மனங்களின் மறுபக்கம் : 014
அந்த மழைக்கால காலை வேளையில் ஒரு பீடி ஏற்படுத்திய சூடும் புகையுமாக அவர் அமர்ந்திருந்தார். “எங்கோ பார்வை” என்று இருந்த அவரின் வெறுமை presence எம்மை ஈர்த்தது. அந்த மனிதருக்கு ஏதோ ஒன்றை செய்ய ஆழ்மனதில் குரல் ஒன்று ஒலிக்க .. மெதுவாக அவரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
” ஒரு புகைப்படம் எடுக்கிறேன் ” என்று சைகை செய்ய, கொஞ்சம் அதிர்ந்து, பின் ஒப்புக்கொண்டு, பீடியை கீழே வைக்க அவர் தயாராக ..
” பீடி அப்படியே இருக்கட்டும் ” என்று சைகை செய்தேன்.
முதல் புகைப்படம். இரண்டாம் புகைப்படம். மூன்றாம் புகைப்படம் .. எனக்கு மனதில் சரியாக வந்தது. சரி என்று வந்ததும் .. அவரிடம் அந்த புகைப்படத்தினை காண்பித்தேன். ( இது எம் பழக்கம் ! எடுக்கும் புகைப்படத்தினை எடுப்பவரிடமே காண்பிப்பது)
பார்த்தவுடன் அவரின் முகத்தில் ஒரு சந்தோஷ அதிர்ச்சி. சிரித்தார். ஆம். முதன் முறையாக அந்த இறுக்கம் வெளியேறி, அவரின் இயல்பான முகம் வெளியே வந்தது. தனது தாடியை காண்பித்து . ..
” நன்றாக இருக்கிறது ” என்று சைகை செய்தார். சிரித்து நகர்ந்தேன். இதே நேரத்தில் அவரின் கையில் இருந்த இன்னும் பாதி இருந்த பீடியை அவர் எறிந்திருந்தார். ஆம். தேவையான மகிழ்ச்சி வந்துவிடின் …மனிதர்களின் தேவை அற்ற பழக்கங்கள் சில நொடிகளுக்காவவது வெளியேறும். அல்லது மொத்தமாக வெளியேறிவிடும்.
💐💐💐
நாங்கள் நடக்க ஆரம்பித்து வாகனத்தில் அமர்ந்த போது … நட்பு என்னிடம் கேட்ட கேள்வியை ஞாபகப்படுத்தினேன்.
” நீங்கள் “தீரா உலா ” வினை முன்னின்று செய்வதில் உங்களுக்கு பண நோக்கம் இல்லாது எப்படி இருக்க முடியும் ? ” என்ற அவரின் கேள்வியை ஞாபகப்படுத்தி… பதிலை இங்கே சொன்னேன்.
” இந்த ” யாரோ மனிதர் ” இப்போது சிரித்தாரே .. அதற்கு பின் பண நோக்கம் ஏதாவது இருக்க முடியுமா ? ”
நட்பு புரிந்துகொண்டு சிரித்தது. புரிதலை கொடுப்பதை போன்ற ஒரு சிரிப்பை வேறு எதுவும் இந்த உலகில் கொடுப்பது இல்லை.
அதே சமயம் மனித மனதிற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. ஆம். மனித மனம் அப்படித்தான். அதற்கு மறுபக்கம் உண்டு. சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கும். MR ராதா சொன்ன வாசகம் தான் எம் ஞாபகத்தில் அப்போது.
” நல்லதை செய்ய முயற்சிக்கிறவன் சில பேர் தாண்டா .. அவனையும் சந்தேகப்பட்டு / கேள்வி கேட்டே கொன்னுடுங்கடா. உங்களை திருத்தவே முடியாதுடா ” என்று சொல்லும் அந்த வசனம் இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் எவ்வளவு அழகாக நம்மில் சிலருக்கு பொருந்துகிறது.?
மனித மனம் சந்தேகத்திற்கு ஏன் அடைக்கலம் கொடுக்கிறது ? விடை மிக எளிது. நம்பகத்தன்மை குறைந்த உலகில் சந்தேகம் தானே மிஞ்சும் ?
முகத்தில் சிரிப்பை ஏற்படுத்துவதற்கு பின்
.. ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று இந்த உலகம் சந்தேகப்படும் வரை இந்த உலகின் மனிதர்கள் சிரிப்பை தேடிக்கொண்டே தான் இருக்க வேண்டும். சந்தேகம் இருக்கும் இடங்களில் சிரிப்பு வாழ்வதில்லை. அப்படியும் வாழ்ந்தால் அதற்கு பெயர் சிரிப்பு இல்லை.சிரிப்பு போர்வை போர்த்திய வன்மம் !
இந்த சந்தேகக் கேள்விகள் என்னுள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. எம் இயல்பு இன்னொருவரின் முகத்தில் தெளிவு நிறை மகிழ்வை ஏற்படுத்துவது மட்டுமே. ஒவ்வொருவரின் வளர்ப்பு முறைக்கு தகுந்தவாறு .. இந்த மகிழ்வை பொருளாதார சந்தேகத்தில் / உறவு சந்தேகத்தில் / சமமின்மை சந்தேகத்தில் பார்க்கலாம். அது அவர்கள் வாங்கி வந்த வரம்.
எம் மனம் வாங்கிய வரம் வேறு. இயற்கை கொடுத்த அந்த உற்சாக வரத்தில் … பிறர் முகத்தில் மகிழ் உணர்வை பார்த்து கடப்பது மட்டுமே எம் மன வரம். அது உங்களுக்கும் கிடைக்க எம் முன் வாழ்த்துக்கள். கிடைக்கவில்லை எனில் ? அதற்கும் வாழ்த்துக்கள். சந்தேகத்துடனே வாழ்ந்து மடியவும் தனி தையிரியம் வேண்டும் இல்லையா.?
அடுத்த ” தீரா உலா ” நிகழ்வுகளை நோக்கி பெரும் திட்டமிடல் நடந்துகொண்டிருக்கிறது. மீண்டும் பல வகை மனிதர்களை நான் சந்திக்க கூடும். அதிலும் சில சந்தேக மனிதர்கள் வரக்கூடும். ஆனால் ஒன்று நிச்சயம்.
ஒருமுறை ” முகத்தில் சிரிப்பை ஏற்படுத்துவதை ” சந்தேகிக்கும் மனிதர்கள் எம்முடன் மீண்டும் பயணிக்க வாய்ப்பில்லை. எம் பார்வையில் அவர்களின் மறுபக்க மனங்களிடம் நான் சொல்ல விரும்புவது ..
” ஒரு நல்ல நட்பினை இழக்கிறீர்கள் ”
பயணிப்போம். ஒரு குடும்பமாக. சிரித்த, நம்பிக்கையான முகத்துடன் !