத்தை கண்டால் மட்டும் நமக்கு ஏன் நம்பிக்கை வருகிறது ? இதற்கு ஏதும் பதில் உண்டா நம்மிடம் ?
இருளில் நாம் அதிகமாக செய்யும் ஓர் செயல் தூக்கம். மற்ற செயல்கள் நிறைய. தூக்கம் நம்மை Switch Off – செய்வதால் இருளை பற்றிய புரிதல் நம்மிடம் இல்லாமலே போய்விடுகிறது. இருளில் விழித்திருக்கும் மனிதனை நாம் மனிதனாகவே பார்ப்பதில்லை. கிட்டத்தட்ட பேயாகவே சொல்கிறோம். அல்லது கவனிக்கிறோம். பகலில் ஏன் பேய்கள் வருவதில்லை ? ஒருமுறை இமயமலையில் இருளில், வான நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு தனியாக படுத்திருந்தேன். காற்றும், பனியும், குளிரும் உள்ளும் புறமும் வாட்டினாலும் .. இருள் அழகாகவே இருந்தது. நட்சத்திரங்கள் தூரத்து வெளிச்சங்களாக மின்னிக்கொண்டு இருந்ததும் இன்னும் அழகு. ஏதோ ஒரு அசைவு, அநேகமாய் ஏதோ ஒரு மிருகமாக இருக்கலாம் .. அருகில் இருந்தது. அப்போதும் அமைதியாகவே இருந்தேன். என்ன நடந்து விடும் … பார்ப்போம் என்று மனம் சொல்லியது. அசைந்த ஒன்று என்னை கடந்தது. அது ஒரு மரத்தின் வெட்டுப்பட்ட கிளை. ஆக .. மிருகம் என்று நான் நினைத்தது பிரமை. வெட்டுப்பட்ட கிளை Reality. பிரமையால் பாதிக்கப்படும் இயற்கை அழகு இருள் மட்டுமே. வெளிச்சம் இதில் Upper Caste ஆக மாறி விடுகிறது.
இருளை புகைப்படம் எடுக்க முடியாது. இருளின் அழகை ஓவியத்தால் சொல்ல முடியாது. இருளின் பக்கங்களை வெளிச்சத்தில் அமர்ந்து பேச முடியாது. இருளை புரிய இருளுக்கு வர வேண்டும். இருளின் முனகல்கள் இருளில் மட்டுமே கேட்கும். வெளிச்சங்கள் இருளை அணைக்க முடியாது. வீழ்த்தவே முடியும். இருளுக்கு மிகப்பெரிய இணை இருள் மட்டுமே. ஒரு வனம் இரவில் இருளை அணைத்துக்கொள்கிறது. வெளிச்சத்தில் இருளை அனுப்பிவிடுகிறது. இரவும் பகலும் வனம் அதுவாகவே இருக்கிறது. ஆக .. ” அதுவாகவே ” இருப்பதுவே வன அழகு. வந்து செல்வதே இருள் மற்றும் வெளிச்சத்தின் அழகு.
இயல்பாய் இருந்துவிட்டு, ஏற்ற இறக்கங்களை வந்து செல்வதாக கவனிக்கும்போது … இயற்கையின் மௌனப்பாடங்கள் நமக்கு புரியலாம். புரியட்டும். ஆக .. ஏற்ற இறக்கங்கள் ஆரம்ப மற்றும் முடிவாக சில காலம் இருந்து விட்டு சென்று விடும். நாம் நாமாக இருப்பதில் இருக்கிறது … நம் ஆரம்பமும் முடிவும் !