நான் எனப்படும் நான் : 016
#நான்எனப்படும்நான் ;
” கடக்கறது தான வாழ்க்கை ” ;
எவ்வளவு மனிதர்கள் !
எவ்வளவு சந்திப்புகள் !
எவ்வளவு பேச்சுகள் !
எவ்வளவு பாராட்டுகள் !
எவ்வளவு இழப்புகள் !
எவ்வளவு முகமூடிகள் !
எவ்வளவு துரோகங்கள் !
எவ்வளவு மகிழ் நிலை !
எவ்வளவு எதிர்பாராதவைகள் !
அனைத்தையும் கடக்க தெரிவதால் சிரிக்க முடிகிறது. ஆம். ஒருவரால் அகத்தில் இருந்து சிரிக்க முடிந்தால் அவர் மேற்சொன்னவைகளை கடக்க பழகி விட்டார்/ள் என்று அர்த்தம். அகச் சிரிப்பு அவ்வளவு வலிமையானது !
” நீங்களே எம் குரு ” என்று வரிசையாக சொன்ன மனிதர்களில் பலரை காணவில்லை. ஆனால் .. எப்போதும்போல பேசும் மனிதர்கள் இன்னும் உடன் பயணிக்கிறார்கள். தன்னிடம் மாற்றம் வரும்போது, ஒரு பயிற்சியாளருக்கு கிடைக்கும் அந்த வரி தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்த போதிலும், நான் அதை விரும்புவதில்லை. தன்னை உணர்ந்தால் ஏது ” குரு ” என்கிற நிலை ? மரியாதை என்பது மனதில் கூட வேண்டியது இல்லை. கற்றதை செயல்படுத்துவதில் தான் இருக்கிறது என்ற எண்ணம் எனக்குள் உண்டு.
இயல்பாக வாழ்தல் என்று ஒன்று உண்டு. ” இதுதான் நான் ” என்பது மனித குலத்திற்கு செய்யும் பெரும் சேவை. முகமூடி அணிதலால் நம்பகத்தன்மையை விதைக்கிறோம். முகமூடியற்று இருப்பதால் நம்பகத்தன்மை வளர்கிறது. ஆக .. இயல்பே நிலைக்கும். இயல்பு தாண்டிய எதுவும் மறையும்.
கடந்து செல்லல் ஒரு அழகான வார்த்தை. கடத்தல் என்பது முன்னேற்றத்தை குறிக்கிறது. முன்னேறும் ஒருவனால் மட்டுமே கடக்க முடியும். மற்றவர்கள் ” அங்கேயே ” இருப்பார்கள். வாழ்க்கையின் அழகான பக்கங்களில் ஒன்று கடத்தல்.
கடக்கிறேன். சிரிக்கிறேன். பகிர்கிறேன்.
அவ்வளவே எம் வாழ்க்கை.