நான் எனப்படும் நான் : 22
#நான்எனப்படும்நான் ;
புத்தகங்கள் தான் என்னை உருவாக்கிய தாய் ! நான் பேசும்போது, புத்தகங்கள் எனக்கு பின்னே மௌனமாக சிரிக்கின்றன. நான் அமைதியாக கவனிக்கும்போது எப்போதோ படித்த புத்தகத்தின் பக்கம் ஒன்று ” கவனித்தல் என்பது மிகச்சிறந்த பேச்சு ” என்று காதிற்குள் முனகுகிறது. புத்தகங்களில் நான் படித்த Characters என்னுள் அசைந்து கொண்டே இருக்கிறது – தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்ரமாதித்தன் போல !
ஒரு புத்தகம் படித்தால் ஒரு சாக்லெட் என்று அப்பா சொன்னதில் ஆரம்பித்த இந்தப்பழக்கம் இன்றும் தொடர்கிறது – ஆனால் சாக்லேட் நிறுத்தப்பட்டு – புத்தகமே சாக்லெட்டாக மாற்றமடைந்து ! புத்தகங்களை படித்து முடித்தபின் உள்நாக்கில் எச்சில் ஊறுவது அதனால் தான் போல !
இன்னும் ஞாபகம் இருக்கிறது. அந்த புத்தகம் என்னுள் ஏற்படுத்திய மின்னல் அதிர்வலைகள் ! ஆம். ” How to Win Friends and Influence People ” என்று எனக்குள் பேசிய அந்தப் புத்தக பக்கங்கள் இன்னும் பேசிக்கொண்டே இருக்கின்றன. இதை எனக்கு பரிசாக அளித்த மனிதர்க்கு இப்போதும் நன்றி சொல்கிறேன். ஒரு புத்தக படிப்பினை ஆரம்பிக்க நினைப்பவருக்கு இந்த புத்தகம் அருமையான ஒன்று. அதன் ஆரம்பம் நம்மை அசைக்கும். முடிவு நம்மை செதுக்கி உருவாக்கி இருக்கும் !
கள்ளக்குறிச்சி பொது நூலகம் தான் எனது முதல் சுற்றலா களம். அந்த நூலகத்திற்கு எதிரே அப்போது ஒரு குளம் இருக்கும். ( பின் அந்த குளம் மூடப்பட்டு அதன் மேல் இப்போது காய்கறி market இருக்கிறது ! ) நூலகத்தில் படித்துவிட்டு அந்த குளத்தில் அமர்ந்து இருந்ததெல்லாம் இன்னும் நினைவில். அப்போது படித்த காந்தி யின் எழுத்துக்கள் இன்னும் ஆழமான நினைவில். ” எம் வாழ்க்கையே நான் சொல்லும் செய்தி ! ” என்ற குரல் கடக்காமல் புத்தகம் படிப்பவர்கள் இருந்திருக்க முடியுமா ?
MS உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ என்னை அறைந்தது இன்னும் ஞாபகத்தில் ! அப்போது மனதிற்குள் விழுந்த பல அறைகள் எம் எண்ணங்களை செதுக்கிய வேகம் யாரும் யோசிக்க முடியாதது ! இள வயதில் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் அது.
ஆனந்த விகடன் என்னை செதுக்கிய வேகம் வேறு நிலை. ( இப்போது ஆ.வி அப்படி இல்லையோ என்று எனக்கு ஒரு பார்வை உண்டு ! ) பல மனிதர்களின் கருத்துகளாக ஆ.வி – என்னை அசை போட்டுக்கொண்டே இருக்க வைத்திருக்கிறது. சாமான்ய மனிதத்தின் பார்வையை எனக்குள் விதைத்த புத்தகம் அது !
இன்று என்னிடம் ” எப்படி உங்களால் இப்படி பேச முடிகிறது ” என்று கேட்கப்படும் கேள்விக்கு மௌனமாய் நான் சிரிக்கும்போது … புத்தகங்கள் பின்னால் இருந்து சிரிப்பது எனக்கு மட்டுமே கேட்கும். குழந்தைகளுக்கு புத்தகங்களை படிக்க கற்றுக்கொடுத்து விட்டால் – தாய் தந்தை இறப்பிற்க்கு பின், அந்த இடத்தை வெற்றிடம் இல்லாமல் சில புத்தகங்கள் பார்த்துக்கொள்ளும்.
என் உயிர் பிரியும் முன் நான் ஏற்படுத்தவிருக்கும் நூலகம் தான் புத்தகங்களுக்கு நான் செய்யும் நன்றி. அந்த நூலகத்தில் அமர்ந்து படித்துக்கொண்டு இருக்கும் யாரோ ஓது ஏழை மாணவன் தான் என்னுடைய முதல் குழந்தை !