Training Diaries 005
” ஏன் முகத்திற்கு பின் பேசுகிறார்கள் மனிதர்கள் ? ”
கேட்ட அந்த பெண்மணியை கவனித்தேன். நடுத்தர வயது. சிரித்த முகம். நேர் கொண்ட பார்வை. சில விஷயங்கள் புரிந்தது எனக்கு.
” கடைசி 10 வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ? ”
” குடும்ப பெண்மணி முதலில். ஏதோ ஒரு கணத்தில் எனக்கென்று ஒரு பொருளாதார வாழ்க்கை சுதந்திரம் வேண்டும் என்பதால், எனக்கு விருப்பமான, நியாயமான, சமூகத்திற்கு பயனுள்ள விஷயங்களை செய்ய ஆரம்பித்தேன். ஆனால் .. Character ஐ முதலில் குடும்ப உறுப்பினர்களும் பின்பு நெருங்கி பழகியவர்களுமாக பொது வெளியில் எனக்கு பின் பேசுகிறார்கள். மிக வலித்தாலும் எதிர்கொள்கிறேன். ஏன் இப்படி பேசுகிறார்கள் எது பேச வைக்கிறது என்பதே என் கேள்வி ? ” சிரித்த வண்ணமே சொன்னார். வலியை உண்மையாகவே எதிர்கொண்டிருக்க வேண்டும் !.
நான் பதில் சொல்ல ஆரம்பித்தேன்.
” மூன்று காரணங்கள் உண்டு.
1. நீங்கள் வளர்கிறீர்கள்
2. அவர்கள் வளரவில்லை
3. நீங்கள் வளரும் காரணங்கள் தெரியவில்லை
1. பொதுவாக நாம் வளரும்போது இப்படிப்பட்ட ” புறப் பேச்சுகள் ” கூடவே வரும். வெற்றியில் அவையும் ஒரு பகுதி தான். இந்த மாதிரி புறம் பேசும் மனிதர்கள் … இன்றும் Celebrities களின் இன்னொரு பக்கத்தையோ அல்லது இன்னொரு வாழ்க்கையையோ பேசிக்கொண்டு தானே இருக்கிறார்கள் ?! இன்னொருவர் வளர்ந்தால், அதுவும் பிரமிக்கும் அளவிற்க்கு வளர்ந்தால், இவர்கள் உடனே செய்ய நினைக்கும் காரியம் ” Character Assasination “. இது ஒருவித மனவியாதி தான் ! இன்னொருவரை தவறு என்று சொல்வதால் இவர்கள் சரி என்று ஆவதாக – இவர்களே நம்பக்கூடிய சுய முரண் மனநிலை இது.
இதைப்பற்றி கவலையே வேண்டியது இல்லை. யாரோ மழை என்று சொல்வதால் வீட்டில் மழை பெய்யாது. யாரோ ” இடி ” என்று சொல்வதால் வீட்டில் இடி இடிக்காது. ( அப்படி யாரோ எதுவோ சொல்லி வீட்டில் இடித்தால் அது வீடே அல்ல ! ). ஆக .. தேவை என்பது விலகி சிரித்து கடக்கும் மனோபாவம் மட்டுமே !
2.
தன் இலக்கை நோக்கி வளர்பவர்களுக்கு மற்றவர்களை பற்றி பேசுவெல்லாம் நேரம் இருக்காது. ஆக .. வளராதவர்கள், வளர முடியாதவர்கள் பேசும் பேச்சு தான் புறம் பேசுதல். ஒரு வளர்பவனை இன்னொரு வளர்பவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். வளர்பவரை வளர்பவரே காமுறுவர் !
3. இது ஒரு வித்தியாச மனநிலை. எப்படி வளர்கிறார்கள் என்று தெரியாததால் எதையாவது பேச நினைக்கும் மனம் – தவறான Assumptions இல் சிக்கிக்கொள்ளும். குழப்பமான மனநிலை இது. நேரடியாக கேட்கவும் முடியாமல், பின்புறமாகவும் முழுவதுமாக பேச முடியாமல் … ஐயோ பாவம் … என்று எனக்கு தோன்றும் ! நேர் கொண்ட பார்வை யும் நினைத்ததை பேசும் மனமும் பெற்றவன் பெற்றவள் – 17 ஆம் பேறு பெற்றவள் ! ”
அவர் அமைதியாக கவனித்துக்கொண்டு இருந்தார். பின் சொன்னார்.
” புறம் பேசுபவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று புரிகிறது. அப்படி எதிர்கொள்ளும் போது உள்ளே என்ன சொல்லிக்கொள்ள வேண்டும் நான் ? ”
நான் உபயோகிக்கும் பலவற்றில் ஒன்றை சொன்னேன்
” இயற்கை உன்னை வளர வைக்கட்டும். நீ அமைதியாக அது மட்டுமே வழி.
என்னை அமைதியாக வைத்திருக்கும் இயற்கைக்கு நன்றி ”
Selfi எடுக்கும்போது சொன்னார் .. ” இதற்கு முன் இயல்பாய் இருந்தேன். ஆனால் அதில் சலனம் இருந்தது. இப்போது சலனம் அற்று இயல்பாக இருக்கிறேன். நன்றி ஜெய் ”
சிரித்து அவரின் பின்னூட்டத்தை அங்கீகரித்தேன். உள்ளே சலனம் அற்று !





