நான் எனப்படும் நான் : 21
#நான்எனப்படும்நான் ; 21
பயணங்களில் நான் முழுமையாக, நிறைவாக, அமைதியாக, ஆத்மார்த்தமாக, இயற்கையுடன் இயைந்து … வாழ்கிறேன்.
நகரங்களில் ? .. just வாழ்கிறேன்.
இருப்பு ஓரிடத்தில் நில்லாமல், இயக்கத்திலேயே இருப்பதில் ஆரம்பிக்கிறது பயணங்கள். இருப்பின் இயக்க மாற்றமே பயணம். அதே வீடு, அதே அலுவலகம், அதே கால அட்டவணை, அதே சூழ்நிலைகள் … மனிதனை monotonous ஆக மாற்ற, மனிதனும் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் உள்ள இயந்திரமாக மாற்றமடைகிறான். மனிதநிடம் மாற்றம் நடைபெறவில்லை எனில், அவன் ஓர் உயிர் உள்ள இயந்திரம் !
பயணத்தில் முதலில் மாறுவது அவனின் அவளின் பார்வைகள். சட்டென இன்னொரு உலகம் அவன் அவள் கண்ணில் தெரிவதில் அவள் சுத்தமாக மாறிப்போகிறான்.ள். மைதான மாற்றம் விளையாட்டு வீரருக்கு அழகும் தீனியும். பார்வைகளை போல அடுத்து பயணத்தில் மாறுவது மனிதர்கள். புதிய மனிதர்களின் வரவு அவனை வியப்பில் ஆழ்த்துகிறது. அவர்களின் சுக துக்கங்களை பயணம் அவனுக்கு பாடமாக கொடுக்க ” நாம் ஒன்றும் பெரியதாக சாதிக்கவில்லை ” என்று மனதிற்குள் அவன் சொல்லிக்கொண்டே பயணிக்கிறான்.
உணவு பயணத்தில் வேறு நிலையை அடைகிறது. தான் நினைத்தபடி மனிதனுக்கு உணவு கிடைப்பது – என்பது தான் அவனின் தேடலை முடக்குகிறது. பசியை போல, நினைத்த நேரத்தில் உணவு கிடைக்கா சூழ்நிலை போல தேடலை அதிகப்படுத்தும் காரணி இவ்வுலகில் எதுவும் இல்லை ! உணவின் மாற்றம் அவனின் அவளின் அக மாற்றம்.
சூழ்நிலை மாற்றங்கள் தான் பயணத்தின் உயிர் நாடி. சட்டென மாறும் சூழ்நிலையில் பயணம் அவனை அவளை சோதிக்க முயற்சிக்கிறது. ஒரு பாதை இழப்பு, ஒரு மழை, ஒரு வனம், ஒரு புயல், ஒரு நிலச்சரிவு, ஒரு விபத்து, ஒரு அருவி, ஒரு மலை, ஒரு நதி, ஒரு மிருக வரவு, ஒரு இழப்பு … என்ன இல்லை இந்த சூழ்நிலை மாற்ற காட்சிகளில் ! ? புடம் போட்ட தங்கம் போல இதில் மாறிப்போகும் மனிதன் நிலையாமையை அழகாக உணர்கிறான். ள். சூழ்நிலை மாற்றங்கள் தான் பயணத்தின் முதுநிலை படிப்பு. அவற்றை எதிர்கொள்ள எதிர்கொள்ள மனிதனுக்கு வாழ்க்கை வசப்படுகிறது.
நகர வாழ்க்கை இதெல்லாவற்றையும் ஒரு full stop போட்டு நிறுத்திவிடுகிறது. அங்கே சட்டென நிற்கும் மனிதன் வெளியில் மனித உருவில் இருந்தாலும், உள்ளே தொலைந்து போகிறான். உள்ளே தொலைந்த மனிதர்கள் உயிர் உள்ள இயந்திரமாக திரியும் இடத்தின் பெயரே நகரம் ! அநேகமாக மனிதன் நகரத்தில் தன் பெயரை “நரகன்” என்று மாற்றிவிடலாம் !
பயணங்களில் நான் முழுமையாக, நிறைவாக, அமைதியாக, ஆத்மார்த்தமாக, இயற்கையுடன் இயைந்து … வாழ்கிறேன்.
நகரங்களில் ? .. just வாழ்கிறேன்.