நகரும் புல்வெளி : 041
#நகரும்புல்வெளி
அழகான உலகம் அது.
100இல் 120 இல் பறக்கும் வாகனங்கள் நின்று கவனிப்பதில்லை. நிற்கும் வாகனங்களை / வாகன சாரதிகளை ஒரு micro நொடி பார்வை / சிரிப்பில் கடக்கிறது வேகமாய் பறக்கும் அவ் வாகனங்கள்.
பச்சை போர்வை போர்த்திய மலைத்தொடர். கரு மேகம். முடி பிரிக்கும் மென் காற்று. மறையும் சூரியன். மறையா மேக வெளிச்சம். புள்ளிகளாக மரங்கள். ஆங்கோர் ரயில் தண்டவாளம். ஒரு ஒற்றையடி பாதை. அதில் அமர்ந்து இருக்கும் யாரோ ஒரு சிறு பையன். அவனுக்கு அருகே மேய்ந்து கொண்டிருக்கும் மாடு. பள்ளிக்கு செல்லவில்லையா ? என்று கேட்க தோன்றியது. பள்ளிக்கு செல்லா குழந்தைகளின் வான்வெளி பள்ளிக்கூடம் – மாடு மேய்த்தலே !
இரு சக்கர வாகன ஒட்டி ஒருவர் நிறுத்தி கேட்டார்.
” என்ன இங்கே ? ”
” அழகாக இருக்கிறது. கவனிக்கிறேன் ”
சிரித்து விட்டு நகர்ந்தார். தேடுதலில் மனிதன் இழப்பது இதையும் தான். சாலைக்கு அருகாமை அழகை மறந்து எங்கே செல்கிறான் அவன் ? ஓடிக்கொண்டே இருக்கும் அவனின் வாழ்க்கையில் ஏதோ ஒரு நாள் ” இந்த பக்கம் தானே தினமும் வந்தோம். ஏன் இதை கவனிக்கவில்லை ? ” என்ற கேள்வி எழாமல் இருக்குமா ?.
கரு நீல வண்ணத்தில் ஒரு பறவை பறந்து வந்து ஓர் மரத்தில் அமர்ந்து .. வாகனங்களை கவனித்தது. ஏதோ ஒரு வாகனம் 120 plus இல் வர .. பறவை பறந்து சென்றது. இயந்திரப் பறவையின் வருகையில், காணாமல் போகும் இயற்கை பறவை !
City யில் .. ” தித்திக்கும் உள்ளே Cadbury போலே ” .. ஓடிக்கொண்டு இருந்தது. சில பாடல்கள் என்னுடன் பயணிப்பவை. உள்ளே ஒரு துள்ளலை கொடுப்பவை. ” கை வைத்தாள் மேலே .. Keyboard ஐ போலே ” .. இந்த பாட்டு சராசரியான ஒன்றுதான். ஆனால் .. ஏதோ ஒரு இனம்புரியா துள்ளலை இந்தப் பாட்டு ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. நடையில் அந்த மெல்லிய துள்ளல் சேர்ந்து கொள்ள …அந்த இயற்கையின் பரப்பு எனக்கு Nature Pub ஆக மாற .. DJ வாக அந்தப்பாட்டை ரசித்துக்கொண்டிருந்தேன்.
Cycle இல் சென்ற முதியவர் ஒருவர் நிறுத்தி .. ” ஏதாவது உதவி வேண்டுங்களா ? ” என்றார். இல்லை என்று சிரித்தேன். ” இல்லை இங்கே யாரும் நிறுத்த மாட்டார்கள். அதான் கேட்டேன் “என்று மீண்டும் cycle ஐ மிதித்தார். வேகமாய் செல்லும் வாகனங்களுக்கு நான் ஒரு Passing Dot. ஆனால் இந்தப் பெரியவருக்கு ? நான் ஒரு மனித சாட்சி.
ஆக .. வேகம் நல்லதல்ல. மெதுவாக, இயல்பாக, முடிந்த அளவு .. நகர்தலே .. அழகு. ரசித்தலிலும். பயணத்திலும். வாழ்க்கையிலும் !





