Slogging Songs : 23
#SloggingSongs ;
சில பாடல்கள் நம்மை வருடிக்கொண்டே இருக்கும். அவற்றின் இசையும் அப்படியே. பொதுவாகவே இசை குறைந்து, வார்த்தைகளின் ஒலி அதிகமாகும் அழகு தான் பாடலில் அட்டகாசம் ! கூடவே புல்லாங்குழல் பயணிக்க, வாழும் வாழ்க்கையே வேறு விதம் என்று சொல்ல வைக்கிறது.
” மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும் ”
உரையாடல்கள் மனப்பாடமாய் நிகழவில்லை எனில் அது என்ன உரையாடல் ! என்ன பேசினோம் என்று அப்படியே நினைவில் Frozen ஆக வேண்டும். ஆம். அப்படி ஒரு வரி இருந்தாலும் போதும் – வாழ்க்கைக்கு ! பொதுவாக அப்படி ஒரு வரியாக ” ரொம்ப பிடிக்கும் “தான் இருக்கிறது. பிடிக்கும் க்கு அடுத்த நிலையை இன்னும் நம்மால் விவரிக்க முடியவில்லை என்பதே உண்மை. பெருவெளியில் மௌனமாய் இணைவது இதுதான் போல !
” விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே ”
கண்ணில் கடல் சேர்ப்பதில் அப்படி என்ன ஒரு சௌகரியம் ? ரொம்ப பிடிக்கும் மின் இன்னொரு வடிவம் கண்ணில் நீர் சேர்ப்பது போல ! என்னை பொறுத்தவரை கண்ணில் நீர் வந்தால் அது மகிழ் நீராக மட்டுமே இருக்கவேண்டும். இல்லை எனில் மகிழ் நீர் வரும்வரை நீர் சேர்த்து காத்திருக்க வேண்டும் !
” மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே ”
அன்பு க்கு அருகாமை தூரம் எல்லாம் கிடையாது. அன்பு ஒரு infinite uncondition இல் வாழும் மௌன உயிர் ! பக்கத்தில் இருந்தால் மகிழ்வேன் என்பது உடல் மொழி. தூர இருந்தாலும் மகிழ்வேன் என்பது ஆன்ம மொழி. ஆனால் அன்புக்கு ஒரே ஒரு மொழி தான். எப்படி இருந்தாலும் சரி – என்று முன்னேறுவது மட்டுமே !
” விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள் ”
பிரியாத போர்வை நொடிகள் அட்டகாசமானவை. இருளும் மூச்சுமாய் அவை வாழ்கின்றன. மடிவதே இல்லை. முடிவதும் இல்லை. தீரா தாகத்திற்கு இவ்வுலகின் நீர் போதாது !
” மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ ”
எல்லாமும் நீயாக வைத்து நகரும்போது வகுக்கப்படும் எல்லைக்குள் அன்பு முடக்கப்பட்டு தன் சுயத்தை இழக்கிறது. எல்லாமும் நீ என்றால் ஏன் எல்லை ? கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எங்கு வேண்டுமானாலும் செல் – இங்கிருந்தே நான் உடன் இருப்பேன் என்று சொல்லும் காதல் இருக்கிறதா உங்களிடம் ? அப்படி எனில் .. இந்தப்பாடலை நீங்கள் தேசிய கீதமாக்க மாற்றிக்கொள்ளலாம் !
பாடல் கேட்கிறதா ?
உங்களை போல நானும் காத்திருக்கிறேன் இந்தப் பாடலின் காட்சி அமைப்பினை காண – அன்பு என்கிற ஒற்றை உறவுடன் !