நான் எனப்படும் நான் : 018
#நான்எனப்படும்நான் :
வாழ்க்கை அழகாய் தன்னை அவிழ்த்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அவிழ்தலிலும் ஆச்சர்யம். அப்படித்தான் ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு சந்திப்பும்.
என்ன நடக்கும் என்று தெரியாமல் வைத்திருப்பதே வாழ்க்கையின் தனித்தன்மை. சட்டென திருப்பங்கள். சட்டென முடிச்சுகள். சட்டென தானாகவே பிரியும் முடிச்சுகள். சந்திப்புகள். பிரிவுகள். சிரிக்க வைக்கும் கணங்கள். யோசிக்க வைக்கும் கணங்கள்.
” சார் .. உங்களை தினமும் பார்க்கிறேன். காலையில் ஒரு மணி நேரம் உடலுக்கு செலவழிகிறீர்கள். வியர்த்து வழிந்து வருகிறீர்கள். அப்போதெல்லாம் எனக்கு ” நாம் இன்று உடற்பயிற்சி செய்யவில்லை ” என்று குற்ற உணர்வாக இருக்கும். ஆகவே ஆரம்பித்து விட்டேன். நன்றி சார் ”
யார் இவர் ~? எதற்காக எனக்கு இதை சொல்கிறார் ? இவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு ? யோசித்தால் வாழ்க்கை என்னுடன் பேசுவதாக தோன்றுகிறது.
” செய்வதை நிறுத்தாதே. யாரோ ஒருவருக்கு நீ செய்வது inspiring ஆக இருக்கிறது ” என்று வாழ்க்கை ஆளை வைத்து சொல்வது போல இருக்கிறது. எங்கே இருக்கிறது வாழ்க்கை என்று கேட்பவர்களுக்கு .. ஒரே ஒரு வரி
” நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் வாழ்க்கை ” !
ஆம். வாழ்க்கை நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் வழியாகவே நம்மிடம் பேசுகிறது. ஓவ்வொரு நிகழ்வும் வாழ்க்கை நம்முடன் பேச முயற்சிக்கும் முயற்சி. சிறு குழந்தை பேச்சு போல அது வித்தியாசமான ஒன்றாக இருந்தாலும் … ” சூரியன் எப்படி சரியாக தினசரி அதன் வேலையை செய்கிறது ? ” என்று கேட்கும் குழந்தையை போல .. வாழ்க்கை ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டே இருக்கிறது – நிகழ்வுகளின் வழியாக !
கவனித்தால் வாழலாம். ஒவ்வொரு நிகழ்வும் ஓர் அவிழ்தல். ஓர் முடிச்சு. அங்கே தான் இருக்கிறது வாழ்வின் சூட்சுமம்.
கவனிப்போம்.