Training Diaries – 002
#Trainingdiaries ; Page 002
” எல்லோரிடமும் நல்லவனாக நடக்க நினைக்கிறேன் முடியவில்லை. நல்ல பெயரே இல்லை. கெட்ட பெயர் தான் ”
சொன்ன அவரை கவனிக்கிறேன். 60 வயதிருக்கலாம்.
” அப்படியா ? ஒரு திருடனிடம் உங்களால் எப்படி நல்ல பெயர் எடுக்க முடியும் ? ” ஒரு காமுகனிடம் உங்களால் எப்படி நல்ல பெயர் எடுக்க முடியும் ? ஒரு பேராசைக்காரனிடம் உங்களால் எப்படி நல்ல பெயர் எடுக்க முடியும் ? ” என்று சிரித்து கேட்டேன்.
அமைதியாக என்னை பார்த்தார். பின் தலையாட்டி விட்டு சொன்னார்.
” இதை நான் யோசிக்கவே இல்லையே ! ”
சில நொடி அமைதிக்கு பின் .. பேசினேன் ..
” எல்லோருக்கும் நல்லவனாக நல்லவளாக ஆக வேண்டும் என்பதை விட கொடுமை எதுவும் இருக்க முடியாது. திருடனிடம் நல்லவனாக நீங்கள் ஆக .. அவன் தரப்பு நியாயங்களை நீங்கள் பேச வேண்டும். அதே போல காமுகனிடமும் அவன் தரப்பு நியாயங்களை நீங்கள் பேச வேண்டும். பேச முடியுமா உங்களால் ? கெட்ட சிந்தனை உடையவர்களிடம் நல்ல பெயர் எடுக்க நினைப்பது போல ஒரு வீண் முயற்சி இந்த உலகில் இருக்க முடியுமா என்ன ? ”
என்னை நிலைத்த கண்களால் பார்த்துக்கொண்டே இருந்தார்.
” அப்போ யாரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் ? ”
என்று கேட்ட அவருக்கு எனக்கு தெரிந்த பதிலை கொடுக்க விரும்பினேன்.
” முதலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று ஏன் உங்களுக்கு தோன்றுகிறது ? வெளி உலகம் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு நிலைத்தன்மை என்று ஒன்று இல்லவே இல்லை. நல்ல பெயர் எடுக்க வேண்டிய ஒரே இடம் உங்களின் மனசாட்சி மட்டுமே. அங்கே சரி என்று சொல்கிறதா .. ? சென்று கொண்டே இருங்கள். வெளி உலகின் பாராட்டும் கிண்டலும் துவேஷமும் எரிச்சலும் … மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் மனசாட்சி உலகம் அப்படி அல்ல ”
எழுந்து வந்து கை கொடுத்தார்.
” Free ஆக உணர்கிறேன். நன்றி “





