நான் எனப்படும் நான் : 23
#நான்எனப்படும்நான் ;
பொதுவாகவே, நான் என் உலகம் என்று ஒன்றை வைத்துக்கொள்வதில்லை. வெளிப்படையாக இருப்பதையே விரும்புகிறேன். “இங்கே தான் இருக்கிறேன்” என்று சொல்லவே, அறிவிக்கவே நினைக்கிறேன். இதுவே என் வீடு, இதுவே என் வாழ்க்கை, இவர்களே என் நட்புக்கள் என்றெல்லாம் சொல்லவே விரும்புகிறேன். சொல்கிறேன். ஆனால் …
உலகத்திற்கு இரு கண்கள் காதுகள் இல்லை. ஒரு வாய் இல்லை. உலகம் பல கண்களை காதுகளை வாயை கொண்டு அசைகிறது. அசைக்கிறது. ஒன்று சொன்னால் அதற்கு இத்தனை அர்த்தம் உண்டு என்று உருவகப்படுத்தி ஏளனமாக சிரிக்கிறது. அத்தனையும் கவனித்து நான் கொஞ்சம் அதிர்ந்து ஆனால் இயல்புக்கு உடனே திரும்பிய நொடிகளை நினைத்து பார்த்து சிரிக்கிறேன். உலக கற்பனை தான் இந்த உலகின் பெரும் கற்பனை. பெரும் முனகல். பெரும் Gossip.
ஒரு உதாரணத்திற்கு … ‘ ஊருக்கு போய்விட்டு வந்தேன் ” என்றால் … உலகம் உடனே யாருடன் ? என்று கேள்வி கேட்கிறது. ஏன் யாருடன் ? தனியாக ஒரு பயணம் இருக்கமுடியாதா ? ஏன் இப்படி ஒரு பார்வை உலகத்திற்கு வருகிறது ? பதில் எளிது. உலகத்திற்கு வேறு எந்த வேலையும் இல்லை. சமீபத்தில் சந்தித்த ஒரு Successful Excellence இடம் ஒரு கேள்வி கேட்டேன்.
” கடைசியாக எப்போது படம் பார்த்தீர்கள் ? ”
” வருடங்கள் ஆகிவிட்டது ஜெய். என் நேரம் என் கனவிற்கே சரியாக இருக்கிறது ”
உலகத்திற்கு கனவுகள் என்று ஏதும் இல்லை என்பதால் நிறைய நேரம் கிடைக்கிறது. போவோர் வருவோரின் வாழ்க்கை பற்றி எல்லாம் அலசிக்கொண்டே இருக்கிறது. யதார்த்தம் அற்ற வாழ்வியலில் புரிதல் வர வாய்ப்பில்லை என்பதால் உலகம் பார்க்கும் யதார்த்தம் அற்ற பார்வையை நான் பொருட்படுத்துவதில்லை.
” நீ எங்கே இருந்தாய் ? யாருடன் இருந்தாய் ? எதற்காக அங்கே இருந்தாய் ? யாரெல்லாம் உடன் இருந்தார்கள் ? யாருக்கெல்லாம் என்ன சொன்னாய் ? நீ அணிந்திருக்கும் உடை உன்னுடையதா ? நீ சிரித்த சிரிப்பு ஏன் அதிகமாகி இருக்கிறது ? ஏன் குறைந்திருக்கிறது ? முன்பை விட மெலிதாகி இருக்கிறாயா ? எடை கூடி இருக்கிறாயா ? காலையில் சாப்பிடும்போது பக்கத்தில் இருந்தது யார் ? ஏன் பக்கத்தில் ? நீ தனியாகத்தானே சாப்பிடுவாய் ? அறையில் மூன்று தலையணை பார்த்தேன். ஏன் ? ஏன் வாசலில் நான்கு செருப்புகள் இருந்தன ?
இது புது ஆடையா ? யார் கொடுத்தது ? எப்போது கொடுத்தது ? ஏன் கருப்பு வண்ணமே உடுத்துகிறாய் ? அது யாருக்கு பிடிக்கும் ? ”
எவ்வளவு Micro Scanning கேள்விகள் ? மனிதர்களுக்கு முதல் பிரச்சினையே மற்றவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முயற்சிப்பதே ! இரண்டாம் பிரச்சினை ? கூடுமானவரை அனைத்தையும் தவறாகவே புரிந்துகொள்வது ! 😊😊😊. மூன்றாம் பிரச்சினை ? அவை அனைத்தும் உண்மை என்று நம்புவது. நான்காவது ? அதற்கான evidence ஐ தேடிக்கொண்டு இருப்பது ! ஐந்தாவது ? … அட வேண்டாம் …இங்கே இருந்து விலகுகிறேன்.
சமீபத்தில் நட்பு வட்டத்தில் சிலரை block செய்தேன். ( நிறைய செய்கிறேன் ).எண்ணங்களில் தெளிவில்லாமல் என்னுடன் பயணிக்க வேண்டியதில்லை என்பதே message. போகாத வழியில், இல்லாத குளத்தில், வாழாத நீல வண்ண மீனை … தேடிக்கொண்டு இருப்பவர்கள் அவர்கள் ! முடிந்தவரை அங்கே வழியில்லை என்று சொன்னாலும், குளத்தை, நீல வண்ண மீன்களை தேடும் அறிவை என்னவென்று சொல்வது ? அதோடு இல்லாமல் அதை கேள்வி வேறு கேட்டு பதில் எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்வது ?
என்னிடம் பல நேரங்களில் பல விதங்களில் கேட்கப்பட்ட … இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. பலமுறை ஒற்றை வரியில் பதில் சொல்லி இருக்கிறேன். சொல்லி சிரிக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். இது அநேகமாய் உங்களில் சிலருக்கும் பொருந்தலாம்.
” நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் இல்ல ! ” 😊😊😊