Slogging Songs : 018
#SloggingSongs :
இன்று உடன் வந்த பாடல் ..
” ஹே.. யாரோபோல்
நான் என்னைப் பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய் ”
வெளியில் இருந்து நம்மை நாம் பார்க்காமல் இருப்பது தான் மிகப்பெரும் பிரச்சினை. அப்படி பார்க்கவில்லை எனில் .. இயல்பாய் இருப்பது நம்மிடம் இருந்து தொலையும். செயற்கையாக பேசுவோம் சிரிப்போம். நடிப்போம்.
” நானே இல்லாத
ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன் ”
காண்கின்ற எல்லாமுமாக நாம் மாறுவதில் இருக்கிறது நம் வாழ்க்கை. அதன் இயல்பில் நம்மை தொலைத்து அதுவாகவே மாறுவது எல்லோருக்கும் நிகழ்வதில்லை. அப்படி கண்டவர்கள் சொல்வதில்லை. சொல்பவர்கள் கண்டதில்லை.
” இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா.. ”
பூனை உரசல் என்பது நழுவும் மென்மை. வாழ்க்கையும் அப்படியே. நழுவும் வாழ்க்கையை பிடிக்க நினைக்கும்போது ஏமாற்றமே மிஞ்சும். அருகில் witness ஆக இருக்கும்போது அதே வாழ்க்கை அழகாய் மலரும். தீண்ட தூண்டும். ஆனால் வாழ்க்கையை தீண்டாமை நன்று. வெளியே இருந்து உள்ளே வராத கோட்டின் எல்லையில் வாழ முடியும் எனில் .. இரு பக்க வாழ்க்கையும் சரி சமமாகவே தெரியும்.
நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறுக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
வாகாய் வாழ்தல் என்றால் என்ன ? பாகாய் ஆவது ? வாழ்க்கை மிகவும் எளிதுதான். Formalities இல் தான் நாம் நம்மை இழக்கிறோம். குடும்பம், படிப்பு, வேலை, குடும்பம், குழந்தை …என்று ஏகப்பட்ட Formalities. பசிக்கும்போது உண்பதற்கு இவ்வளவு Formalities ஆ ?
தோ…காற்றோடு
வல்லூரு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்
காற்றோடு போகும் வல்லூறு பாதை தேடுவதில்லை. அல்லது அது தேடும் பாதையை announce செய்வதில்லை. மனிதன் மட்டும்தான் செல்லுமிடத்தை announce செய்துகொண்டே இருக்கிறான். ஏதாவது ஒரு தடையத்தை விட்டு செல்ல நினைக்கிறான். புரியா புதிர். நான் இருந்த அடையாளம் சில வருடங்களில் இல்லாமல் போகும் என்று உணர்ந்தால் இந்த வாழ்க்கை வேறு அழகு !
நீரின் ஆழத்தில்
போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்
நீரில் குதித்த பின் சட்டென இந்த உலகம் காணாமல் போகிறதே .. அப்படி வாழ்கிறோமா நாம் ? செல்லும் இடத்தில் நம்மை மூழ்குதலில் தொலைத்துவிட்டு .. வாழும் வாழ்க்கை வரம் !
திமிலேரி காளை மேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில்
கை கோர்த்து
நானும் நடப்பேன்
காளை மேல் தூங்கும் காகம் பூமி பற்றியும் கவலைப்படுவதில்லை. காற்று அடிக்கும் திசை பற்றியும் கவலைப்படுவதில்லை. அதற்கு கவலை எல்லாம் அதன் தூக்கம் பற்றி மட்டுமே.
ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே..
ஆரோ ஆரிராரிரோ..
ஆரோ ஆரிராரிரோ..
அந்த கடைசி ஆரோ ஆரிராரிரோ .. ஒன்று போதும் இந்த பாடலின் சுகம் புரிய.
என்ன பாடல் என்று கண்டுபிடிக்க முடிகிறதா ?